டெல்லியை உலுக்கிய விபத்தில் புதிய திருப்பம்- பலியான பெண்ணுடன் வந்த தோழியிடம் போலீசார் தீவிர விசாரணை

ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார்.

பணி முடிந்து அஞ்சலி ஸ்கூட்டியில் புறப்படும்போது அந்த தோழி ஸ்கூட்டியின் பின் இருக்கையில் ஏறுவது சி.சி.டி.வி. காட்சிகளில் தெரிய வந்தது.

டெல்லி, அமன்விகார் பகுதியை சேர்ந்த ரேகாவின் மூத்த மகள் அஞ்சலி. 23 வயதாகும் இவர் தந்தை இல்லாததால் தனது தாய் மற்றும் தன்னுடன் பிறந்த 4 சகோதரிகள், 2 சகோதரர்களை தனி நபராக இருந்து காப்பாற்றி வந்தார்.

இவரது தாய் ரேகா உடல் நல பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த சிகிச்சைக்காக கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் நேற்று முன்தினம் அவர் டெல்லி சுல்தான்புரி பகுதிக்கு பணிக்கு சென்றிருந்தார்.

பணி முடிந்து அதிகாலை 3 மணிக்கு அவர் தனது ஸ்கூட்டியில் திரும்பி வந்தபோது கார் மோதியது.

இதில் முன்பக்க சக்கரத்துக்கு இடையே அவரது கால்கள் சிக்கி கொண்டதால் 13 கி.மீ. தூரத்துக்கு சாலையில் அவர் இழுத்துச்செல்லப்பட்டு பலியானார்.

டெல்லியில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காவல் துறையை கண்டித்து ஆளும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிருஷ்ணன், மிதுன், மனோஜ் ஆகிய 5 வாலிபர்கள் கைது செய்யபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கைதான 5 வாலிபர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதை உறுதிபடுத்துவதற்காக 5 வாலிபர்களின் ரத்தம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் தீபக், அமித் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் லோகேஷ் என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் அசுதோஷ் என்பவருக்கு அந்த காரை விற்பனை செய்து உள்ளார்.

அவரிடம் இருந்து அமித் அந்த காரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வாங்கி வந்ததாக தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்படுத்தியபோது ஸ்கூட்டியில் இருந்த பெண் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்துள்ளனர்.

ஆனால் காருக்கு அடியில் பெண் சிக்கி இருப்பதாக சிலர் கூச்சலிட்டதும் காரை நிறுத்தி பார்த்ததாக 5 வாலிபர்களும் தெரிவித்து உள்ளனர்.

கார் முழுவதும் ரத்த கரையாக இருந்ததால் அங்கேயே காரை நிறுத்திவிட்டு தப்பியதாகவும் கூறி உள்ளனர்.

அவர்களை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே 13 கி.மீ. தூரம் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அஞ்சலி பணி முடிந்து தனியாக வரவில்லை.

அவருடன் அவரது தோழி ஒருவரும் வந்தார் என்பது நேற்று இரவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அஞ்சலி ஸ்கூட்டியை ஓட்ட அவர் தோழி பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

கார் மோதியபோது ஸ்கூட்டி நிலைதடுமாறிய நிலையில் அஞ்சலி சாலையில் விழுந்துள்ளார். இதனால் அவர் மீது கார் ஏறி இறங்கி உள்ளது.

அதே சமயத்தில் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார்.

தன் கண் எதிரே தோழி பலியானதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியபடியே தப்பி ஓடிவிட்டார்.

நேற்று இரவு சி.சி.டி.வி. காட்சிகளை டெல்லி போலீசார் துல்லியமாக ஆய்வு செய்தபோது இது தெரிய வந்தது.

பணி முடிந்து அஞ்சலி ஸ்கூட்டியில் புறப்படும்போது அந்த தோழி ஸ்கூட்டியின் பின் இருக்கையில் ஏறுவது சி.சி.டி.வி. காட்சிகளில் தெரிய வந்தது.

அதிகாலை 2.30 மணிக்கு அவர்கள் வேகமாக ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகளும் கிடைத்துள்ளது.

அஞ்சலியின் தோழியை நேற்று மாலை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் காரில் வந்தவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டே வந்ததாகவும், அவர்களது கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.

அஞ்சலி தோழியிடம் டெல்லி போலீசார் இன்று கூடுதல் வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்ய உள்ளனர்.

இது இந்த வழக்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினார்கள்.

விபத்துக்கு காரணமான காரில் இருந்த 5 பேருக்கும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக இன்று டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.

 

Share.
Leave A Reply