இன்றுவரை தீர்ந்திடாத வெற்றிகளும், இன்னும் இன்னும் எனத் தொடும் உச்சங்களும் சொல்லிடும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மேல் ரசிகர்களுக்கு இருக்கும் காதலை! இன்று அவரின் பிறந்த நாள். ஆஸ்கர் தமிழன் குறித்த சில பர்சனல் நோட்ஸ் இதோ…

இசையில் துல்லியமும், புதுமையும் கொண்டு தமிழ் உள்ளங்களைக் கவர்ந்ததில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனத் தனி ஓர் இடம் உண்டு. தமிழ் இசையை உலக அரங்குகள் எங்கும் நிறைத்தவர்.

இன்றுவரை தீர்ந்திடாத வெற்றிகளும், இன்னும் இன்னும் எனத் தொடும் உச்சங்களும் சொல்லிடும் அவரின் இசை மேல் ரசிகர்களுக்கு இருக்கும் காதலை! இன்று அவரின் பிறந்த நாள். ஆஸ்கர் தமிழன் குறித்த சில பர்சனல் நோட்ஸ் இதோ…

* ரஹ்மான் பேசுகிற ஆங்கிலத்தைப் பார்த்துவிட்டு அவர் பட்டப்படிப்பு படித்தவர் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக நம் இசைப்புயல் படித்தது ஒன்பதாவது வகுப்பு வரைக்கும்தான். அதற்குப் பிறகு அவர் படித்ததெல்லாம் இசைதான்.

* தனது பிறந்தநாளை ரஹ்மான் கொண்டாடுவதே இல்லை. அதற்குப் பதிலாகத் தொழுகை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு விசிட், உணவு தானம் செய்வது எனத் தொடர்ந்து வலம் வருவார்.

* எந்த நாட்டுக்குப் போனாலும் உணவு வகைகளில் ஆர்வம் காட்ட மாட்டார். எங்கே போனாலும் ரசம் சாதம் மட்டுமே விருப்ப உணவு.

* நகைகளில் துளியும் ஆர்வம் கிடையாது. கையில் கடிகாரம் அணியும் பழக்கம் கூட கிடையாது. எப்போதாவது மனைவி சாய்ரா வலியுறுத்தினால் சின்ன பிளாட்டினம் மோதிரம் அணிவார். அவ்வளவுதான்.

* இசைக்கு அடுத்தபடியாக ரஹ்மானின் காதல் வீடியோ கேம்ஸின் மீதுதான். வகை வகையான கேம்ஸ் அவருக்குத் தெரியும். அவருடைய விளையாட்டுத் தோழர்கள் மகள்கள் கதீஜா, ரஹிமா, மகன் அமீன்.

* இதுவரை ஹஜ் யாத்திரைக்கு அம்மாவோடு இரண்டு முறை போய் வந்திருக்கிறார். தாயாரின் மறைவுக்குப் பிறகு இந்த முறை தனியாகச் சென்று வரத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த ஆண்டு கண்டிப்பாகப் பயணம் உண்டாம்.

* தன் தந்தையார் சேகர் படத்தை வணங்கிவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வார். இறைவனிடம் காட்டும் பக்திக்கு நிகராக தன் தாயிடம் அன்பு காட்டுவார். தாயார் மறைவுக்குப் பிறகு அந்த அன்பு இன்னும் கூடிவிட்டது.

* பென்குவின் பதிப்பகம் ரஹ்மானின் சரிதையை வெளியிட்டது. ஆனால் அதைத் தன்னுடைய சரியான சரிதையாக அது இல்லை என ரஹ்மான் மறுத்துவிட்டார். அதனால் இப்போது தன் சுயசரிதையைத் தானே எழுதி வெளியிடத் தீர்மானித்து விட்டார்.

* யாரை அறிமுகப்படுத்தினாலும் அவர்களிடம் மிகவும் குறைவாகத்தான் பேசுவார். நண்பர்களோடு மட்டும்தான் சத்தம் போட்டுச் சிரித்துப் பேசுவார்.

* பொழுதுபோக்கு என கிளப்களில் எங்கேயும் ரஹ்மானைப் பார்க்க முடியாது. மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை. ஓய்வு என்றால் அது மனைவி குழந்தைகளோடு மட்டும்தான்.

Share.
Leave A Reply