ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதைப் போன்று இலங்கையின் 75 வது சுதந்திரதினம் அளவில் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதாக இருந்தால் அதற்கு இன்னும் 25 நாட்கள் அவகாசமே இருக்கிறது.
விக்கிரமசிங்க கடந்தமாதம் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டிய பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ் கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களாக அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது.
முதலாவது,அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் வனங்கள், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றின் உத்தரவின் பேரில் நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்துதல் ;
இரண்டாவது, அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துதல் ;
மூன்றாவது, அரசியலமைப்பு சீர்திருத்தத்துடன் சம்பந்தப்பட்டது.புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி கட்டமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பரவலாக்குதல்.
இந்த அணுகுமுறைகளில் இறுதியானது நீண்டகால நோக்கிலானது.முன்னைய இரண்டும் குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுபவை.
பாராளுமன்ற கட்சிகளின் மகாநாடு நடைபெற்று ஒரு மாதம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்றன.ஆனால், அந்த அணுகுமுறைகள் தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக இல்லை.
அடுத்த சுற்று மகாநாடு குறித்து முதலில் திகதி குறிப்பிடப்படவில்லை.ஆனால், ஜனவரி 10 முதல் தொடர்ச்சியாக பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
மகாநாட்டுக்கு புறம்பாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுடன் இடைக்கிடை தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார்.இறுதிச் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் வசமிருக்கும் தனியார் காணிகளை விடுவித்தல் போன்ற உடனடியாகக் கவனிக்கக்கூடிய விவகாரங்கள் தொடர்பில் தங்களுடனான சந்திப்புகளின்போது காணப்பட்ட இணக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த நகர்வையும் காணமுடியவில்லை என்ற விசனத்தை சம்பந்தன் அரசாங்க தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது இயலாத காரியம் என்பதையும் அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
சுதந்திர தினம் அளவில் தீர்வைக் கண்டுவிடும் உறுதிப்பாட்டைக் கொண்ட ஜனாதிபதியினால் குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படக்கூடியவை என்று எதிர்பார்க்கப்படும் விவகாரங்களில் கூட உடனடியாக சிறிய முன்னேற்றத்தையேனும் ஏற்படுத்தமுடியாமல் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
மிகுந்த அரசியல் அனுபவமும் அறிவும் சாதுரியமும் கொண்ட தலைவர் என்று கூறப்படும் விக்கிரமசிங்க மிகவும் குறுகிய வாரங்களுக்குள் சிக்கலான இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிடமுடியும் என்று தன்னை ஏன் தான் ஒரு ‘பொருந்தாத்தன்மைக்கு’ ஆளாக்கினாரோ தெரியவில்லை.
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சிகள் எதிர்த்து அவற்றை சீர்குலைத்ததே வரலாறு.
ஆனால், இத்தடவை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னெடுக்கும் புதிய முயற்சிகளுக்கு எதிரணி கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை.
ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)வையும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு தேசியவாத அரசியல்வாதிகளின் கட்சிகளையும் தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கடந்த மாதம் மகாநாட்டில் பங்கேற்று ஒத்துழைப்பை வழங்க முன்வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பிக்குமார் உட்பட சிங்கள பௌத்த அமைப்புக்கள் பலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதில் முன்னிற்பது வழமை.
ஆனால், அந்த அமைப்புக்கள் இலங்கை வரலாறு காணாத தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னரைப் போன்று சிங்கள மக்கள் மத்தியில் தங்களது பிரசாரங்களை முன்னெடுக்கமுடியாமல் இருக்கின்றன.
மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவை பதுங்கிவிட்டன.
ஆனால், அந்த அமைப்புக்கள் வெளியில் வந்து சமூகங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் நச்சுப் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தங்களுக்கு தகுந்த தருணத்துக்காக காத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
தங்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் ஆசான்களான ராஜபக்சாக்களுக்கு நேர்ந்த கதியை சகித்துக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன.
கடந்த சில நாட்களாக எல்லே குணவன்ச தேரர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் சிங்கள பௌத்த கடும்போக்கு சக்திகள் மீண்டும் தலைகாட்டத் தயாராகின்றன என்பதற்கான அறிகுறிகள்.
ஆனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு அந்த சக்திகளிடம் இருந்து வெளிப்படையான கடும் எதிர்ப்பு இதுவரை வரவில்லை.
அவர்களை தீவிரமாக முன்னரங்கத்துக்கு கொண்டுவருவதற்கு அரசியல் சக்திகளின் தூண்டுதல் தேவை.விமல் வீரவன்ச,கம்மன்பில போன்றவர்கள் அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
அரசியல் தீர்வுக்கான தற்போதைய முயற்சிகளில் ஒரு விசித்திரத்தன்மை இருக்கிறது. பெரும்பான்மையினவாத அரசியலை தீவிரமாக முன்னெடுத்து சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் குரோத உணர்வுகள் கடுமையாக வளர்வதற்கு அண்மைக்காலத்தில் காரணமாக இருந்த ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு விக்கிரமசிங்க இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறார் என்பதே அது.
அதேவேளை,இன்று பிரதமராக இருக்கும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சரான விஜேதாச ராஜபக்சவும் சிறுபான்மைச் சமூகங்களைத் திருப்திப்படுத்தக்கூடிய எந்தவொரு உருப்படியான அரசியல் தீர்வையும் ஆதரிக்கக்கூடிய சக்திகளுடன் தங்களை ஒருபோதும் அடையாளப்படுத்திக்கொள்ளாத சிங்கள தேசியவாதிகள்.
இப்போது இருவரும் தமிழ்க் கட்சிகளுடனான விக்கிரமசிங்கவின் சந்திப்புகளின்போது அவருடன் கூட இருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு அவர்கள் தரக்கூடிய ஒத்துழைப்புக்கு ஒரு எல்லை இருக்கிறது அல்லது அவர்களுடன் முரண்படாத ஒரு எல்லைவரை பயணிப்பதற்கு ஜனாதிபதி எண்ணங்கொண்டிருக்கக்கூடும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை விக்கிரமசிங்க மனதிற்கொண்டிருக்கும் எல்லை எது என்பது தெரியாத நிலையில் இது விடயத்தில் நிச்சயமாக எதுவும் கூறமுடியாது.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த புதன்கிழமை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அவரின் வாசஸ்தலம் தேடிச்சென்று நடத்திய சந்திப்பு செய்திகளில் முக்கிய இடத்தைப்பிடித்தது.
இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம் முதுமை காரணமாக உடல் தளர்வுற்றிருக்கும் மூத்த தமிழ்த் தலைவரின் உடல் நலனை விசாரிப்பதற்கானதாகவே இருந்திருக்கவேண்டும்.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகிறேன் என்று சொல்வதற்கு மகிந்த,சம்பந்தனை வலியத் தேடி சென்றிருப்பார் என்றா எதிர்பார்க்கமுடியும்?
ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் வைத்திருப்பதைப் போன்ற நெருக்கமான நல்லுறவை சம்பந்தன் மகிந்தவுடனும் நீண்டகாலமாகப் பேணிவருகிறார்.
இன்று இருக்கக்கூடிய ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற மதிப்பை அவர்கள் அவர் மீது வைத்திருக்கிறார்கள் எனலாம்.அவருக்கு மகிந்த பொன்னாடை போர்த்திக் கௌரவித்து சுமார் 40 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று சம்பந்தன் விடு்த்த வேண்டுகோளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளின்போது ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகவும் அரசியல் தீர்வுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து உரிய நிலைப்பாட்டை எடுப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகள் கூறின.
அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராயாமல் உடனடியாகவே பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளிப்பது கடினம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த பதிலின் அர்த்தம் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் காணப்படக்கூடிய தீர்வின் தன்மையைப் பொறுத்தே ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் ஆதரவு அமையும் என்பதேயாகும்.
முன்னதாக பட்ஜெட் விவாதத்தின்போது ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டப்போவதாக செய்த அறிவிப்பு குறித்து அப்போது கருத்து வெளியிட்ட மகிந்த எந்த தீர்வையும் நிறைவேற்ற தங்களது பாராளுமன்ற ஆதரவு தேவை, அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றே கூறினார்.
ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டில் கலந்துகொண்ட போதிலும் அவர் உரையாற்றவில்லை.
மகிந்தவைப் பொறுத்தவரை ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இனப்பிரச்சினை குறித்து அவர் பெரிதாக பேசியதில்லை.
2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அந்த காலப்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தியே பிரசாரங்களை முன்னெடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவரது முதலாவது பதவிக்காலத்தில் போரை முழுவீச்சில் முன்னெடுத்து விடுதலை புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்த பிறகு அவர் போர் வெற்றியின் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு கிடைத்த பேராதரவை பெரும்பான்மையினவாத அரசியலை முன்னெடுத்து தங்கள் குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தினாரே தவிர, மூன்று தசாப்தகால போருக்கு காரணமான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
போரின் முடிவுக்குப் பின்னர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர். டி சில்வா தலைமையில் தானே நியமித்த ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கூட மகிந்த முன்வரவில்லை.
அதற்கு வெகு முன்னதாக 2006 ஆம் ஆண்டில் அவர் கூட்டிய சர்வகட்சி மகாநாடு தேசியப்பிரச்சினைத் தீர்வுக்கான விரிவான அணுகுமுறை உட்பட அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளை வரைவதற்கு பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவொன்றை நியமித்தது. அந்த குழு தன்னிடம் கையளித்த அறிக்கையையும் மகிந்த வெளியிடவில்லை.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியமில்லை என்பதே மகிந்த அரசாங்கத்தின் அரசாங்கத்தின் பிரகடனப்படுத்தப்படாத நிலைப்பாடாக இருந்தது.
அரசியல் தீர்வொனறைக் கண்டு இனங்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு வரலாறு அவருக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது.
ஆனால்,அந்த வாய்ப்பை வேண்டுமென்றே தவறவிட்ட அவர் பெரும்பான்மையினவாத அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதன் மூலமாக நீண்டகாலத்துக்கு தனது குடும்பத்தை ஆட்சியதிகாரத்தில் வைத்திருக்கலாம் என்று கனவு கண்டார்.
ஆட்சிமுறையின் தவறான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்துபவர்களாக ராஜபக்சாக்கள் விளங்கினார்கள்.இறுதியில் அவர்களுக்கு நேர்ந்த கதியை நாடும் உலகமும் கடந்த வருடம் கண்டது.
இச்சந்தர்ப்பத்தில் மகிந்த ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவிப்பிரமாண உரையின் (19/11 2010) இறுதியில் குறிப்பிட்ட இரு விடயத்தை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
” தற்போது வகிப்பதை விடவும் உயர்ந்த பதவி எனக்கு எதுவுமில்லை.ஓய்வுபெற்று மெடமுலானவில் உள்ள வீட்டில் வாழ்வின் பிற்பகுதியைக் கழித்துக்கொண்டிருக்கும் காலத்தில் என்னைச் சந்திக்க வருபவர்கள் நாட்டுக்கான உங்கள் கடமையைச் செய்துவிட்டீர்கள் என்று கூறக்கேட்பதே எனது வாழ்நாளின் பெரிய திருப்தியாக இருக்கும்.”
ஆனால், இன்னமும் கூட அதுவும் கடந்த வருட சந்திக்க நேர்ந்த அபகீர்த்திக்குப் பின்னரும் அரசியலில் இருந்து மகிந்த ஓய்வுபெறத் தயாரில்லை.அவ்வாறு ஓய்வுபெற்றாலும் கூட ‘ நாட்டுக்கான உங்கள் கடமைமையை செய்துவிட்டீர்கள் ‘ என்று கூற எத்தனை பேர் மெடமுலானவுக்கு போவார்களோ தெரியாது.
ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு மகிந்தவும் அவரது கட்சியும் ஒத்துழைத்து குறைந்த பட்சம் 13 வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தென்னிலங்கையில் கருத்தொருமிப்பை உறுதிசெய்ய உதவினால் அதுவே பெரிய புண்ணியமாக இருக்கும்.இந்த வாய்ப்பையாவது அவர் பயன்படுத்துவாரா?