16 வயது சிறுமியை போலீஸ்காரர் உட்பட 4 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த அண்டக்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி.

இவரது மகள் மேகலா (வயது 16) (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). மயில்சாமி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

மேகலா பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்தார்.

பெற்றோர் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதனால் மேகலா வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கீரனூர் கோவில் விழாக்குடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், துரைராஜ் ஆகிய 2 இளைஞர்கள் அந்த சிறுமிக்கு வலை விரித்தனர்.

பின்னர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

இந்தக் கொடுமை பல மாதமாக தொடர்ந்து வந்தது. இதனை புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் மோப்பம் பிடித்துள்ளார்.

பின்னர் அவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக கீரனூர் பறவயல் பகுதியைச் சேர்ந்த கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் என்பவரும் மேகலாவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் 4 பேரின் தொடர் பாலியல் தொல்லையால் உடல் தளர்ந்த அந்த சிறுமி மறுப்பு தெரிவித்தார்.

இருந்தபோதிலும் விடாமல் மிரட்டி 4 பேரும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.

உடனடியாக அவரது தந்தை மகளை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓடினார்.

அங்கு டாக்டர் பரிசோதனை செய்து விட்டு மேகலா 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதைக் கேட்டு மயில்சாமிக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. பின்னர் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து மகளிடம் கேட்டபோது, மேற்கண்ட ரஞ்சித், துரைராஜ், ஆனந்த், போலீஸ்காரர் வடிவேல் ஆகிய நான்கு பேரும் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளித்து தன்னைக் கெடுத்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

அதிர்ச்சி அடைந்த மயில்சாமி இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் நேற்று இரவோடு இரவாக கைது செய்தனர்.

அவர்களை இன்று புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமியை போலீஸ்காரர் உட்பட 4 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Share.
Leave A Reply