திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு தலையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகுபாறை பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஜனவரி 6-ம் தேதியன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதியிலுள்ள பெரிய மிளகுப்பாறை பகுதியின் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், அந்தப் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகவும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாயொட்டி, அந்தப் பகுதிப் பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மாநகராட்சியின் 54-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் புஷ்பராஜ் சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், குடங்களை வழங்குவதில் பொறுமையாகச் செயல்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு திடீரென கவுன்சிலர் புஷ்பராஜை தலையில் ஓங்கி அடித்தார். கவுன்சிலர் புஷ்பராஜை அமைச்சர் கே.என்.நேரு அடிப்பது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.