“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்ற தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சேது சமுத்திர திட்டம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. 150 ஆண்டுக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 12) கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாக் நீரினையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆதாம் பாலத்தின் குறுக்கே வெட்டப்படவேண்டிய கால்வாய்க்குத்தான், `சேது சமுத்திர திட்டம்’ என்று பெயர்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டத்தின் பொருளாதாரம் பல மடங்கு பெருகும், ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. காமராஜர், அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த காலத்தில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.
2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தது. தி.மு.க-வின் டி.ஆர்.பாலு மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 2005-ம் ஆண்டு, ஜூன் மாதம் ரூ.2,427 கோடி செலவில் சேது சமுத்திர திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழாவில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ஐ.மு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், ‘ஆதாம் பாலம் என்பது ராமர் பாலம். அதை உடைத்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவிட மாட்டோம்’ என்று பா.ஜ.க-வினர் பிரச்னையைக் கிளப்பினர். அப்போதே சேது சமுத்திர திட்டப்பணிகள்
டி.ஆர்.பாலு
‘பாதை மாறாப் பயணம்’ என்ற டி.ஆர்.பாலுவின் சுயசரிதை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றபோது, சேது சமுத்திர திட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின், “சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு முன்னெடுத்தார். அதை, பா.ஜ.க-தான் தடுத்து நிறுத்தியது. சேது சமுத்திரப் பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இப்போது சொல்லியிருக்கிறார்.
இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த வேண்டும் என்று கருணாநிதி முனைந்தார். அந்த முயற்சியில் மத்திய அரசும் இணைந்தது. அதற்குக் காரணம் டி.ஆர்.பாலுதான்.
ஆனால், இந்தத் திட்டம் தடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் எத்தனையோ பயன்களை தமிழ்நாடு அடைந்திருக்கும்.
தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகியிருக்கும். கடல்சார் வணிகம் மேம்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மெருகேறியிருக்கும்.
சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து தடுத்துவிட்டன. இதை மீண்டும் டி.ஆர்.பாலு கையிலெடுக்க வேண்டும்.
இது அண்ணாவின், கருணாநிதியின் கனவுத் திட்டம். எனவே, இந்தத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுவுக்கு இருக்கிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 12) தமிழ்நாடு சட்டமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘150 ஆண்டுக்காலக் கனவுத்திட்டம் இது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அன்றைய பிரதமர் வாஜ்பாய் அனுமதியளித்தார்.
அப்போதுதான் சேது சமுத்திர திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதிசெய்யப்பட்டது. பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க இடம்பெற்றது.
அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, 2005-ம் ஆண்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது’ என்றார்.
மேலும், ‘எந்தக் காரணத்தைக் கூறி இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதை நிராகரிக்கும் வகையில், ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரிக் கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதப்படும்.
இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது.
எனவே, தாமதமின்றி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும்’ என்றார் ஸ்டாலின்.
நயினார் நாகேந்திரன்
திட்டப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதே அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும்தான்.
ஆனால், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு, அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியமானது.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க-வின் சட்டமன்றக் குழுவின் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘ராமேஸ்வரம் என்பது நீரோட்டம் அதிகமுள்ள பகுதி.
அதனால், அங்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. எனவே, ராமர் பாலத்தை எதுவும் செய்யாமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம்’ என்றார்.
அ.தி.மு.க சார்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு நீண்டகாலம் பலன் தரும்.
முதல்வரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களைப் பேசி வலுசேர்க்க வேண்டும். கடந்தகாலங்களில் பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள். அதைப் பேசுவதற்கு இது நேரமல்ல’ என்றார்.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, `ராமர் பாலத்தைத் தொடாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம்’ என்றுதான் நயினார் நகேந்திரன் சொல்லியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க-வின் தலைமை இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்
மேலும், சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சேது கால்வாயை புராதன சின்னம் என அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வலுவுக்கு கை விரைந்து விசாரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார். அப்போது, மத்திய அரசின் நிலை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை சுப்பிரமணியன் சுவாமி அணுகினார்.
பிரதமர் மோடி
அப்போது, ‘கடந்த எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதில், மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை’ என்று சுவாமி கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹேமாகோலி அமர்வு, அடுத்த வழக்கு விசாரணையின்போது பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க அரசு கையிலெடுத்திருக்கும் நிலையில், சட்டத்தின் மூலமாக அதற்கு முட்டுக்கட்டை போட சுவாமி முயல்வார்.
மத்திய அரசு நினைத்தால்தான், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில், மத்திய பா.ஜ.க அரசு இதற்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!