அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆனால், அவரது யாழ்ப்பாணப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் போலீசார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.
யாழ்ப்பாணம் நிகழ்வில் பேசிய ரணில், அனைத்து இன மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து, அனைவரும் ஒன்றாக வாழும் நாடொன்றை கட்டியெழுப்பும் சமூக நியதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும், பொருளாதார செழிப்பை ஏற்படுத்தும் நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில், 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தும் இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்வரும் பிப்ரவரி 8ம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் வாரம் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலும், உண்மையை கண்டறியும் வகையிலும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக, புதிய சட்டமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
வடகிற்கு எதிராகவே இந்த சட்டம் கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் ஸ்திர தன்மையை ஏற்படுத்துவதற்காகவே இதனை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அரசியல், காணி உரிமை பிரச்சனைகள்…
”13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த நான் எதிர்பார்க்கின்றேன். தென் பகுதியிலுள்ள முதலமைச்சர்களும் இதனை கோருகின்றார்கள்.
அதனால், இது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி, அதனை அமல்படுத்த எதிர்பார்க்கின்றேன். இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் படிப்படியாக அமுல்படுத்துவோம்.
முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்னைகள் உள்ளன.
இந்த பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சமூக நியதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன்.
இந்த பிரச்னைகளை கலந்துரையாடி, இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவோம் என கூறிக் கொள்கின்றேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
காணி பிரச்னைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், யுத்தக் காலத்தில் தமது பாதுகாப்பு தேவைகளுக்காக 30000 ஏக்கருக்கு மேல் நிலங்களை ராணுவம் தம்வசப்படுத்தியிருந்தது என குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், தற்போது 3000 ஏக்கர் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு எஞ்சியுள்ள பகுதிகளில் ஒரு தொகுதியை மீள வழங்க ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை மீள வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கு மாத்திரமே பிரச்னை கிடையாது என அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், குறிப்பாக மலையக மக்களின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இரண்டாவது கட்டமாக தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் கிடைக்கும் வகையில், மலையக மக்களையும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்கும் வழங்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அனைத்து இன மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து, இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த நிலையில், அவரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.
தமக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், போராட்ட பேரணிக்கு இடைநடுவில் தடை விதித்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரின் கோரிக்கையை நிராகரித்து, முன்னோக்கி செல்ல முயற்சித்த நிலையில், போலீஸார் போராட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.