ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது கணவரைக் காணவில்லை என ஜோதி பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் ஜோதியிடம் பொலிஸார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

 

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் ஜோதியின் தொலைபேசி அழைப்புக்களை ஆய்வுசெய்துள்ளனர்.இதன்போது ராஜுவுக்கு விருந்து வைத்து ஜோதி கொலை செய்துள்ளார் என்பதுதெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது ராஜூவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே, ஜோதி வேறு ஒருவரைக் காதலித்து வந்துள்ளார் எனவும் ,திருமணத்திற்கு பின்னரும் அதனை அவர் தொடர்ந்து வந்துள்ளார் எனவும் , வேலைக்கிடைத்துள்ளதாகக் கூறி தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து சென்று காதலனுடன் பொழுதை கழித்து விட்டு, மாலையில் வீடு திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் கணவனுக்கு தெரியவரவே குழந்தைகளுக்காக திருந்தி வாழ்வது போல் நடித்து ஜோதி, சம்பவத்தன்று தனது கணவருக்கு வீட்டில் விதவிதமாக சமைத்து அதில் தூக்கமாத்தியைக் கலந்து விருந்து வைத்துள்ளார் எனவும், அவர் மயங்கியதும் தனது காதலனை அழைத்து, கணவனைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் காதலனின் உதவியுடன் கணவரின் சடலத்தை மயானத்துக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் எனவும், உறவினர்களுக்குச் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கணவர் மாயமானதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply