நித்யானந்தாவைப் போல தனித் தீவு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது.

அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது ஒன்றும் அவ்வளவு முடியாத காரியமில்லை. வெறும் ரூ.3.86 கோடி இருந்தால் போதும்.

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவேவின் இகுவானா தீவு, ரூ.3.86 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதெல்லாம் சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டுமென்றால் கூட, அதன் விலைகளை அறிந்து கண்ணைக் கட்டுகிறது.

இந்த நிலையில்தான் கிட்டத்தட்ட வெறும் நான்கு கோடிக்கு ஒரு தனித்தீவே விலைக்கு வந்திருக்கிறது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை போன்ற பெரு நகரங்களில் ஒரு வீட்டை விலைக்கு வாங்க வேண்டும் என்றால் கூட, 4 கோடி ரூபாய் தேவை. அந்த தொகைக்கு ஒட்டுமொத்த தீவையும் வாங்கலாம் என்றால் எப்படி இருக்கும்?

இந்த குட்டித் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு 5 ஏக்கர் நிலப்பரப்பு. கரீபியன் கடலுக்கு நடுவே, பச்சைப் பசேலென கண்கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கிறது இகுவானா தீவு. இந்த தீவுக்குள் குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளது.

இந்தத் தீவுக்குள் மிக அழகான மூன்று படுக்கை அறை, இரண்டு கழிப்பறை கொண்ட வீடும் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 28 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலையும் அழகையும் ரசிக்கலாமாம்.

ஹெலிபேட் அமைத்துக் கொள்ளவும் முடியுமாம். புதிய உரிமையாளர்களுக்கு, இந்தத் தீவிலேயே தங்கி பணிபுரிய மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களும் இங்கு உள்ளனர்.

வீடு அல்லது சொகுசுப் பங்களா வாங்க தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய பம்பர் பரிசாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இது உண்மையான விற்பனை விளம்பரம்தானா? மோசடி விளம்பரமா? என்பதை வாங்குவதற்கு முன்பு உறுதி செய்துகொள்வது நலம்.

Share.
Leave A Reply