“சீனாவின் எக்சிம் வங்கி, தான் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கு இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்க இணங்கியிருக்கிறது. இது சீனாவின் முழுமையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் அல்ல”
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள உதவித் தலைவர், விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்று கூறிச் சென்ற சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளப்பெறுவதை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க இணக்கம் தெரிவித்து, சீனாவின் எக்சிம் வங்கி கடிதம் அனுப்பியிருக்கிறது.
இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானதும், இந்தியாவை அடுத்து சீனாவின் தரப்பில் இருந்தும் தடை அகன்று விட்டதாகவே பலரும் கருதினார்கள்.
சீனா இணங்கி விட்டதால், சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்கள் நிதியுதவி விரைவில் வந்து விடும் என்று, நம்பினார்கள்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க, இதனை சீனாவின் சாதகமான சமிக்ஞை என்று கூறினாலும், முழுமையான ஒத்துழைப்பு என்பதை உறுதிப்படுத்தவில்லை. அதாவது சீனாவின் உத்தரவாதக் கடிதம் அதுவல்ல என்று கூறியிருக்கிறார்.
பொருளாதார நிபுணரான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும், சீன எக்சிம் வங்கியின் இந்தக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்குமா என்று சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு ஏற்பட்டு, நான்கு மாதங்களாகியும், இலங்கையினால் அந்த உதவியைப் பெற முடியவில்லை.
காரணம் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை, கடன் வழங்குநர்களிடம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.
இலங்கையின் கிட்டத்தட்ட 40 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன்களில், 20 சதவீதம் சீனாவிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது.
அதனிடம் பெறப்பட்ட இருதரப்புக் கடன்கள் கிட்டத்தட்ட 8 பில்லியன் டொலர்களுக்கு சற்றுக் குறைவாகும்.
இதனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 20 வருட அவகாசத்தை தரும்படி, இலங்கை அரசாங்கம், சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், சீனாவின் எக்சிம் வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில், 2 வருடங்களுக்கு மாத்திரம் கடன் வசூலிப்பை ஒத்திவைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது கோரப்பட்ட காலஅவகாசத்தில் வெறும் 10 சதவீதம் மட்டும் தான். இந்த உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்தினதும், பாரிஸ் கிளப் நாடுகளினதும் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்குப் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை கோருவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன.
சர்வதேச நாணய நிதியம் இந்த கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல், உதவியை வழங்கினால் இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுமைக்கு வந்து விட்டதாக கருதப்படும்.
அது தனியே கடனை பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமன்றி, கடனை திரும்ப கேட்பதற்குமான சூழலை ஏற்படுத்தும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் இலங்கையினால், இப்போதைக்கு கடனை திருப்பிச் செலுத்தும் இயலுமையை அடைய முடியாது.
அதனால் தான், சர்வதேச நாணய நிதியம் முதலில் கடன் வழங்குநர்களிடம், கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
சீனாவின் எக்சிம் வங்கி, தான் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கு இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்க இணங்கியிருக்கிறது. இது சீனாவின் முழுமையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் அல்ல.
இதற்குள் இரண்டு முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன.
ஒன்று சீனாவின் எக்சிம் வங்கியால் வழங்கப்பட்டிருக்கின்ற குறுகிய காலஅவகாசம்.
இது இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை அடைவதற்குப் போதுமான காலஅவகாசமாக இருக்காது. ஏனென்றால் இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நிலையில் அடிமட்டத்தை அடைந்து விட்டது.
வங்குரோத்து நிலையை அடைந்து விட்ட நாடு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு முன்னேற்றமடையும் என்று உறுதியாக கூற முடியாது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தனியே நாட்டின் பொருளாதாரக் கொள்கை, மற்றும் மோசமான நிதி நிர்வகிப்பினால் மாத்திரம் ஏற்பட்டிருக்கவில்லை.
கொரோனா தொற்று, உக் ரேன் போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகளும் அதில் காத்திரமான தாக்கத்தைச் செலுத்தின.
2018இல் சீனாவில் இருந்து, 265,965 சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், அடுத்த ஆண்டில் 5 இலட்சம், பேரைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால்,2019இல் 167,863 சீன சுற்றுலாப் பயணிகளையே அழைத்து வர முடிந்தது. அதற்குப் பின்னர் கொரோனா பரவலினால், அந்த எண்ணிக்கை, 2020இல் 26,147 ஆக குறைந்தது.
2021இல் வெறும், 2,417 பேரே வந்தனர். 2022இல், சற்று அதிகரித்தாலும், 4,715 என்ற கோட்டை அது தாண்டவில்லை.
சுற்றுலா வருமானம் தற்போது உயரத் தொடங்கியிருந்தாலும், சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு கொரோனா தொடர்ந்து தடையாகவே இருந்து கொண்டிருக்கிறது. அதுபோல, உக்ரேன் போரும், ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமான வளர்ச்சியை எட்டத் தடையாக இருக்கிறது.
போர் மற்றும் நோய்த்தொற்று போன்ற எதிர்பாராத எந்த விடயங்களும், இலங்கையின் பொருளாதார மீட்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு இது உதாரணம்.
இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கை கடனை மீளச் செலுத்தும் திறனை அடைந்து விடும் என்று சீன எக்சிம் வங்கி சிந்தித்துப் பார்க்கவில்லை.
அது வெறுமனே சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒப்பனைக்காக கடிதம் கொடுப்பதில் கவனம் செலுத்தியதே தவிர, இலங்கையின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால், நீண்டகால கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இணங்கியிருக்க முடியும்.
இரண்டாவதாக சீனாவின் தரப்பில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. சீனாவின் முழுமையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் வழங்கப்படவில்லை.
சீனா தனது இரண்டு வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு கடன்களை வழங்கியிருக்கிறது.
ஒன்று சீன எக்சிம் வங்கி. இது, இலங்கைக்கு 4.3 பில்லியன் டொலர்கள் இரு தரப்புக் கடனை வழங்கியிருக்கிறது.
இரண்டு, சீன அபிவிருத்தி வங்கி இதன் மூலம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் கள் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர 2021ஆம் ஆண்டு சீன மக்கள் வங்கி இலங்கை மத்திய வங்கிக்கு நாணய மாற்று கடனாக 1.5 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கிறது. இதனை மூன்று ஆண்டுகளில் மீளச்செலுத்த வேண்டும்.
அதில் பாதிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்த மூன்று கடன்களையும் சேர்த்தால் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 22 சதவீதம் சீனாவுக்கு செலுத்தப்பட வேண்டியது.
அதில், பாதிக் கடனை வழங்கிய சீன எக்சிம் வங்கி மட்டும் தான், இரண்டு வருட கடன் ஒத்திவைப்பு உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.
எஞ்சிய இரண்டு சீன வங்கிகளிடம் இருந்தும் அவ்வாறான உத்தரவாதம் ஏதும் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
எனவே, சீன எக்சிம் வங்கியின் இரண்டு வருட கடன் ஒத்திவைப்பு உத்தரவாதக் கடிதத்தை வைத்துக் கொண்டு இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவியை வழங்க இணங்குமா என்பது சந்தேகம் தான்.
கடந்த சில வாரங்களில் காணப்பட்ட தேக்க நிலை தற்போது குறைந்திருக்கிறது. இது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கை உருவாகியிருக்கிறதே தவிர, நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி பிறந்து விட்டது என்று முழுமையாக நம்ப முடியாத நிலையே தற்போது வரை நீடிக்கிறது.
-ஹரிகரன்–