பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமான ஊழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை இந்திய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி பறந்துகொண்டிருந்த, விஸ்தாரா எயார்லைன்ஸின் விமானத்தில் மேற்படி தாக்குல் சம்பவம் இடம்பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண வகுப்பு ஆசனத்துக்கான டிக்கெட் பெற்றிருந்த இப்பெண், வர்த்தக வகுப்பு ஆசனமொன்றில் அமர வேண்டுமென வலியுறுத்தினார். அவரை விமான ஊழியர்கள் தடுத்தபோது, ஊழியர் ஒருவரை அப்பெண் தாக்கியதுடன், மற்றொருவரின் மீது எச்சில் துப்பினார் எனவும் அரைநிர்வாணமாக விமானத்துக்குள் நடந்து திரிந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அப்பெண்ணுக்கு தலைமை விமானியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பின்னர் அவரை கட்டுப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான ஊழியர்களின் முறைப்பாட்டையடுத்து, மும்பை பொலிஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை நீதிமன்றமொன்றில் ஆஜர்செய்யப்பட்ட அப்பெண், பிணையில் செல்ல அனுதிக்கப்பட்டுள்ளார்.