ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது இந்தத் தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் தற்போது அ.தி.மு.கவின் எந்தப் பிரிவின் வேட்பாளருக்கு அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைக்கும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, கட்சியின் பொதுக் குழு கூடி வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டுமென உத்தரவிட்டது.

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு உடனடியாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனது தரப்பு வேட்பாளரான தென்னரசுவை வேட்பாளராக ஏற்க சம்மதமா எனக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியது.

மொத்த பொதுக் குழு உறுப்பினர்களான 2665 பேரில் 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்தது.

பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களைப் பெற்ற நிலையில், ஒருவர்கூட தென்னரசிற்கு எதிராக, படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

இதையடுத்து தங்கள் தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கே அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை இன்று தில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் அந்தக் கட்சியின் அவைத் தலைவரான தமிழ் மகன் உசேன்.

இதற்கிடையில், இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்தது.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரமளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் அளித்துள்ளது.

இந்த அங்கீகாரம், தற்போதைய இடைத் தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவே அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இதுவரை 59 பேர் அந்தத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

Share.
Leave A Reply