பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் கெலி ஓயா கரமட பிரதேசத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (11) மாலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது பிலியந்தளையைச் சேர்ந்த பியூமிகா ஜனனி டயஸ் 61 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கெலிஓய பிரதேசத்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு காரில் பயணித்த குடும்பத்தினரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
குறித்த கார் கெலிஓய நகரில் இருந்து உறவினர்கள் வீடு அமைந்துள்ள கரமட பிரதேசத்துக்கு குறுக்கு வழியால் செல்ல முற்பட்டபோதே புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இப்பிரதேசத்தில் குறுகியகால இடைவெளிக்குள் சுமார் 11 விபத்துக்கள் வரை இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.