தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தானை 19வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
வெற்றிக்கு 150 ரன்கள் வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் இருவரும் 58 ரன்கள் குவித்தனர்.
கடைசி மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி எதிர்பாராத வெற்றியை நோக்கி இருந்தது.
ஆனால், பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில், இந்திய அணி தன் இலக்கை எட்டியது.
பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்திருந்தது. இதில் அந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். மேலும், 18 வயதான ஆயிஷா நசீம் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார்.
நசீமின் பலமான ஆட்டத்தால் இந்திய அணி திணறியது.
ஜெமிமா
பிரகாசித்த இளம் வீராங்கனைகள்
ஷெஃபாலி வர்மா 10வது ஓவரில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆனார். அவர் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
19 வயதான ரிச்சா கோஷ் 18வது ஓவரில் இருந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார். அதேபோன்று, கடைசி ஓவரில் ரோட்ரிகஸ் மேலும் மூன்று பவுண்டரிகளை அடித்து இறுதியில் வசதியான வெற்றியைப் பெற்றனர்.
இந்தியா வெற்றியை எதிர்நோக்கிய நிலையில் இருந்தாலும் அதன் எதிரில் உள்ள பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தால் தடுமாறிய சூழலும் இருந்தது.
பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் இந்திய அணி ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது, முதல் இன்னிங்ஸின் இறுதிக் கட்டத்தில் இந்திய அணியினரின் உடல்மொழியில் தெளிவாகத் தெரிந்தது.
கடைசி மூன்று ஓவர்களில் 33 ரன்கள் பறிக்கப்பட்டது. இதனால், இந்திய ஃபீல்டர்கள் இடுப்பில் கை வைத்து நம்ப முடியாமல் நின்றனர்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா வலுவான ஆட்டத்தை ஆடினாலும், நசீம் இரண்டு சிக்சர்களை அடித்து நொறுக்கியபோது பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
இந்திய வீரர் ரிச்சா கோஷ் அடித்த ஒரு ஷாட்
இந்திய வீரர் ரிச்சா கோஷ் அடித்த ஒரு ஷாட்
தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா விரல் காயத்தால் வெளியேறிய நிலையில், இந்திய இன்னிங்ஸில் இளம் திறமைகள் பிரகாசித்தன. மேலும், ஹர்மன்ப்ரீத் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
19 வயதான ஷெஃபாலி வர்மா, 22 வயதான ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் தங்கள் ஆட்டத்தை வேகப்படுத்தி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தானுடன் விளையாடுவது “எப்போதும் சிறப்பானது”
ஆட்ட நாயகியான ஜெமிமா ரோட்ரிகஸ், “எனது பெற்றோர் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் எப்போதும் எனக்குப் பின்னால் இருப்பதால் அவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.
மேலும், “முழு ஆட்டத்தைவிட ஒவ்வொரு ஓவர்களுக்குமான இலக்கையே நாங்கள் கொண்டிருந்தோம். எங்களால் இதை முடிக்க முடியும் என்று நாங்கள் அறிந்தோம்,” எனவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப்
பாகிஸ்தான் பௌலிங் வலுவாக இல்லாததால் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டதாகவும் அடுத்த ஆட்டத்திற்கான படிப்பினைகளை இதன்மூலம் பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா தெரிவித்தார்.
இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், “ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான், ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடுவது எப்போதும் சிறப்பானது. இது சிறந்த விளையாட்டாக அமைந்தது.
பாகிஸ்தான் நன்றாக பேட்டிங் செய்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்பினோம். ஜெமிமாவும் ரிச்சாவும் நன்றாக விளையாடினர், இருவரும் விவேகத்துடன் பேட்டிங் செய்தனர்” எனத் தெரிவித்தார்.