சில விமானிகள் இதில் இருந்து ஒரு சிக்னல் வந்தது. அந்த சிக்னல்களால் எங்கள் விமானத்தின் சிக்னல்களுக்கு இடையூறு ஏற்பட்டது என்று கூறி உள்ளனர்.
அமெரிக்காவிலும் கனடாவிலும் பறந்த யுஎப்ஓக்குள் குறித்த புதிய தகவல்கள் பல வெளியாகி உள்ளன.
பென்டகன் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன.
கடந்த 3 நாட்களில் இதோடு மூன்றாவது முறையாக அமெரிக்கா, கனடாவில் இது போன்ற யுஎப்ஓக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. முன்னதாக அமெரிக்காவின் அலாஸ்காவில் ஒரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதன்பின் வடமேற்கு கனடாவில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மிச்சிகனில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
வடக்கு அமெரிக்கா
பெரும்பாலும் கனடா எல்லையில், வடக்கு அமெரிக்காவில்தான் அதிகமாக யுஎப்ஓக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன.
இந்த யுஎப்ஓக்கள் எங்கிருந்து வந்தது? அதன் வேலை என்ன? என்று எதுவும் வெளியே தெரியவில்லை. எல்லாமே மர்மமாகவே உள்ளது.
அதோடு இது ஏலியனாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க பென்டகன் அதிகாரிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
இது எப்படி பறக்கிறது என்பதே பெரிய குழப்பமாக உள்ளது. இதுவரை இப்படி நடந்ததே இல்லை என்று பென்டகன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
பிடன்
இந்த யுஎப்ஓக்களை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க அதிபர் பிடன்தான் ஆணையிட்டு உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு போன் செய்து, கனடா மேலே பறந்த யுஎப்ஓவை சுட்டு வீழ்த்தவும் இவர்தான் உத்தரவிட்டார்.
இரண்டு நாட்டு விமானப்படைகள் இணைந்து நடத்திய ஆப்ரேஷனில் அமெரிக்காவில் எப் 22 மூலம் கனடா மீது பறந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை. முதல் இரண்டு யுஎப்ஓக்கள் நீளமாக, சிலிண்டர் வடிவில், கார் அளவில் இருந்துள்ளது. கடைசியாக இருந்த யுஎப்ஓ அதை விட பெரிதாக பெரிய தட்டு போல இருந்துள்ளது.
தட்டுகள்
அதாவது யுஎப்ஓகள் 3ல் 2 ஒருமாதிரியும், இன்னொன்று வேறு மாதிரியும் இருந்துள்ளன. இதுவும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, கனடா வான் எல்லை முழுக்க இதற்காக பல்வேறு போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் மூன்றாவது யுஎப்ஓ நேற்றே மொன்டானோவில் கண்டறியப்பட்டது. ஆனால் அதை ரேடார் கண்டுபிடித்ததும் கூட போர் விமானங்களால் அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து சுட முடியவில்லை. அதை இன்றுதான் மிச்சிகனில் சுட்டனர்.
அதனால் இந்த யுஎப்ஓ மிக வேகமாக நகரும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மொன்டானோ
நேற்று இதற்காக மொன்டானோ வான் பகுதியே சில மணி நேரங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று இந்த வான்பகுதியில் யுஎப்ஓ கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்று காணாமல் மறைந்து போன யுஎப்ஓ இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது அனைத்தும் 40 முதல் 50 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து உள்ளது. கடைசியாக சுடப்பட்டது மட்டும் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து உள்ளது. யுஎப்ஓக்கள் எப்படி பறக்கிறது என்று தெரியவில்லை என்றாலும் அதில் பே லோட் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது இவை ஆயுதங்களையோ, ஆராய்ச்சி சாதனங்களையோ அல்லது இரண்டையுமோ கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கலவையான தகவல்
இப்போது இந்த யுஎப்ஓ தொடர்பாக அமெரிக்கா விமானப்படை விமானிகள் கலவையான தகவல்களை கொடுத்துள்ளனர்.
இந்த யுஎப்ஓவை வானில் கண்டுபிடித்ததும் அதை எப்22 விமானம் மூலம் சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக எப் 35 விமானம் மூலம் அது என்ன என்று பார்க்க அமெரிக்க விமானப்படை சென்றுள்ளது.
அந்த பறக்கும் பொருளை பார்க்க சென்ற எப் 35 விமான விமானிகள் கலவையான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிஎன்என் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பைலட் இல்லாமல் பறந்தது எப்படி என்ற குழப்பம் விமானிகளுக்கு உள்ளது.
பைலட் இல்லாமல், எந்த விதமான புகை அல்லது எஞ்சின் எதுவும் இல்லாமல் அமைதியாக இது வானில் பறந்தது. சத்தமே இல்லாமல் எப்படி ஒரு விமானம் பறக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
குழப்பம்
இது சாதாரண வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. இதனால் எளிதாக இதை துரத்தி பிடித்து சுட்டு வீழ்த்த முடிந்து உள்ளது.
இதில் பைலட் இல்லை.
பைலட் இல்லாமல் பறந்து உள்ளது. முழுக்க ஆட்டோ பைலட் முறையில் பறந்து உள்ளது. அதேபோல் இதில் கட்டுப்பாட்டு சாதனங்கள் இல்லை.
அதாவது எந்த ஒரு பறக்கும் பொருளிலும் பிளாப், ரட்டர் போன்ற பொருட்கள் இருக்கும். அதாவது விமானம் மேலே கீழே செல்வதை பிளாப் மூலம் கட்டுப்படுத்துவார்கள்.
ரட்டர் மூலம் அது இடது வலது பக்கம் திரும்புவதை உறுதி செய்வார்கள். அது போன்ற பாகங்கள் இந்த பறக்கும் பொருளில் இல்லை.
சிக்னல்
மேலும் சில விமானிகள் இதில் இருந்து ஒரு சிக்னல் வந்தது.
அந்த சிக்னல்களால் எங்கள் விமானத்தின் சிக்னல்களுக்கு இடையூறு ஏற்பட்டது என்று கூறி உள்ளனர்.
ஆனால் சில அமெரிக்க விமானிகள் எங்களுக்கு அப்படி நடக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
அந்த பறக்கும் பொருளை உற்று பார்த்த போது அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
அந்த பறக்கும் பொருளை மிக அருகில் பார்த்த விமானிகளால் கூட அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
முக்கியமாக அது எப்படி வானில் பறக்கிறது என்றே தெரியவில்லை என்று விமானிகள் குறிப்பிட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.