உலகிலேயே அதிகளவு ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி செய்த நாடுகளில் அதன் மிகப்பெரிய சந்தையான பிரான்ஸை இந்தியா முந்தியதாக, சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 21.9 கோடி விஸ்கி பாட்டில்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் இது 2021ஆம் ஆண்டைவிட 60 சதவீதம் அதிகம் என்றும், ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் (SWA) தெரிவித்துள்ளது.
ஆனாலும் அதன் மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவே ஸ்காட்ச் விஸ்கியை அதிகம் இறக்குமதி செய்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 1.05 பில்லியன் யூரோ மதிப்புக்கு (1.27 பில்லியன் டாலர்) அமெரிக்கா ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடம் வகிக்கிறது.
இந்தியாவில் நீண்ட காலமாக அந்தஸ்தின் அடையாளமாக ஸ்காட்ச் பார்க்கப்படுகிறது. ஸ்காட்ச் விஸ்கியை இந்தியா அதிகளவு இறக்குமதி செய்திருந்தாலும், இந்திய மதுபான சந்தையை பொறுத்தவரையில் இது வெறும் 2 சதவீதம் தான்.
பலவகை விஸ்கியை கலந்து தயாரிக்கப்படும் மலிவான ‘பிளெண்டட் விஸ்கி’ (Blended whisky) லட்சக்கணக்கிலான இந்திய வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வாக நீண்டகாலமாக இருந்தது.
ஆனால், கலாசார மாற்றம் மற்றும் இந்தியர்கள் செலவு செய்வது அதிகரித்ததால், விலையுயர்ந்த ‘சிங்கிள் மால்ட்’ விஸ்கிக்கு தேவை அதிகரித்தது.
உலகளாவிய ஸ்காட்ச் விற்பனையில் இந்தியாவின் பங்கு உயர்ந்துள்ள நிலையில், கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் விஸ்கி ஏற்றுமதி அளவு 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவில் வளர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக விஸ்கி ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கிக்கு இந்தியாவில் 150% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. மேலும், இதன் விலையும் அதிகமாகும்.
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையே நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள வணிக ஒப்பந்தம் இதனை சரிசெய்யும் என, ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் நம்புகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தாலும் இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் இறுதியானால், ஸ்காட்ச் விஸ்கியின் விற்பனை அதிகரிக்கும் எனவும் அதன் மீதான வரி குறையும் எனவும் ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வின்படி, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ஒரு பில்லியன் யூரோ வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், மதிப்பு மற்றும் அளவு இரண்டின் அடிப்படையிலும் பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவை தவிர்த்து தைவான், சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளிலும் இரண்டு இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்றும், இது “கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதால் நிகழ்ந்ததாகவும்,” அந்த அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஸ்காட்ச் விஸ்கி சந்தையில், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆசிய – பசிபிக் பிராந்தியம் முந்தியுள்ளது.
ஆசிய – பசிபிக் பிராந்தியம் 1.8 பில்லியன் யூரோ அளவுக்கு விஸ்கியை இறக்குமதி செய்துள்ளது. இது உலகளாவிய இறக்குமதியில் 29% ஆக இருந்தது, தற்போது 37% (6.2 பில்லியன் யூரோ) என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
“2022 ஆம் ஆண்டில், முக்கிய உலகளாவிய சந்தைகளில் வணிகங்களை முழுமையாக மீண்டும் திறந்ததன் மூலம் தொழில்துறை பயனடைந்தது.
இது வணிக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனையில் முக்கியமான சாளரத்தைத் திறந்துவிட்டது” என்று அந்த அசோசியேஷனின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் கென்ட் தெரிவித்தார்.