“ஒரு பக்கத்தில் பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள் மக்களை அழுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், பொருட்கள், சேவைகளுக்காக விலைகள், வரிகளை உயர்த்தி அரசாங்கம் அவர்கள் மீது சுமைகளை அதிகரிக்கிறது”
சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்கடிகளால், வெறுத்துப் போயிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்.
இலங்கையைப் போலவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
அடுத்தகட்ட தவணையான 1.1பில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் சமர்ப்பித்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிராகரித்து விட்ட சர்வதேச நாணய நிதியம், மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் அதிகரிக்குமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மின்கட்டணத்தை அதிகரித்தால் தமது அரசாங்கம் உள்நாட்டில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்துக்குத் தெரியும்.
அதனால் அந்த திட்டத்தை நிராகரிக்க, சர்வதேச நாணய நிதியம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறும், எரிபொருள் விலையை உயர்த்துமாறும், வரிகளை அதிகரிக்குமாறும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கடந்த வாரம் வெறுப்புடன் கூறியிருக்கிறார்.
வேறென்ன செய்ய முடியும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அதற்கு இணங்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
அதனை பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சீனாவிடம் 77 பில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்ற நாடு பாகிஸ்தான். இலங்கை, சீனாவிடம் பெற்றிருக்கும் கடன் வெறும் 8 பில்லியன் டொலர்கள் தான்.
இலங்கையை விட, கிட்டத்தட்ட 8 மடங்கு கடனை சீனாவிடம் பெற்றிருக்கிறது பாகிஸ்தான்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக, அதன் நிபந்தனைகளுக்கு இணங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுபோலத் தான் இலங்கையும் சிக்கிக் கொண்டிருக்கிறது.
45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்ற அனைவரிடமும் வரி அறவிட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்தது என்றும், ஆனால் தாங்கள் பேச்சு நடத்தி அதனை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரித்ததாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
அக்கிராசன உரையிலும் அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் வரிசீர்திருத்தம் அண்மையில் கொண்டு வரப்பட்ட போது, மாதம், ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் இருந்து வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது.
அந்த வரி அறவீட்டுக்கு எதிராக மருத்துவர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுகின்றவர்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த போது, 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி விதிக்க வேண்டும் என்ற நிபந்தனை பற்றி அரசாங்கம் மூச்சுக் கூட விடவில்லை.
இப்போது, வருமான வரி மட்டம், ஒரு இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்ட பின்னர், தான் சர்வதேச நாணய நிதியம் 45 ஆயிரம் ரூபாவாக அதனைக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும், தாங்கள் தான் போராடி அதனை ஒரு இலட்சம் ரூபாவாக நிர்ணயித்திருப்பதாகவும் கூறுகிறது.
45 ஆயிரம் ரூபா வருமானம் பெறுபவர்களிடம் வரியை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தால், அடுத்து வரும் தவணைகளில், அந்த நிபந்தனையை இறுக்கமாக பேண முற்படலாம்.
பாகிஸ்தானை இப்போது இறுக்கிப் பிடிப்பது போல, நாளை இலங்கையையும் இறுக்கிப் பிடிக்கலாம்.
பணவீக்கம் ஜனவரி மாதத்திலும், 54 சதவீதமாக காணப்படும் நிலையில், 45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வருமான வரியை அறவிடக் கோருவது முட்டாள்தனமானது.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் எரிவாயு, எரிபொருள், மின்கட்டணம் என்பனவற்றை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதற்குப் பின்னரும், பணவீக்கம் குறையும் என்ற பூச்சாண்டியும் காட்டிக் கொண்டிருக்கிறது.
அதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் தனது பலம் முழுவதையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போதும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
பின்னர், ஆணைக்குழுவுக்குள் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அதன் இரண்டு உறுப்பினர்கள் பதவி விலக புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேவேளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைப் பதவி நீக்கும் முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
இதற்குப் பின்னால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது என்ற இலக்கு மட்டும் இருப்பதாகவே கருத்துக்கள் நிலவுகின்றன.
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி கொடுக்க மறுப்பவர்களைப் பந்தாடியேனும், தங்களின் இலக்கை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
அண்மைய மின்கட்டண அதிகரிப்புக்குப் பின்னர், மின்சார சபை இலாபத்தில் இயங்குவதாக முன்னர் அந்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்த சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கூறுகின்றனர்.
இதற்குப் பின்னரும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பாகிஸ்தான் பிரதமர், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு, சர்வதேச நாணய நிதியம் தங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இவ்வாறான நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அவ்வாறான நிபந்தனையை விதித்து, அழுத்தம் கொடுக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பு.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட இணக்கப்பாட்டை இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை.
அதன் நிபந்தனைகள் என்னென்ன என்ற விபரத்தையும், அரசாங்கம் வெளியிடவில்லை.
பாராளுமன்றத்தில் அதனை முன்வைக்குமாறு கோரிய போதெல்லாம் அதற்கு அரசாங்கம் மறுப்பை வெளியிட்டது.
எனவே மின்கட்டண அதிகரிப்பு விடயத்தில், சர்வதேச நாணய நிதியத்தின், அழுத்தம் இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்கவில்லை என்று முன்னர் அரசாங்கம் தப்பிக்க முயன்றது.
இப்போது, வருமான வரி உச்ச வரம்பை 45 ஆயிரம் ரூபாவாக குறைக்குமாறு நிபந்தனை விதித்தது என்பதை ஜனாதிபதியே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதுபோன்று எதிர்காலத்தில், மின்சாரக் கட்டண அதிகரிப்புக்குப் பின்னால், சர்வதேச நாணய நிதியம் இருந்ததா என்ற விடயமும் வெளிச்சத்துக்கு வரக் கூடும்.
பொருளாதார நிலையை முன்னேற்றுவதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதே இலக்கு என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
எரிபொருள், மின்கட்டணம், எரிவாயு விலைகள் அதிகரிக்கும் போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது கடினம்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், மக்களின் மீதான சுமைகளை அரசாங்கத்தினால் குறைக்க முடியாது.
ஒரு பக்கத்தில் பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள் மக்களை அழுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், பொருட்கள், சேவைகளுக்காக விலைகள், வரிகளை உயர்த்தி அரசாங்கம் அவர்கள் மீது சுமைகளை அதிகரிக்கிறது.
இது அரசாங்கத்தின் மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்து வருகிறது.
இந்த கட்டண உயர்வுகளுக்குப் பின்னால், சர்வதேச நாணய நிதியம் இருக்குமேயானால், அதன் இலக்குத் தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுவதும், எதிர்ப்புகள் தோன்றுவதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
-சத்ரியன்–