தமிழ்த்தேசிய ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பம் தனிநபர் பயங்கரவாதம் என்றால் அதன் முடிவு தனிநபர் வழிபாடு.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற அடிப்படையில் மிகப் பயபக்தியுடன் வாதிடப்பட்டுவருகிறது.

தலைவர் இருக்கிறார் என்று கூறும் தரப்பு, கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், காலம் வரும்போது எழுந்தருள்வார் என்றும், இல்லை என்பவர்கள் அவர் மரணித்துவிட்டார் என்று கூறினாலும்: ஆனால்…(?) அந்தப் “பரம்பொருள்” இரகசியத்தை பேசாப்பொருளாக மௌனம் காக்கின்றனர்.

2009 இல் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர் கே.பி. “ஆயுதங்கள் மௌனித்துவிட்டன” என்றுவிடுத்த அறிவிப்பு வெறுமனே ஆயுதங்களை கீழே போட்டதை மட்டும் குறித்து நிற்கிறதா? இல்லை அந்த இயக்கத்தின் கூண்டோடு கூடிய தலைமைத்துவங்களின் அழிப்பையும் சேர்த்து குறிக்கிறதா? என்பது முக்கியமான ஒன்று.

“பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் “என்ற பழ.நெடுமாறனின் அறிவிப்பும், “சொல்லச் சொன்னார்கள் சொன்னேன்” என்று தொடர்ந்த அறிவிப்பும் 1970 களில் காசி.ஆனந்தன் சிறைமீண்ட செம்மலாக மேடைகளில் பேசிய ஒரு விடயத்தை நினைவூட்டுகிறது.

இலங்கையில் “மறுசிரா” என்று அழைக்கப்பட்ட சிங்கள கைதி ஒருவரின் சடலம் சிறையில் இருக்கும்போதே இறந்த நிலையில் சிறைக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது.

அது கொலையா? அல்லது தற்கொலையா? என்று கேட்டு முட்டையில் மயிர்பிடுங்கியது அரசியல்.

இறந்த ஒரு சிங்களக் கைதிக்கு அவன் சிங்களவன் என்பதால் இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிங்கள அரசு விசாரணை நடத்துகிறது என்ற கருத்தில் காசி.ஆனந்தன் மேடைகளில் இந்தக் கேள்வியை எழுப்பி பேசினார்.

“மறுசிரா செத்தபின் பாய்ந்தானா..? பாய்ந்தபின் செத்தானா…? என்று விசாரணை செய்கின்ற சிங்கள அரசு செந்தமிழ் இளைஞர்களை விசாரணை இன்றி சிங்கள சிறையில் அடைத்து வைத்திருக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

“மறுசிரா” சிறையில் இருந்து தப்பிக்க முயன்று பாய்ந்தபோது இறந்தான் என்றது அரசாங்கம். இல்லை அவனை சிறையில் அடித்துக்கொலை செய்து சிறைக்கு வெளியே தூக்கி வீசியிருக்கிறீர்கள் என்றன எதிர்க்கட்சிகள்.

பிரபாகரனின் மரணமும் இப்படித்தான் விவாதிக்கப்படுகிறது. காசி.ஆனந்தனின் வார்த்தைகளில் சொல்வதானால் “பிபாகரன் தப்பிய பின் செத்தாரா…? செத்தபின் தப்பினாரா..?”.

ஈழத்தமிழர்களின் சாவீட்டில் அரசியல் செய்யும் தமிழ்நாட்டின் மூன்றாந்தர அரசியல்வாதிகளுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்கு “உண்டியல்” தூக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும்தான் இதை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய தேவை உள்ளது.

பிரபாகரன் இறந்தார் என்ற மௌனத்தை உடைக்க, தலைவரின்- சகோதரரின்-அண்ணனின் – தம்பியின் பக்தர்கள் தயங்குகிறார்கள். அவர்களின் உதடுகள் “இறந்தார்” என்ற வார்த்தையை உச்சரிக்க தடுமாறுகின்றன.

ஒரு வகையில் இந்த பக்தி உளவியல் பாதிப்பை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் உண்மைகளை பேசாமல் பொத்திப் பொத்தி பூட்டி வைப்பது காலப்போக்கில் பக்தர்களை மனநோயாளிகளாக்கிவிடும். அது பூசாரிகளுக்கே வாய்ப்பாக அமையும்.

சாதாரணமாக கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியில் சந்தர்ப்பத்தைப் பொறுத்து சமூகத்தில் “ஆம்” என்ற பதிலும் “இல்லை” என்ற பதிலும் உள்ளது.

இது ஒரு நிலையான தெளிவற்ற தளம்பல் நிலை. ஆம்! இருக்கிறார் என்று கூறுபவர்கள் இதை இலகுவாக கடந்துசென்று விடுகின்றனர். இல்லை என்று கூறுபவர்களால் அவ்வளவு இலகுவாக கடந்துசெல்ல முடியாது. காரணம் கடவுள் மீதான தெய்வப்பழி அச்சம்.

பிரபாகரன் ஒரு இயக்கத் தலைவருக்கு அப்பால் அளவுக்கு அதிகமான, மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தன்மையுடன் புனையப்பட்டவர்.

அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர், பலவீனங்களை அறியாதவர், முடிவுகளை சரியாக எடுப்பவர், சொல்வதைச் செய்பவர் செய்வதைச் சொல்பவர், நீதி வழங்குபவர், தீர்ப்பளிப்பவர், பாவங்கள் செய்யாதவர், பாவமன்னிப்பு வழங்குபவர்…, தன்னிகரற்றவர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர், கேள்விக்கு உட்படுத்த முடியாதவர், தூய்மையும் புனிதமும் நிறைந்தவர்… இப்படி …. இப்படியாக ஒட்டு மொத்தத்தில் மனிதவடிவில் தோன்றிய தெய்வம் என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மன நோயானது விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு “மதநெறி” என்ற நிலைப்பாட்டையும், அதன் தலைவர் “வழிபாட்டிற்குரியவர்” என்ற நிலைப்பாட்டையும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பிரபாகரன் “சூரியக் கடவுள்”, “முருகப்பெருமான்” “சூரனைச் சங்காரம் செய்யப் பிறந்தவர்” என்ற கருத்தியல் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. இந்து மதம் பேசுகின்ற படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களை செய்கின்ற சர்வவல்லமை கொண்ட “கடவுள் ” என்பதே இக் கருத்தியலின் சாராம்சம்.

இன்னும் சொல்லப்போனால் மக்களுக்காக தீர்ப்புக்களை வழங்கி அதை “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக” ஆட்சி செய்தவர். பல்வேறு தமிழ் மன்னர்களுக்கு நிகராக பிரபாகரன் உருவகப்படுத்தப்பட்டார்.

ஒரு வகையில் அரசனும் அவனே..! ஆண்டவனும் அவனே…!! அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் இரண்டையும் செய்யும் வல்லமை கொண்டவர்.

இந்த “ஆண்டவன்” உருவகப்படுத்தல் புலிகளிடமும், மக்களிடமும் இருக்கும் போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கதைகட்டுவது மிகவும் இலகுவானது.

அவர் மரணத்திற்கு அப்பாற்பட்டவர். மறுபக்கத்தில் அதை மறுத்துரைப்பவர்கள் கடவுள் இல்லை என்று மறுத்தால் எப்படி தெய்வப்பழி வந்துவிடும் என்று பயப்படுவார்களோ அப்படிப் பயப்படுகிறார்கள். மதத்தை, கடவுளை நிந்தித்ததாகிவிடும் என்று யானை அடிக்கும் முன் தானடித்து சாகும் நிலையில் இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவு ஒரு தனிநபர் வழிபாட்டு பக்திமயமானது.

இவர்கள் இயக்க உறுப்பினர்கள் என்பதை விடவும் பிரபாகரனின் “பக்தர்கள்” என்பதே பொருத்தமானது. இது தமிழீழ தேச பக்தியுடன் இரண்டறக்கலந்துள்ளது. பிரபாகரனுக்கு அல்லது புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் தேசபக்திக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

இந்த விமர்சகர்கள் தேச விரோதிகள். இது ஒருவகையில் ஆஸ்திகத்திற்கும், நாஸ்திகத்திற்கும் இடையிலான கருத்தாடல் போன்றது.

போராட்ட இலக்கியங்கள் என்ற பெயரில் வெளிவந்த பல வெளியீடுகள் உண்மையில் போராட்டகால “பக்தி இலக்கியங்கள்” வடிவில் வெளிவந்தன.

ஊடகங்களும், படைப்பாளிகளும் என் கடன் பணி செய்து கிடப்பதே என இந்தப் பக்தி இலக்கியப் பணியைத் தொடர்ந்தனர்.

புதுவை இரத்தினதுரை போன்ற பலர் இந்த பக்தி இலக்கியப் படைப்பாளிகளே. இவர்கள் இந்த இலக்கியப் பணியைத் தொடர ஒரு இளம் படைப்பாளிகள் கூட்டத்தையும் மூளைச்சலவை செய்து உருவாக்கி இருந்தார்கள்.

2009 க்குப் பின்னர் வெளிவந்த சில (கடந்த) போர்க்கால படைப்புக்கள் மாத்திரமே இந்த பக்தி இலக்கிய மரபில் இருந்து விலகி சுயவிமர்சன கருத்தியலை உள்வாங்கி வெளிவந்துள்ளன.

இது சங்ககாலம், சங்கமருவிய காலம் போன்று புலிகள்காலம், புலிகள் மருவிய காலம் எனலாம். புலி மதவழிபாட்டையும், தனிநபர் வழிபாட்டையும் ஒரு சிறிதளவிற்காவது கேள்விக்குட்படுத்திய காலம் என்று குறிப்பிடலாம்.

பிரபாகரன் விடயத்தில் ஒரு பொதுப்பண்பை அவதானிக்க முடிகிறது. அதுதான் இருக்கிறார் என்பவர்களும், அவர் இல்லை என்பவர்களும் சந்திக்கின்ற புள்ளி.

இந்தப் புள்ளியில் இவர்கள் அனைவரும் ஆண்டவன் சந்நிதியில் “பக்தர்களாக” சந்திக்கிறார்கள். பிரபாகரன் மரணித்துவிட்டார் என்று களத்தில் நின்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் கூறும் உண்மை விரைவில் ஒரு புதிய “அதிமேதகு” நினைவு நாளை மக்களுக்கு வழங்கும். அப்போது பிரபாகரன் “சாமியானார்” என்ற செய்தியை சிறு பிள்ளையும் தெரிந்து கொள்ளும்.

மேற்குலகில் பொய் நிலைக்காது என்பதற்கு “பொய்க்கு கட்டைக்கால்” என்று சொல்வார்கள். பொய் நீண்டகாலம் நிலைத்து நிற்காது கட்டைக்கால் போன்று சறுக்கி வீழ்ந்து தகர்ந்து விடும்.

அப்போது பழ.நெடுமாறனின் கதைகட்டல் வெறும் கற்பனை பக்திக்கதை என்பதை உலகத் தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அப்போது : ஆண்டு தோறும் கொடி ஏற்றி, தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவம், ஆண்டவன் தரிசனம் அனைத்தும் இடம்பெறும். அதுவே புலிகள் பிரபாகரனுக்கு வழங்குகின்ற உத்தியோக பூர்வமான மரணச்சான்றிதழாகும் .

ஆக, இனி வரும் காலங்களில் பழ.நெடுமாறன், காசி.ஆனந்தன் கம்பனிக்கு மெல்லுவதற்கு வெறும் வாய்க்கு அவல் இல்லாமல் போகும்.

“அவர்” இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும். இதைக்கூட “சொல்லச்சொன்னார்கள் சொன்னேன்” என்று பழ.நெடுமாறன் தன்வாயால் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் அவர்கள் அப்படித்தான்…..!

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply