75 வயதான பாபுராவ் பாட்டீலும், 70 வயதான அனுசுயா ஷிண்டேவும் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோசர்வாட் கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கோலாப்பூரில் உள்ள ஜான்கி முதியோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர்.
புனேவைச் சேர்ந்த அனுசுயா ஷிண்டே முதலில் தனது கணவர் ஸ்ரீரங் ஷிண்டேவுடன் ஜானகி முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தபோது இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பு அனுசுயாவின் கணவர் இறந்துவிட்டார், அதன் பிறகு அவர் தனிமையில் இருந்தார்.
பாபுராவ் நிலையும் அப்படித்தான். மனைவி இறந்த பிறகு பாபுராவ் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லத்துக்கு வந்தார்.
பாபுராவ் பாட்டீல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜான்கி முதியோர் இல்லத்தில் நுழைந்தார். முதியோர் இல்லம் வரையிலான அவரது பயணம் மிகவும் கடினமானது.
மனைவி இறந்த பிறகு, குழந்தைகளுடனான பாபுராவின் உறவு முறிந்தது. இதற்கிடையில், கொரோனாவின் கொடூரமும் தொடங்கியது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு கொஞ்சம் ஆதரவு தேவைப்பட்டதால், சில காலம் அண்ணனுடன் தங்கி, கடைசியில் முதியோர் இல்லத்திற்கு வர வேண்டியதாயிற்று.
75 வயது பாபுரா
காதலர் தினத்தன்று தோன்றிய திருமண சிந்தனை
நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் இறந்த பிறகு, அனுசுயா தனிமையாக உணர்ந்தார், பாபுராவ் பாட்டீலின் நிலையும் அப்படித்தான் இருந்தது.
பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று, ஒரு கல்லூரியில் முதியோர் இல்லம் மூலம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள சூழலைப் பார்த்த பாபுராவ் பாட்டீல் மீண்டும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதியோர் இல்லத்துக்கு திரும்பிய பாபுராவ், அனுசுயா ஷிண்டே முன் இளைஞனைப் போல தன் காதலை வெளிப்படுத்தினார்.
காதலைத் தெரிவித்த போது, பாபுராவ் அனுசுயாவுக்கு ரோஜா பூவையும் கொடுத்தார், ஆனால் அந்த நேரத்தில் அனுசுயா அவரது காதலை ஏற்கவில்லை.
அவர், நான்கு மாதங்களுக்கு முன்புதான் கணவரை இழந்தார். அவர் அந்தச் சோகத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை, அதனால், பாபுராவிடம் சிறிது அவகாசம் கேட்டார்.
பாபுராவும் அனுசுயாவும் ஒருவருக்காக ஒருவர்
இதற்கிடையில், பாபுராவ் பாட்டீலுக்கும் அனுசுயா ஷிண்டேவுக்கும் இடையே ஏதோ நடப்பதாக முதியோர் இல்லத்தை நடத்தி வந்த பாபாசாகேப் பூஜாரி சந்தேகப்பட்டார்.
அப்போது பூஜாரி அனுசுயா ஷிண்டே பாபுராவ் பாட்டீலை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்று கேட்டார்.
இதையடுத்து முதியோர் இல்லத்தில் இருவருக்குள்ளும் விவாதம் தீவிரமடைந்தது. அனுசுயா ஷிண்டே, பூஜாரியிடம் திருமணம் செய்து கொண்டால், சமூகம் என்ன சொல்லும், நிறுவனத்தில் அதன் தாக்கம் என்ன? என்று கேட்டார்.
இந்த அச்சம் காரணமாக அனுசுயா ஷிண்டே அப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.
முதியோர் இல்ல நிர்வாகி உதவியுடன் திருமணம்
கடைசியில் பூஜாரி, இதில் தலையிட்டுத் திருமணம் செய்து வைத்தார். கடைசியில் பாபுராவ் காதலின் முன் அனுசுயா ஷிண்டேவின் தயக்கம் தோற்று சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லம் மூலம் இருவரும் புது ஜோடி போல் முறைப்படியும் சட்டப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகும் இந்தத் தம்பதியினர் முதியோர் இல்லத்தில்தான் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதியோர் இல்லங்களில் கழிப்பதாகக் கூறுகிறார்கள்.
“திருமணம் என்பது வெறும் உடல் இன்பமோ குழந்தைப் பேறோ அல்ல. ஒருவரையொருவர் ஆதரிப்பது. அதனால்தான் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தாலும் இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்” என்கிறார் பாபுராவ்.
அவர், “எங்களுக்கு இப்போது மிச்சமிருக்கும் வாழ்வில், சுக துக்கங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.