என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை: நடிகை குஷ்பு திரைப்பட வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு சுந்தர் அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
“பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த கொடூரம் ஆறாத வடுவாக மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார்.
என் அப்பா என் அம்மாவை அடிப்பதையும், தன் ஒரே மகளான என்னையும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதையும் தனது பிறப்புரிமையாக நினைத்தார்.
என்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியபோது எனக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. 15 வயது வரை அது தொடர்ந்தது.
16 வயதில்தான் நான் அப்பாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். இதைச்சொன்னால் என் அம்மா என்னை நம்ப மாட்டார் என்ற பயம் எனக்கு இருந்தது.
காரணம் தனக்கு என்ன துன்பம் கொடுத்தாலும் என் அப்பாவை தன்னுடைய கடவுளாகவே நினைத்தார் அம்மா.
நான் 16 வயது தொடக்கத்தில் அப்பாவுக்கு எதிராகப் போராடினேன். இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபின் குஷ்பு தன்னை குறித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.