♠ மத கொண்டாட்டத்தில் வெடித்த மோதலின்போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை.
♠ ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மொகாலி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (வயது 24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கனடா சென்றார்.
அங்கு வாழ்ந்து வந்த பிரதீப் சிங் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் சிங் கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
குர்தாஸ்பூரில் உள்ள தனது சொந்த ஊரான காசிகோட் கிராமத்திற்கு வந்த அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அனந்தபூர் சாகிப்பில் ஹோலா மொஹல்லா என்ற சீக்கிய கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதீப் சிங் நேற்று பங்கேற்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட சண்டையில் பிரதீப் சிங் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பிரதீப் சிங்கிற்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நிரஞ்சன் சிங் தான் வைத்திருந்த ஆயுதத்தால் பிரதீப் சிங்கின் வயிற்றில் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிரதீப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நிரஞ்சன் சிங்கை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி நிரஞ்சன் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூட்டம் அதிகம் இருந்த இடத்தில் காரில் வந்த கும்பல் ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் பிரதீப் சிங்கை அந்த கும்பல் கொலை செய்ததாக பிரதீப்பின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று பிரதீப் சிங், சீக்கியர்களின் ஒரு பிரிவான நிகங்க் பிரிவினரின் பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தார்.
எனினும், அவர் எந்த நிகங்ங் குழுவுடன் தொடர்புடையவரா என்பது உறுதி செய்யப்படவில்லை என மொகாலி சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.