கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிப்பறையில் பிளாஸ்டிக் கூடையொன்றுக்குள் வைத்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் என அடையாளங் காணப்பட்ட இளைஞர் ஒருவரும் , யுவதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் ரயிலின் கழிப்பறையில் சிசுவொன்று காணப்படுவதாக பயணிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய , கோட்டை புகையிரத நிலைய பாதுகாப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசுவை மீட்டுள்ளனர்.

பொலிஸாரால் மீட்க்கப்பட்ட சிசு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இதன் போது சிசுவை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்தியர்கள் சிசு தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் , பிறந்து ஒரு வாரமாக இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு சிசுவை கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையிலேயே இன்று சனிக்கிழமை 26 வயதான இளைஞன் ஒருவரும் , 25 வயதான யுவதியொருவரும் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தெஹிவளை பிரதேசத்தில் பணி புரிந்து வந்துள்ளார். திருமணமாகாத நிலையில் குறித்த யுவதி கருவுற்றிருந்ததை அறிந்த நபர் அவரை கொழும்பிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.

இந்நிலையிலேயே கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் யுவதி கொஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply