நாம் எதிர்வருங்காலங்களில் கடன்களைப்பெற்று, அவற்றை எவ்வித வருமானத்தையோ அல்லது இலாபத்தை ஈட்டித்தராத பாரிய செயற்திட்டங்களில் முதலீடு செய்யப்போவதில்லை.
மாறாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை ஊக்குவிப்பதிலேயே தற்போது விசேட கவனம்செலுத்தியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதித்தீர்மானம் இன்று (20) வெளியாகவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் அதனைக் கையாள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு பெருந்தொகையான கடனை வழங்கிய நாடு என்ற ரீதியில் சீனாவின் கரிசனைகளை நாம் புரிந்துகொள்கின்றோம்.
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை மற்றும் அதுகுறித்த கலந்துரையாடல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்கவில்லை.
மாறாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துப் பல்தரப்புப்பங்காளிகளும் அதில் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே அவர்களின் (சீனாவின்) நிலைப்பாடாகும்.
எனவே இங்கு கடன்மறுசீரமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே பிரச்சினையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அனைத்து இருதரப்புக் கடன்வழங்குனர்களும் ஒரே விதமாக நடத்தப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எந்தவொரு நாடும் விசேடமாகக் கையாளப்படாது.
தற்போது நாம் கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கான ஆற்றலை மீண்டும் அடைந்துகொள்வதிலேயே கவனம்செலுத்தியிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை ‘அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்வது குறித்து சீனா முன்மொழிந்துள்ளது.
இதுபோன்ற பாரிய செயற்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும், அதற்காகப் பெறப்பட்ட கடன்களும் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு ஏதோவொரு வகையில் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அவ்வாறிருக்கையில் அதனையொத்த செயற்திட்டங்களுடன் முன்நோக்கிப் பயணிப்பது ஏற்புடையதாக அமையுமா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, ‘நாம் கடன்களைப்பெற்று, எவ்வித வருமானமோ அல்லது இலாபமோ கிடைக்கப்பெறாத பாரிய செயற்திட்டங்களில் அதனை முதலீடு செய்யமாட்டோம்.
மாறாக புதுப்பிக்கத்தக்க சக்திவலு, வலுசக்திப் பாதுகாப்பு, சுற்றுலா போன்ற துறைகளில் அதிக முதலீடுகளை ஊக்குவிப்பதிலேயே பெரிதும் கவனம்செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மிகமோசமான காலப்பகுதி கடந்துவிட்டதாகவும், மிகக்கடினமான தீர்மானங்களை ஏற்கனவே மேற்கொண்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சப்ரி, அதன் ஓரங்கமாகவே வரி வீதங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்றவற்றுக்கான விலைகள் தற்போது நடைமுறையிலிருக்கும் விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கடினமான மறுசீரமைப்புக்கள் இன்னமும் அமுலில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசுக்குச் சொந்தமான ஸ்தாபனங்களின் மறுசீரமைப்பு, பொதுத்துறை மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு விசேட முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.