காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஏற்கெனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் கஜேந்திரன் (50) 90 சதவீதமும், சசிகலா (45) 100 சதவீதமும், ஜெகதீசன் (35) 95சதவீதமும், ரவி (40) 90 சதவீதமும், உண்ணாமலை (48) 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாமலை என்ற பெண் தவிர 3 ஆண்களும் 1 பெண்ணும் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் தற்போது சசிகலா (வயது 45 ) என்ற பெண்மணி இறந்துவிட்டார். இவருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் இறந்து விட்டனர்.
என்ன நடந்தது?
தீ விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த, பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அந்த நேரத்தில் குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். பலத்த வெடிசத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.
தீ மளமளவென பரவியதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
நடந்த சம்பவத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேல் சிகிச்சைக்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புமணி கோரிக்கை
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய வெடி ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஏதேனும் விபத்துகள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.