இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு, அந்நிதியத்தின் நிறைவேற்றுச் சபை திங்கட்கிழமை (20) ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த இணக்கப்பாட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்கு, ஆறரை மாதத்துக்கு மேல் செல்வதற்கு சீனாவே காரணமாக இருந்தது.

ஏனெனில், இலங்கைக்கு கடன் வழங்கியிருக்கும் நாடுகள் அக்கடன்களை மறுசீரமைக்க உடன்பட்டால் மட்டுமே, நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை மேற்படி இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என்று அந்த இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி, கடன் வழங்கிய நாடுகளில் சீனா, தாம் வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதற்கான உத்தரவாதத்தை மிகத் தாமதித்தே வழங்கியது.

நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலை அடுத்து, இலங்கையில் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக சில அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், நாணய நிதியம் தாம் வழங்க இருக்கும் 2.9 பில்லியன் டொலரில், முதல் கட்டமாக 330 மில்லியன் டொலரை மட்டுமே உடனடியாக வழங்கப் போகிறது.

ஆனால், உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கையில் மூன்று வர்த்தக வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் வழங்கப் போவதாக பெப்ரவரி 27ஆம் திகதி அறிவித்து இருந்தது.

நாம், ஏற்கெனவே ஒரு கட்டுரையில் கூறியதைப் போல், நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் கடன் தொகை, நாட்டில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இல்லை. ஆயினும், அந்நிதியத்தின் தலையீட்டால், இலங்கை வேறு விதமாகவே பயன் பெறப் போகிறது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கை மத்திய வங்கி, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்தது. இதன் மூலம் இலங்கை, தாம் வங்குரோத்து அடைந்த நாடாக அறிவித்தாகவே கருதப்படுகிறது.

எனவே, அதன் பின்னர் இலங்கைக்கு வெளிநாட்டு கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நாணய நிதியம் தற்போது இலங்கையின் நிதி நிர்வாக விடயத்தில் தலையிட்டுள்ளது என்ற உத்தரவாதத்தின் காரணமாக, வெளிநாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முன்வருகின்றன. இதுவே நாணய நிதியத்தின் பிரதான உதவியாக கருதப்படுகிறது.

அத்தோடு, நாணய நிதியத்தின் தலையீட்டால், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அக்கடன்களை மறுசீரமைக்க (restructuring) அதாவது, கடனில் ஒரு பகுதியையோ அல்லது வட்டியில் ஒரு பகுதியையோ அல்லது அந்த இரண்டிலும் ஒரு பகுதியையோ கழித்துவிடவும் அக்கடன்களை ஒத்திப் போடவும் முன்வந்துள்ளன.

இம்மாத ஆரம்பத்தில், டொலரோடு ஒப்பிடுகையில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்த போதிலும் அப்பெறுமதி மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறது.

பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தவோ, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவோ கைத்தொழில்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ, நாட்டில் போதியளவில் வெளிநாட்டுச் செலாவணி இல்லை.

புதிதாக கடன் பெற்றாவது அப்பணிகளை செய்யவும் நாடு வங்குரோத்து அடைந்திருப்பதால் எவரும் கடன் வழங்க முன்வருவதும் இல்லை.

இலங்கை பொருளாதார ரீதியில் தலைதூக்க நாணய நிதியத்தின் இந்த உதவியைத் தவிர, வேறு எதுவுமே இல்லை.

அதுவே, நேற்று முன்தினம் (20) நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை எடுத்த முடிவின் முக்கியத்துவமாகும்.

நாணய நிதியமும் இலங்கை அரசாங்கமும் செய்து கொண்ட அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை, நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிராகரிக்கும் என்ற அச்சம் எவரிடமும் இருக்கவில்லை.

எனவே, அந்த ஒப்புதல் கிடைத்தவுடன் உலக வங்கியிடமும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் முதலாவது தொகை நிதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஏழாம் திகதி பாராளுமன்றத்தில் கூறினார்.

அந்த இரு நிறுவனங்களிடமும் ஜப்பானிடமும் அரசாங்கம் சுமார் மூன்று பில்லியன் டொலர் கடன் பெறவிருப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ. ஏ விஜேவர்தன நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

ஒரு நாடு, தமது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்தால், அந்நிலையிலிருந்து மீள்வதற்கு ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும்.

அந்த வழி எதுவாக இருந்தாலும் அதற்குப் பணம் வேண்டும்; அதற்கும், கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. அது தான் இப்போது நடைபெறுகிறது என்றால், அதனை எவராலும் எதிர்க்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டிலான இந்தத் திட்டம், நாட்டை வங்குரோத்து அடையும் நிலைக்கு தள்ளுவதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் நாணய நிதியத்தின் உதவியைப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிய போதும், மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஆலோசனையின் பேரில் அவர் அதற்கு உடன்படவில்லை.

பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நிதி மற்றும் சட்ட ஆலேசனைகளை வழங்குவதற்காக ‘லஸார்ட் மற்றும் கிளிபர்ட் சான்ஸ்’ என்ற சர்வதேச நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டன.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலைமையிலான குழுவால் இந்த நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன.

அக்குழுவின் ஆலோசனைப் படியும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் படியுமே சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் இதுவரை முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தாலும் அல்லது அவர் பதவி துறந்ததன் பின்னர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து இருந்தாலும் இதுவரை நடைபெற்ற இவ்விடயங்கள் மாறப் போவதில்லை.

ஏனெனில் நாணய நிதியமும் மேற்படி ஆலோசனை வழங்கும் நிறுவனங்களும், எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும், அவற்றின் ஆலோசனைகளை மாற்றிக் கொள்வதில்லை.

உள்நாட்டில் அரசாங்கத்தின் நிதி நிலையை சீர்செய்வதிலும் நாணய நிதியம் எந்த நாட்டுக்கும் ஒரே விதமான ஆலோசனைகளையே வழங்குகின்றன.

எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும்டு அந்நிதியம் அரச செலவினங்களை குறைக்குமாறும் உள்ளூலிருந்தே அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுமாறுமே எப்போதும் கூறுகிறது.

செலவினங்களைக் குறைக்க, நலன்புரி நடவடிக்கைகள், மானியங்கள் ஆகியவற்றை குறைக்குமாறும் இரத்துச் செய்யுமாறும் அது கூறும்.

வரிகளை அதிகரித்து, சில பொருட்களினது விலையையும் சேவைகளினது கட்டணத்தையும் அதிகரித்துடு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கும்.

இவை, நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளாகும். தற்போதும் அந்நிபந்தனைகளின் பிரகாரமே அரசாங்கம் மின்சார கட்டணத்தையும் வருமான வரியையும் முன்னொருபோதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமானச்சேவை நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை ஆகியவற்றை விற்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவேதான், நிறுவனங்களை ‘மறுசீரமைப்பதன்’ மூலம் அரசாங்கம் மூன்று பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தைப் பெறத் திட்டமிட்ட இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி, டிசெம்பர் 15 ஆம் திகதி ‘ரொய்டர்ஸ்’ செய்திச் சேவையிடம் கூறியிருந்தார்.

நாணய நிதியத்தின் இந்த நிபந்தனைகளின் காரணமாக, பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

இந்நிபந்தனைகளை நிறைவேற்றுவதோடு குறைந்த வருமானம் பெறுவோருக்கான சமூக பாதுகாப்பு வலையை (social safety net) அமைக்க வேண்டும் என்று நாணய நிதியமும் அரசாங்கமும் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையில் கூறப்படுகிறது.

ஆயினும், நடைமுறையில் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. எனவேதான், இடதுசாரி கட்சிகள் 1960களில் இருந்தே சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதை விரும்புவதில்லை.

இந்த விடயத்தில், உதவி பெறும் நாடுகளின் கருத்துகள் பெரிதாக பொருட்படுத்தப்படுவதில்லை.

அந்நாடுகளின் அரசாங்கங்களே, அவற்றின் பொருளாதாரம் சீரழியவும் அப்பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போனதற்கும் காரணமாயின.

எனவே, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பும் விடயத்தில் அந்நாடுகளின் தலைவர்களினதும் அதிகாரிகளினதும் கருத்துகளை பொருட்படுத்துவதில் அர்த்தம் இல்லை என நாணய நிதியம் கருதுவதாக இருக்கலாம். அதுவும் ஒரு வகையில் நியாயம் தான்.

நாணய நிதியம், அரசாங்கத்தின் செலவினங்களை குறைத்து, வருமானத்தை அதிகரித்து, வெளிநாட்டுக் கடன்களை ஒத்திப் போடுவதற்கு உதவியளித்து, அந்நாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் மேலும் கடன் பெறும் சந்தர்ப்பத்தை அளித்து, தாமும் சிறியதொரு கடனை வழங்கி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைக்க அரசாங்கத்துக்கு உதவுவதை மட்டுமே செய்கிறது.

‘Breathing space’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் அந்த நெருக்குதல் குறைந்த அவகாசத்தை பாவித்து, நாட்டை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், அரசாங்கத்திடம் அதற்கான எந்தவொரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

-எம்.எஸ்.எம். ஐயூப்-

Share.
Leave A Reply