அண்மையிலே இலங்கையில் குறிப்பாக திருகோணமலையில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு இராணுவத் தள வசதிகளை உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தகிறது என்றொரு பேச்சு உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் முக்கிய ஆய்வுப்பொருளாக அமைந்து வருகிறது.
இந்த ஆய்வுகளில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற சிந்தனையில் பல்வேறு சிந்தனை ஒட்டங்கள் எழுந்திப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.
அமெரிக்கா திருமலையில் குடிவருவது நல்லதா கெட்டதா என்பதற்கு அப்பால் அமெரிக்காவுடன் நட்புப்பாராட்டுவது குறித்த தனது கூற்றில் அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும் பெயர்போன யதார்த்த அரசியல் சிந்தனையாளருமான கென்றி கீசிஞ்சர், கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் தரப்புகளுக்கு கொடுத்த ஒரு பிரபல்யமான அறிவுரையாகவும் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அக்கூற்றை இங்கே குறிப்பிடுவது நல்லது. அதாவது அமெரிக்காவுடன் எதிர்த்து நிற்பவர்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்லது அமெரிக்காவின் சவால்கள்.
ஆனால் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுவோர் அது சாவுக்கு சமமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார்.
இதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க நட்பை பேணிய உக்ரேன் தற்பொழுது அதற்கான பலனை அனுபவித்து வருகிறது. அனால் கென்றி கீசிஞ்சரினாலேயே ஆரம்பத்தில் கையாளப்பட்டவர்கள் தான் ஈராக்கிய குர்தீஸ் மக்கள்.
இவர்கள் பல தசாப்தகால சோதனைகளுக்குப் பின்பு 2003இல் அமெரிக்க படைகள் ஈராக்கிணுள் படையெடுத்து இருபது ஆண்டுகளின் பின்பு தற்போது தமது அரசியல் சுதந்திரத்தை அனுபவித்து வருபவர்களாக காணப்படுகிண்றனர். இது அமெரிக்க கையாள்கையால் ஏற்பட்ட நன்மை என்ற வகையில் பிரசாரம் ஒன்று சர்வதேச பத்திரிகைகளில் வலம் வருவதை காண கூடியதாக உள்ளது.
சுதந்திரமான அரசியல் மட்டுமல்லாது, குர்தீஸ் மக்கள் பாரிய வியாபாரத் தளங்கள், வீடு அபிவிருத்தி மற்றும் விற்பனையாளர்களின் இடங்கள் எனப் பலவகைப்பட்ட முன்னேற்றங்களை கண்ட வருகின்றன. ஈராக்கிய குர்தீஸ்தான் என்று அழைக்கப்படும் தேசத்தின் தலைநகரான இர்பில் அகண்ட பிரதான தெருக்களின் வடிவமைப்பகளால் பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது.
அரசியல் ரீதியாக ஈராக்கின் அரச பிராந்தியத்தின் கீழ் இன்னமும் இருப்பதால் அரைச்சுதந்திர குர்தீஸ் பிராந்தியமாக கருதப்படுகின்ற போதிலும் பொதுவாக்கெடுப்புகள் குறித்த பேச்சகள் இடம்பெறுகின்றது.
அதேவேளை ஈராக்கிய தலைநகரான பக்தாத் அரசாங்கத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுப் பிரிவினையைத் திசை திருப்பும் வகையில் ஈரக்கிய ஜனாதிபதி ஒரு குர்தீஷ்க்காரராகவும் பிரதமர் ஒரு ஷியா இஸ்லாமியராகவும் பாராளுமன்ற தலைவர் ஒரு சுன்னி இஸ்லாமியராகவும் இருப்பதற்குரியவகையில் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசியல் பலம் கொண்டவர்களாக தற்போது குர்தீஸ் தரப்பினர் காணப்படுகிண்றனர்.
இதற்கும் சவாலாக குர்தீஸ் உட்கட்சி முரண்பாடுகளும் நாட்டில் நிலவும் ஊழலும் விடுதலை நோக்கிய பயணத்தை பின் நோக்கி தள்ளுவது மட்டுமல்லாது பெரும் தாக்கங்களையும் விளைவித்து வருகிறது
1991ஆம் ஆண்ட ஈராக் மீது அமெரிக்கா பெரும்படை எடுப்பொன்றை நடாத்திய போது ஆகாயத்தில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
அந்தக் காலப்பகுதியிலேயே தருணம் பார்த்து திட்டமிட்டு காத்திருந்த குர்தீஸ் தலைவர்கள் ஒருநடை முறை அரசை உருவாக்கினர். அந்தத் தருணத்திலேயே தமது அரச நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டதாகவும் பாராளுமன்றம், அரசாங்கம் என்பன தயார்படுத்தப்பட்டதாகவும் குர்தீஸ் நிறுவனர்கள் கூறுகின்றனர்.
ஆனால் குர்தீஸ் உள்ளகக் கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக போட்டியாளர்கள் மத்தியில் ஆயுத போராட்டமாக வெடித்தது.
இது குர்தீஸ் உள்ளக யுத்தமாக மாறிபோயிற்று. காலப்போக்கில் ஜனநாயக இணக்கப்பட்டிற்கு வந்த எதிர்த்தரப்பினர் ஈராக்கின் அரசியலில் பங்கு பற்றும் அதேவேளை ஈராக்கிய வளர்ச்சியில் ஒருதரப்பினரும் தேசிய சுயநிர்ணய உரிமையை குர்தீஸ் மக்கள் மத்தியில் உருவாக்கவதில் ஒருதரப்பினருமாக இணைந்து செயற்பட்டனர்.
குர்தீஸ்தானில் மிகப்பாரியளவில் எண்ணெய் வளமுள்ளது. இதன் காரணமாக மிக விரைவாக அந்நாடு தனது வளர்ச்சிகளை கண்டு வருகிறது. பொருளாதார வளம் அதிகமாகச் சேருவதால் ஊழல் பெரும் தாக்கத்தை விளைவித்து வருகிறது. எண்ணெய் வயல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், கட்டட மீள் கட்டுமானப் வேலைகளில் உள்ளவர்களும் மிக அதிகமாக வருமானங்களை பெற்று வருகின்றனர்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் அரச சேவைகளில் உள்ளவர்களுக்கு பிந்திய சம்பளக் கொடுப்பனவுகள் போன்ற நிர்வாகம் சீர்கெட்ட நிலையும் பெருந்தாக்கத்தை விளைவித்தும் வருகிறது. இதனால் பெரும் தொகையான இளம் சமுதாயத்தினர் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறும் சிந்தனையிலேயே உள்ளனர்.
குர்தீஸ் மக்கள் காலசார ரீதியாகவும் பண்பாடுகளையும் அடிப்படையில் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு தாய் நிலம் கிடைத்து விட்டது என்ற நிலை இருக்கின்றது.
ஆனால் பொருளாதார திட்டமிடல் அரசியலில் கட்சிகளின் மத்தியில் மோதல் போன்றன மட்டுமல்லாது, ஈராக்கின் மூன்றாவது பெரிய சிறுபான்மை இனமாக துருக்மன் இனம் உள்ளது. துருக்மன் இனம் தற்பொழுது குர்தீஸ்களின் மேலாண்மை குறித்து கரிசனைகனை கொண்டுள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்தும் வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் உளவு நிறுவனங்கள் உள்ளக முரன்பாடுகளை நன்கு கற்றறிந்து குர்தீஸ் அரசியலில் தமது செல்வாக்குகளையும் கொண்டுள்ளனர். ஆக மீண்டும் அரச நிர்வாகத்துக்கு வந்துள்ள நசுக்கப்பட்ட இனம் மீண்டும்
அதே ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற சுற்று வட்டத்துக்குள் வந்து நிற்பதையே காணக் கூடியதாக இருக்கிறது.
அது மட்டுமல்லாது இளம் சமுதாயத்தினர் குர்தீஸ் பிராந்தியத்தில் தமக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக உணரவில்லை என்பது மிக முக்கியமான ஒரு அரச நிர்வாக குறையாகவே மேலைத்தேய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தநிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களின் தலையீடுகளே என்பது குர்தீஸ் உள்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களும் கட்டட ஒப்பந்த நிறுவனங்களும் தமது வருமானத்தை முக்கிய கருத்தாக கொண்டு செயற்பட்டு வருகின்றன. ஆட்சியில் உள்ளவர்கள் தமது நலன்களை இந்த நிறுவனங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதிலேயே அதிக கரிகனை கொண்டுள்ளனர் என்பது உள்நாட்டு சிந்தனையாளர்களின் பார்வையாகும்.
ஆக, இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தமது விருப்புகளை வெளிப்படுத்தம் பொழுது ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்களையும் அவற்றை கையாள்வது குறித்த சிந்தனைகளையும் கொண்டிருப்பது முக்கியமானதாகிறது.
குர்தீஸ் இனமக்களின் அனுபவங்கள் ஊடாக பார்க்கும் பொழுது வெளிப்படுகிறது அது சிறந்தவொரு முன்னுதாரணமாக வெளிப்பட்டு நிற்கின்றது.
அதனடிப்படையில், தமிழ்பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு தமது மூலோபயத்தினை வகுத்துக்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். அதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை முறையாக திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
-லோகன் பரமசாமி-