கோட்டாபய ராஜபக்ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும்.
இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை, அல்லது தலைவர்கள் என்று யாருமிலர். நாடெங்கிலும், ஆங்காங்கே மக்கள் தாமாகக் கூடி, தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மக்கள் போராட்டங்களையும் ‘அறகலய’ என்ற சொல்லையும் தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளதாக, தமக்குள் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் இலங்கையின் இடதுசாரிக் கூட்டம், இந்த மக்கள் எழுச்சியை தம்முடையதாக்க பகீரதப் பிரயத்தனப்பட்டன.
பொதுமக்கள் தாமாகக் கூடும் இடங்களை, இந்த இடதுசாரிக் கூட்டங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கின.
தம்முடையவர்களையும், தம்மோடு இயைந்து இயங்கக்கூடிய அரசியல் ஆசையுள்ள சிலரையும், வேறு நிகழ்ச்சிநிரலில் மக்கள் போராட்டத்தில் சங்கமித்துள்ள ஏனைய சக்திகளையும் ஒன்றிணைத்து, இந்த இடதுசாரிகள் ‘மக்கள் போராட்டத்தை’ கையகப்படுத்த செய்த கைங்கரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஏதோ ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை தாமே தலைமையேற்று நடத்துவது போல, தினம் தினம் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதும், ‘போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்’ என்று தமது கோரிக்கைகளை முன்வைப்பதுமாக ‘அறகலய’ என்பதை தம்முடையதாக்கினர்.
அதுவரை காலமும், மிக அமைதியான வழியில் இடம்பெற்ற சாதாரண பொது மக்களின் மக்கள் எழுச்சிக்குள் வன்முறையும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் ஒழுங்கீனமும் இடதுசாரிகள் மக்கள் போராட்டத்தைக் கைப்பற்றிய பின்னர் நடந்தவை.
ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் எழுச்சியை, வன்முறை வெறியாட்டமாக்கியதில் ராஜபக்ஷர்களுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதேயளவு பங்கு இந்த இடதுசாரிக்கூட்டங்களுக்கும் இருக்கிறது.
இது அமைதி வழியில், அதுவரை காலமும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் அறத்தைக் குலைத்து, அதனை நாசமாக்கியது என்பதுதான் உண்மை.
மக்கள் எழுச்சியின் பின்னர் கோட்டா பதவி விலகிய பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப புதிய ஜனாதிபதிக்கு வாய்ப்பளிக்க சாதாரண பொதுமக்கள் போராட்டங்களிலிருந்து விலகிய போதும் கூட, ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்ற வார்த்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, இந்த இடதுசாரிகளும் அவர்களோடு கைகோர்த்துள்ள அரசியல் ஆசையுள்ள சிலரும், வேறு நிகழ்ச்சிநிரலில் மக்கள் போராட்டத்தில் சங்கமித்துள்ள ஏனைய சக்திகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்த பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
ஆனால், மக்கள் விளித்துவிட்டார்கள். ஆனாலும், விடாமல் ஏதோ ‘சிஸ்டம் சேன்ஞ்’ கொண்டுவரப்போவதாக அடிக்கடி போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் குழறுபடிகளையும் நடத்தி, நாடு பொருளாதாரப் பிறழ்விலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோட்டா ஐ.எம்.எப்க்குப் போகவில்லை; உடனடியாக ஐ.எம்.எப்இன் உதவியைப் பெற வேண்டும் என்று அன்று பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராடினார்கள். இன்று இந்த இடதுசாரிகள், “அரசாங்கம் ஐ.எம்.எப்ற்கு போகிறது; ஐ.எம்.எப்ற்கு போகக் கூடாது; அதனை நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று போராடுகிறார்கள்.
இந்த இடதுசாரிகளுக்கு நாடு பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீள வேண்டும்; மக்கள் ஓரளவேனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றெல்லாம் விருப்பமில்லை.
நாடு இன்னும் இன்னும் மோசமடைய வேண்டும். அதனால் விரக்தியுறும் மக்கள், அதிகாரத்தை எப்படியாவது இடதுசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரப்பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருக்கிறார்கள். நிற்க!
இந்த இடதுசாரிகள், ‘அறகலய’வின் போது, இன சௌஜன்யம் பற்றி நிறையப் பேசினார்கள். அதற்கான அடையாளமாகத் தமிழராக ஒன்றிரண்டு பேரை தம்முடைய மேடைகளில் ஏற்றியும் வைத்திருந்தார்கள்.
இந்த அடையாளம் தமிழர்களும், தாம் ஏதோ தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதிகள் போன்று எண்ணிக்கொண்டு அறிக்கைகள் விட்டுக்கொண்டும், ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லிக்கொண்டும், இடதுசாரிக் கூட்டத்தின் கீழ் ‘சிஸ்டம் சேன்ஞ்’ வந்தால், தமிழ் மக்களுக்கு உய்வு வரும் என்றும் கருத்துச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
இந்த அடையாளத் தமிழர்களுக்கு, அரசியல் ஆசை இருக்கிற அளவுக்கு அரசியல் அறிவு இல்லை. வீதியில் இறங்கிப் போராடுவதும், கைதுசெய்யப்படுவதும், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதும், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேரைச் சந்தித்துப் பேசுவதும் அரசியல் என்று நம்பிக்கொண்டிருக்கிற,
அதனால் தம்மால் பெரும் மாற்றத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டி எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையாகும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான மதிப்பும் மரியாதையும் இந்த அடையாளத் தமிழர்களுடன் கைகோர்த்து நிற்கும் ‘சிஸ்டம் சேன்ஞ்’காரார்களால் கூட வழங்கப்படாது என்பதற்கான மிக நல்ல உதாரணம் அண்மையில் இடம்பெற்றது.
‘சிஸ்டம் சேன்ஞ்’காரார்களின் முன்னிலை அமைப்புகளுள் ஒன்றான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், அதன் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் தலைமையில், யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரைச் சந்தித்திருந்தனர்.
இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமாரால், வசந்த முதலிகேயிடம் தமிழ் மக்கள் சார்பான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாக ஊடகவியலாளர் குமணன் பதிவுசெய்திருக்கிறார்.
தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட, தனித்த மொழி, மத, கலாசார அடையாளம் கொண்ட மக்கள் கூட்டம்; இணைந்த வடக்கு-கிழக்கு தமிழ்மக்களின் தாயகம்; தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு; அதன்பாலாக தமிழ் மக்களுக்கு தமது அரசியல் அடைவைத் தீர்மானிக்கும் உரிமையுண்டு; சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்பட்ட சர்வசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமது அரசியல் அடைவை தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியும்;
யுத்தக் குற்றம், மனிதவுரிமை மீறல் உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச பொறிமுறையின் கீழான விசாரணை நடத்தப்பட வேண்டும்; தமிழர் தாயகத்தை முற்றுகையிட்டுள்ள படைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்;
இலங்கை அரசியலமைப்பின் ஆறாம் திருத்தம் நீக்கப்பட வேண்டும்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படுவதுடன் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலை செய்யப்பட வேண்டும்; இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதன் மூலமே பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என்பவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவர்கள் வசந்த முதலிகேக்கு வழங்கிய கோரிக்கைகளின் சாரம் என்று ஊடகவியலாளர் குமணன் பதிவுசெய்கிறார்.
இதனை வசந்தவும், அவரது ‘சிஸ்டம் சேன்ஞ்’ தோழர்களும் ஏற்கலாம்; அல்லது நிராகரிக்கலாம். அவர்கள் ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது. இலங்கையின் இடதுசாரிகளில், சிறுபான்மையினர் அல்லாதவர்களில் பெரும்பான்மையினர் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும்கூட!
இலங்கையின் மிகப் பெரிய மாக்ஸிஸக் கட்சியான ஜே.வி.பிதான் இலங்கையின் மிகப்பெரிய பேரினவாதக் கட்சியும் கூட. அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச வாக்குகளும் ஆதரவும் கூட, பேரினவாத இடதுசாரி வாக்குகள்தான்.
தமிழ் மக்களின் மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்பது அவர்களால் என்றுமே முடியாத காரியம்.
சரி! அப்படியானால், இது எம்மால் முடியாது என்று நிராகரித்திருக்கலாம். அது குறைந்தபட்ச நேர்மையையாவது பிரதிபலித்திருக்கும்.
ஆனால், ஊடகங்களுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், தமக்கு யாழ்ப்பாணத்தில் எந்தக் கோரிக்கையும் யாராலும் விடுக்கப்படவில்லை என்று அறிக்கைவிடுகிறார்கள்! அப்படி கோரிக்கை தரப்பட்டதாகச் சொல்லும் செய்தி பொய் என்கிறார்கள். இதுதானா இவர்களின் ‘சிஸ்டம் சேன்ஞ்’? இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஏனைய அரசியல்வாதிகளை விட, இவர்கள் எந்த வகையில் மேம்பட்டவர்கள்?
இலங்கையின் அரசியலைப் புரிந்துகொள்ள, இலங்கையின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையின் இன முரண்பாட்டைப் புரிந்துகொள்ள, இலங்கையின் இனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். விடயம் முழுமையாகத் தெரிந்தால்தான், பிரச்சினையின் தன்மை விளங்கும். பிரச்சினையின் தன்மை புரிந்தால்தான், தீர்வுக்கான வழிபற்றி சரியாக யோசிக்கவேனும் முடியும்.
இது எதுவுமே தெரியாமல், புரியாமல், சும்மா ‘சிஸ்டம் சேன்ஞ்’, ‘சிஸ்டம் சேன்ஞ்’ என்று கத்துவதாலும், ஊடகங்களுக்குக் கருத்துச் சொல்லி தம்மைப் பெரும் அரசியல் சக்தியாக எண்ணிக்கொள்வதும் யாருக்கும் எந்தப் பயனையும் தராது. இதனை இந்த ‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களோடு கைகோர்த்துக்கொண்டு, நிற்கும் அடையாளத் தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
என்.கே அஷோக்பரன்