திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரு​கே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ​டிரைவராக இருந்தார்.

இவரின் மனைவி ​தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

​கோபிக்கும், அதே பகுதியில் வசித்துவரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே 2 ஏக்கர் பூர்வீகச் சொத்தை பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ​இருந்துவந்திருக்கிறது.

இந்தச் சொத்துப் பிரச்னை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு​ம்​ நடைபெற்றுவருகிறது.

​இந்த நிலையில், ​இன்று மாலை 4 மணியளவில் ​​​வழக்க​றி​ஞரைச் சந்திப்பதற்காக, ​தமயந்தி திண்டுக்கல்லுக்குத் ​தனியார் பேருந்தில் ​புறப்பட்டார்.

உலுப்பக்குடியி​லிருந்து திண்டுக்கலை நோக்கிச் ​சென்ற பேருந்தில் ​தமயந்தி ​​ஏ​றிய அதே பேருந்தில், ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார்.

கொலையான பெண்

​அந்தப் பேருந்து கோபால்பட்டியை அடுத்த வடுக்கப்பட்டி அருகே வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ​தமயந்தியின்​ கழுத்தில் வெட்டினார்.

இ​தைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்​டதால்​ உடனடியாக ​டிரைவர் பேருந்​தை நிறுத்தினார். இதற்கிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு, பேருந்திலிருந்து இறங்கி ​தப்பி ​ஓடினார்.

​பலத்த காயமடைந்த தமயந்தி ​பேருந்து சீட்டில் உட்கார்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சாணார்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.​ ​

பேருந்தில் பயணித்தவர்கள்

நிகழ்விடத்துக்கு வந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து தப்பியோடிய ராஜாங்கத்தைத் தேடிப் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

மாலை நேரத்தில் பேருந்துக்குள் வைத்து நடந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share.
Leave A Reply