வந்தாறுமூலை மயானத்திலுள்ள ஈமக்கிரியைகளை நடத்தும் இளைப்பாறும் மண்டத்தில் தற்கொலை செய்து கொண்ட வந்தாறுமூலை கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்த 82 வயதான 7 பிள்ளைகளின் தந்தை கணபதிப்பிள்ளை தங்கராஜா என்பவரின் உடலை அந்த  மயானத்திலிருந்து ஏறாவூர் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை 16.04.2023 மீட்டுள்ளனர்.

வழமையாக சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மனைவியின் கல்லறையைப் பார்த்து விட்டு அங்கே அமர்ந்திருந்து  மனைவிக்காக ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து விட்டு வரும் கணவன் இம்முறை மனைவியின் கல்லறையுள்ள மயானத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, செங்கலடி – ஏறாவூர் எல்லையில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றிலிருந்து தற்கொலை செய்து கொண்ட 43 வயதான விஜயரத்ன வீரசிங்ஹ முதியான்ஸலாகே டக்ளஸ் என்பவரின் சடலமொன்றையும் தாம் ஞாயிற்றுக்கிழமை 16.04.2023 மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை அம்பகஸ்வெவ, எல்லம்பலம, ஜயலகம பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதோடு அந்தச் சம்பங்கள் குறித்த மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கழுத்தில் சுருக்கிட்டு இவ்விரு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply