2022 மார்ச் 10 ஆம் தேதி செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த இரு நாடுகள்மீதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த உலக முறைமை மீதும் இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் இருக்கும்.

இந்த ஒப்பந்தம் எந்த மேற்கத்திய நாடுகளின் மத்தியஸ்தத்துடனும் செய்யப்படவில்லை, இது சீனாவின் மத்தியஸ்தத்துடன் நடந்துள்ளது. அமெரிக்காவுடனான சீனாவின் உறவு கடந்த பல ஆண்டுகளாக பதற்றமாக உள்ளது.

இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே மதம் மட்டுமின்றி அரசியல் வேறுபாடுகளும் இருந்து வந்துள்ளன.

செளதி அரேபியா மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு முடியாட்சியாக இருக்கும்போது, இரான் ஒரு இறைமை ஆட்சி நாடு அதாவது மத நடைமுறை உள்ள நாடு. அமெரிக்கா தனது எதிரிகளின் பிரிவில் இரானை வைத்திருக்கிறது.

யுக்ரேன் போரின் போது இரான் ரஷ்யாவை ஆதரித்தது. இதன் காரணமாகவும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் அதன் மீது கோபமாக உள்ளன.
விளம்பரம்

இதனுடன் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்காக, இரான் மற்றும் செளதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக ஏமனில் சண்டை இருந்து வருகிறது.

ஆனால் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

அதன் பெருமை செளதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் செல்கிறது. அவர் எம்பிஎஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

செளதி அரேபியா தொடர்பாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதாவது எம்பிஎஸ்ஸின் கனவு என்ன என்பதை இந்த வாரம் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

முகமது பின் சல்மான் யார்?

செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் 2015 இல் ஆட்சியில் அமர்ந்தபோது அது ஒரு எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.

ஏனெனில் அவர் ஏழு சகோதரர்களில் இளையவர் மற்றும் வாரிசுரிமைக்கு மிகக் குறைந்த உரிமையைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வரும் போது அவருக்கு வயது எண்பது.

அவர் செளதி அரேபியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன் பட்டத்து இளவரசரை நியமிப்பது அவரது முதல் பொறுப்பாக இருந்தது.

அவர் தனது மூன்றாவது மனைவிக்கு பிறந்த மூத்த மகனான முகமது பின் சல்மானை தனது வாரிசாக அறிவித்தார். செளதி அரேபியாவில் இறுதி முடிவெடுப்பவராக தற்போது அவர்தான் பார்க்கப்படுகிறார்.

இளவரசர் முகமது பின் சல்மானின் வயது ஏறக்குறைய முப்பது. MBS தொடர்பான எங்கள் முதல் நிபுணர், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் மத்திய கிழக்கு நிருபர் ஸ்டீபன் கெய்லின். இளவரசரின் இளமை அவரது தலைமைத்துவ பாணியில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

“எம்பிஎஸ், மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர். நவீன தொழில்நுட்பம் மற்றும் போக்குகளை நன்கு அறிந்தவர்.

செளதி அரேபியாவின் மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் பேர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள்.

எம்பிஎஸ் தன்னை அவர்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறார். அவர் அவர்களை ஈர்க்க விரும்புகிறார். அவர்களை மனதில் வைத்துக்கொண்டு முடிவுகளை எடுக்க விரும்புகிறார்,” என்றார் அவர்.

தனது இமேஜை மனதில் வைத்துக்கொண்டு செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்க எம்பிஎஸ் திட்டம் வகுத்துள்ளார்.

கச்சா எண்ணெய் நாட்டின் முக்கிய ஏற்றுமதியாகும். நாட்டின் பொருளாதாரம் அதை சார்ந்திருப்பதை குறைக்க அவர் விரும்புகிறார்.

“2016 ஆம் ஆண்டில், அவர் ‘விஷன் 2030’ என்ற முன்னோடி பொருளாதார மற்றும் சமூக மாற்றத் திட்டத்தை அறிவித்தார்.

இதன் கீழ் அவர் பொருளாதார மற்றும் சமூக தாராளமயமாக்கல் இலக்குகளை அமைத்துள்ளார்.” என்று ஸ்டீபன் கெய்லின் கூறுகிறார்.

சவுதி இளவரசரின் நோக்கம் என்ன?

தொழில்துறையில் செளதி அரேபியா வளர்ச்சியடைய, தொழிலாளர் மற்றும் பொதுத்துறையில் பெண்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்காக மகளிர் தொடர்பான விதிகளை தளர்த்த எம்பிஎஸ் முடிவு செய்தார்.

“பெண்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முன்பும் சேரலாம். ஆனால் அவர்கள் வேலை செய்வது தொடர்பாக நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.

செளதி அரேபியாவின் தொழிலாளர் படையில் பெண்கள் சுமார் 37 சதவிகிதம் உள்ளனர். முன்னதாக அவர்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனவே அவர்கள் வேலைக்குச்செல்ல ஒரு டிரைவர் தேவைப்பட்டார். இப்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. பெண்கள் தாங்களாகவே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்லலாம்,”என்று ஸ்டீபன் கெய்லின் தெரிவித்தார்.

இந்த முடிவுகள் நாட்டின் பல சமூக மரபுகளை உடைத்துவிட்டன என்பது வெளிப்படையானது. இந்த முடிவுகள் தொடர்பாக மதத் தலைவர்கள் அல்லது பிற துறைகளில் இருந்து வரும் எதிர்ப்பை நசுக்க MBS தயாராக இருந்தார். நாட்டின் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க பிரிவினர் மீதும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அவர் விரும்பினார்.

2017 ஆம் ஆண்டு நவம்பரில் தலைநகர் ரியாத்தில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நாட்டின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க 200 க்கும் மேற்பட்டவர்களை அவர் தடுப்புக்காவலில் வைத்தார். தாங்கள் தாக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் இவர்களில் பலர் பின்னர் குற்றம் சாட்டினர்.

இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை உலக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் நாட்டின் மீது இளவரசர் சல்மானின் பிடி வலுவடைந்தது.

இந்த சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, MBS வாரிசு வரிசையில் தனக்கு முன்னால் இருந்த தனது மூத்த உறவினரை வெளியேற்றியதுடன், பல மதத் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததாக ஸ்டீபன் கெய்லின் கூறுகிறார்.

அவர் தனது அதிகாரத்திற்கு ஏற்படக்கூடிய எல்லா வகையான சவால்களையும் முடித்து வைத்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தவை அவரை மேற்கத்திய நாடுகளுடன் மோதல் பாதையில் கொண்டு சேர்த்தன.

2018 அக்டோபரில் செளதி அரசின் விமர்சகரும் பத்திரிகையாளருமான ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச சமூகம் இந்த படுகொலைக்கு எம்பிஎஸ் மீது குற்றம் சுமத்தியது.

“அந்த சம்பவம் அவரது நற்பெயர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது செளதி அரேபியாவில் நடந்த, முன்பு கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிற மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்த்தது.

கஷோகியின் கொலைக்குப் பிறகு, கருத்து சுதந்திரத்தை தடுக்கும் நிகழ்வுகள் மீதும் மக்களின் கவனம் திரும்பியது,” என்று ஸ்டீபன் கெய்லின் குறிப்பிட்டார்.

செளதி அரேபியாவில் அதிக சுதந்திரம் கோரும் பெண்கள் கடுமையாக தண்டிக்கப்படுவது குறித்தும் பேச்சு தொடங்கியது. மறுபுறம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே நாளில் 81 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு விசாரணையின்றி கொல்லப்பட்டனர்.

இதை மேற்கத்திய நாடுகள் கவனித்தன. உலக கால்பந்து சங்கமான ஃபிஃபா, 2023 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளுக்கான, செளதி அரேபிய சுற்றுலா நிர்வாகத்தின் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்தது.

ஆனால் இந்த நிகழ்வுகள் MBS இன் பொருளாதார தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை பாதிக்குமா?

திரவ தங்கத்தின் இருப்பு

செளதி அரேபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய வியத்தகு திருப்புமுனை 1938 இல் ஏற்பட்டது. அங்கு மிகப்பெரிய எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு அடுத்த தசாப்தங்களில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானித்தது.

பில் ஃபாரன் பிரைஸ், எண்ணெய் எரியாற்றல் சந்தைகளின் ஆய்வாளர் ஆவார்.

“செளதி அரேபியாவில் அதிக எண்ணெய் இருப்பு உள்ளது என்பது காலப்போக்கில் நிரூபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் தொழில்மயமாக்கலின் எரிபொருளாக எண்ணெய் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. இந்தத் தேவையை பூர்த்தி சேய்யும் ஒரு நாடாக உலக பொருளாதாரத்தில் செளதி அரேபியா ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தது,” என்று அவர் கூறினார்.

1970கள் மற்றும் 1980களில், எண்ணெய் ஏற்றுமதியின் வருமானம் காரணமாக செளதி அரேபியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. நாட்டின் தேசிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான செளதி அராம்கோ இன்று உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.

“இந்த நிலைக்கு வர செளதி அரேபியா, மிகவும் வணிக ரீதியாக இயங்கும் செளதி அராம்கோ நிறுவனத்தை உருவாக்கியது.

இதனிடம் எண்ணெய் உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் ஏகபோக உரிமை உள்ளது. இது நாட்டில் வேலைவாய்ப்பை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

மேலும் இந்த நிறுவனம் எண்ணெய் மூலம் கிடைக்கும் லாபத்தை இந்தப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் முதலீடு செய்துள்ளது,” என்று நிறுவனத்தின் பயணம் பற்றி, பில் ஃபாரன் பிரைஸ் கூறுகிறார்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான OPEC இன் நிறுவன உறுப்பினராக இருப்பதால் செளதி அரேபியா, இப்போது பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.

செளதி அரேபியா எப்போதுமே உலகில் முக்கிய பங்களிப்பைக்கொண்டுள்ளது என்று பில் ஃபரோன் பிரைஸ் கருதுகிறார். தற்போது இப்பணியை இன்னும் சிறப்பான முறையில் அந்த நாடு செய்து வருகிறது.

உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் பத்து சதவிகிதம் செளதி அரேபியாவில் உள்ளது. இதன் காரணமாக அது எண்ணெயின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களுடன் அதாவது மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமீப காலமாக அது, சீனாவில் பெரிய பெட்ரோ கெமிக்கல் ஆலைகளை அமைக்கும் கிழக்கு நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளது.

“செளதி அரேபியாவுக்கும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அறிகுறி இது.

செளதி அரேபியாவிற்கும் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆழமான உறவு இப்போது இல்லை என்றே சொல்லலாம்,” என்று இந்த மாற்றம் குறித்து பில் ஃபரோன் பிரைஸ் குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் செளதி அரேபியா மற்றும் இரான் இடையேயான வரலாற்று ஒப்பந்தம் இதற்கு சான்றாகும்.

“இது சீனாவின் லட்சியங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல் இந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இப்போது இருதரப்பு அல்ல, மற்ற நாடுகளுடன் பலதரப்பு வர்த்தக உறவுகளை ஏற்படுத்த விரும்புகிறது என்பதைக்காட்டுகிறது.

பொருளாதாரத்தின் பிற துறைகளையும் மேம்படுத்தும் வேலைகளை பட்டத்து இளவரசர் தொடங்கியுள்ளார்,” என்று பில் ஃபார்ரோன் பிரைஸ் கூறுகிறார்.

பட்டத்து இளவரசரின் தொலைநோக்குத் திட்டம் 2030

எம்பிஎஸ்ஸின் ‘விஷன் 2030’ திட்டத்தைப் பற்றி சாட்ஹாம் ஹவுஸின் துணைத் தலைவரும் மத்திய கிழக்கு நிபுணருமான சனம் வக்கீலிடம் பேசினோம்.

“விஷன் 2030, 2016-17 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எண்ணெய் ஏற்றுமதி மீதான செளதி அரேபியாவின் சார்பை குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை பன்வகைப்படுத்துவதாகும்.

நாட்டில் பிற தொழில்களை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் தனியார் தொழில்களை மேம்படுத்துதல் இதில் அடங்கும். இதன் மூலம் அவர்கள் நாட்டில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் மற்றும் அரசின் சுமையை குறைக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் நேரடியானதாகவும் தர்க்கரீதியானதாகவும் தோன்றுவதைவிட இந்தப்பணி மிகவும் சிக்கலானது.

“இது சவாலான பணி. பொருளாதாரத்தை அரசு திடீரென பன்முகப்படுத்த முடியாது. அதற்கு முன் இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அன்னிய முதலீட்டை ஈர்க்க வேண்டும். தொழில்துறையில் மக்களின் நாட்டத்தை வளர்க்க வேண்டும். இதற்கெல்லாம் நாடு தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். ஒழுங்குமுறை சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இவை அனைத்தும் விஷன் 2030 இன் ஒரு பகுதியாகும்,”என்று சனம் வக்கீல் கூறினார்.

விஷன் 2030 இன் கீழ், ஒரு அதிநவீன நகரமான நியான் சிட்டியை உருவாக்கும் திட்டமும் பட்டத்து இளவரசருக்கு உள்ளது, அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. நியான் சிட்டி என்பது எம்பிஎஸ்ஸின் யோசனை என்றும், 2045ஆம் ஆண்டுக்குள் தொண்ணூறு லட்சம் மக்களை இந்தப் பிரமாண்ட நகரத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் சனம் வக்கீல் கூறுகிறார்.

இது குறித்து சனம் வக்கீலுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. “நியான் சிட்டி என்பது எம்பிஎஸ்ஸின் கனவு. பறக்கும் கார்கள், அதிநவீன வசதிகள், எதிர்காலத்தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டிடங்கள் என நீங்கள் கனவு காணக்கூடிய அனைத்தையும் கொண்ட நகரமாக இது இருக்கும்.

பாலைவனத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நகரமாக இருக்கும். ஆனால் இது நிஜத்தில் இப்படி கட்டப்படுமா அல்லது கற்பனையில் மட்டுமே இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. செளதி அரேபியாவிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளிலும் இதுபோன்ற புதிய நகரங்களுக்கான திட்டங்கள் உள்ளன. ஆனால் இது போன்ற நகரங்களை கட்டமுடியவில்லை,” என்றார் அவர்.

ஒரு வகையில் நியான் சிட்டி, விஷன் 2030 இன் முழு வரைபடமாகும். இது மனித நாகரிகத்தில் ஒரு புரட்சியாக முன்னிறுத்தப்படுகிறது. அங்கு மிக அதிக முன்னுரிமை பெற்ற மக்கள் இருப்பார்கள். .

ஆனால் அதன் கட்டுமானத்தினால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் இருப்பதோடுகூடவே அதை எதிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்களும், நாட்டின் மனித உரிமை மீறல்களும் இத்திட்டத்திற்கான வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடையூறாக உள்ளன. ஆனால் செளதி அரேபியா உலகில் தனது முத்திரையை பதிக்க வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரிட்டனின் நியூ கேஸில் யுனைடெட் கால்பந்து கிளப் இப்போது செளதி அரேபியாவின் கைகளில் உள்ளது.

இப்போது செளதி அரேபியாவின் கண்கள், இருபது பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் மீது உள்ளதாகவும் வதந்திகள் உள்ளன.

செளதி அரேபியாவின் ஆட்சி மீதான எம்பிஎஸ்ஸின் உரிமைகோரல், இந்த மாற்றங்களின் வெற்றியைப் பொருத்து இருக்கும் என்று சனம் வக்கீல் கூறுகிறார்.

இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 இன் படி, ’நியோம்’ எதிர்காலத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக இருக்கும்

உலக அரங்கில் செளதி அரேபியா

செளதி அரேபியாவின் எதிர்காலத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் என்ன பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள, செளதி அரேபிவுக்கும் இரானுக்கும் இடையிலான சமீபத்திய தூதாண்மை ஒப்பந்தத்திற்குத் திரும்புவோம்.

எங்கள் நிபுணரான டினா அஸ்ஃபாண்டியாரி, சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த மத்திய கிழக்கு ஆலோசகர் ஆவார்.

“இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கிற்கு மிகவும் முக்கியமானதாக நிரூபணமாகக்கூடும். இரானும் செளதி அரேபியாவும் பல தசாப்தங்களாக இந்த பிராந்தியத்தில் பரஸ்பர போட்டியாளர்களாக உள்ளன.

கடந்த காலங்களிலும் இருவருக்குமிடையிலான தூதாண்மை உறவுகளை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் இருவருக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. எனவே என்ன நடக்கிறது என்பதை நாம் சில மாதங்களுக்கு பொருத்திருந்து பார்க்க வேண்டும்,”என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் மேற்கத்திய நாடுகளின் கவலைக்கு முதல் காரணம் சீனா இந்த ஒப்பந்தத்தை செய்து வைத்ததுதான். இரண்டாவது கவலை என்னவென்றால், இரானின் மேற்கத்திய நாடுகளுடனான உறவு ஏற்கனவே மோசமாக இருந்தது. அந்த நிலையில் யுக்ரேன் போரில் அது ரஷ்யாவுக்கு உதவுகிறது.

டினா அஸ்ஃபாண்டியாரி இந்த நிகழ்வை முக்கியமானதாக கருதுகிறார்.

இரான் – செளதி அரேபியா ஒப்பந்தத்தை செய்துவைக்கும் சீனாவின் உயர்மட்ட தூதாண்மை அதிகாரி வாங் யீ.

“அமெரிக்காவுடனான அதன் உறவுகள் ஏற்கனவே ஏற்ற இறக்கங்களைக்கொண்டதாக இருக்கும் நிலையில், செளதி அரேபியா சீனாவுக்கு நெருக்கமாகச்செல்வது மிகவும் முக்கியமானது.

செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது, அதே நேரத்தில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும் விரும்புகிறது. அதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்று தோன்றுகிறது.

அத்தகைய சூழ்நிலையில் அது மற்ற நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சீனா அதற்கு முக்கியமானது.” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

செளதி அரேபியா தொடர்பான, செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் திட்டம் என்ன என்ற நமது முக்கிய கேள்விக்கு வருவோம்.

எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பன்மயப்படுத்த அவர் விரும்புகிறார். இதற்கு சமூகத்தை தாராளமயமாக்கி தனியார் துறையை வளர்க்க வேண்டும். அதே நேரத்தில் இரானுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.

” இரானுடனான செளதி அரேபியாவின் ஒப்பந்தம் MBS-ன் திட்டங்களின் பாதையில் செல்கிறது. அவர் ஒரு செல்வாக்கு மிக்க மற்றும் சுதந்திரமான தலைவராக தனது இமேஜை உருவாக்க விரும்புகிறார். செளதி அரேபியாவை உலகில் செல்வாக்குமிக்க நாடாக மாற்ற விரும்புகிறார்.

இதற்காக அவர் பல நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புகிறார். அவர் அதை புத்திசாலித்தனமாகச் செய்கிறார்,” என்று டினா அஸ்ஃபாண்டியாரி குறிப்பிட்டார்.

”அதே சமயம் நாட்டிற்குள் தனது அதிகாரப் பிடியை வலுப்படுத்த எதிரிகளை நசுக்குகிறார். இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் கோபம் நிலவுகிறது. இப்போது கிழக்கு நாடுகளை குறிப்பாக சீனாவை நோக்கி செளதி திரும்புவதற்கு இதுவே காரணம்.”

ஆனால் இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கும், அதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதைப் பொருத்தே அவருடைய திட்டம் அமையும். இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது.

-மூலம்:  பிபிசி தமிழ் செய்தி-

 

Share.
Leave A Reply