14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, சிறுமி 6 மாத கருவுற்றிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவுக்கார இளைஞர் தவறாக நடந்து கொண்டதும், வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட இளைஞர் மீது செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கருவுற்றிருப்பது தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மகள் படிப்பை தொடர விரும்புகிறார்.

தற்போதைய நிலையில் கருவை சுமக்க விரும்பவில்லை. எனவே தனது மகளின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொடர்ந்து கருவை சுமந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என கருக்கலைப்பு சட்டக் குழு ஆளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, 2 வாரங்களில் சிறுமியின் கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதியளித்து, வழக்கை முடித்துவைத்தார்.

Share.
Leave A Reply