சென்னை: சொத்து பட்டியல் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து அமைச்சர் உதயநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
DMK Files என்ற தலைப்பில் திமுக மீதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதும் திமுக நிர்வாகிகள் மீதும் அவதூறான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்பி வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் DMK Files என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது தவறான ஆதாரமற்ற அவதூறான கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள்.
திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுகவுக்கு மொத்தம் 1408 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம்.
இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு.
உங்கள் பேச்சு , குற்றச்சாட்டுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ 500 கோடியை எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும்.
இதை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த எங்கள் கட்சிக்காரர் விரும்புகிறார்.
இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால் உங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திமுக நோட்டீஸ் குறித்து சட்ட நடவடிக்கையை சந்திப்பேன் என்றும் ஆருத்ரா மோசடியில் என் மீது அவதூறு கூறிய ஆர்.எஸ்.பாரதி ரூ 500 கோடியே 1 ரூபாயை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் காமெடியாக இருக்கிறது.
இருந்தாலும் அவருக்கு நான் நோட்டீஸ் அனுப்புவேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்றைய தினம் ரூ 50 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஜ்யசபா எம்பி பி வில்சன் மூலம் இந்த நோட்டீஸை உதயநிதி அனுப்பியுள்ளார். அதில் நான் ரூ 2039 கோடி சொத்து சேர்த்ததாக ஒரு அவதூறு தகவலை தெரிவித்துள்ளீர்கள். இது தவறு.
இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அண்ணாமலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ 50 கோடி நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.