2022 பெப்ரவரி மாதத்தில் ரஷ்ய – உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டபோது, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்கள் பரவலாக காணப்பட்டன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் மற்றும் தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ உட்பட பல இரு தரப்பு அதிகாரிகளும், தைவான் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
சீனாவின் மேம்பட்ட இராணுவ திறன்கள் மற்றும் தைவான் மீது சீனா படையெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் 2025 அல்லது 2027ஆம் ஆண்டிலேயே அதிகம் காணப்படுவதாக அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் எதிர்வுகூறியிருந்தது.
இருப்பினும், உலகின் அவதானம் தைவான் ஜலசந்தியில் நிலைத்திருக்கும் அதேவேளை, தென் சீனக் கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நகர்வுகள் அனைத்துமே போர் மேகங்களையே பிரதிபலிக்கின்றன.
தென் சீனக் கடலை அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா மேற்கொண்ட போர் பயிற்சிகள், தைவான் ஜலசந்தி முழுவதும் போரின் தாக்கம் எல்லா தரப்புக்கும் அதிகமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அதன் நட்பு நாடுகளும் அத்தகைய மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் பெய்ஜிங்குக்கான போர் செலவுகள் கணிசமானதாக இருக்கும்.
ஆகவே, தைவான் மீதான போர்த்தொடுப்பை முடிவெடுப்பதில் இந்த விடயம் பெய்ஜிங்குக்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும்.
தென் சீனக் கடலின் இயக்கவியல் என்பது தைவான் ஜலசந்தியிலிருந்து வேறுபட்டது. ஒரு நாட்டின் இறையாண்மை கொண்ட நிலப் பகுதி மீதான படையெடுப்பு என்பது தென் சீனக் கடலில் இல்லை.
ஆனால், தைவான் விவகாரம் என்பது எதிர்மறையான காரணியாகவே காணப்படுகிறது. பிராந்தியத்தில் உள்ள மற்ற கடல்சார் நாடுகளால் அங்கீகரிக்கப்படாத நிலையில் தைவான் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போர்மேகங்கள் சூழ்ந்துள்ளன.
அதே போன்று தென் சீனக் கடலின் மோதல்கள் என்பது புதிதல்ல. 1988ஆம் ஆண்டில் சீன கடற்படை மூன்று வியட்நாமிய கப்பல்களை ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள ஜோன்சன் ரீஃப் பகுதியில் மூழ்கடித்தது.
மறுபுறம் சீன கடற்படை கப்பல்கள் 1996ஆம் ஆண்டில் ஸ்ப்ராட்லி தீவுகளில் பிலிப்பைன்ஸ் கடற்படையின் துப்பாக்கிச்சூடுகளை எதிர்கொண்டன.
2011ஆம் ஆண்டில் சீன கடற்படைக்கு எதிராக பிலிப்பைன்ஸ் போராடியபோது தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றன.
பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களின் மீதான ஊடுருவல், பிலிப்பைன்ஸ் ஆய்வுக் கப்பலை தென் சீன கடலின் வடக்கே அமைந்துள்ள ‘ரீட் பேங்’ என்ற நிலத்தட்டை சுற்றியுள்ள பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து 2012 வசந்த காலத்தில் சீனக் கப்பல்களுக்கும் பிலிப்பைன்ஸ் போர்க்கப்பலுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.
2012இன் பிற்பகுதியில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் பதவியேற்றதிலிருந்து இந்த மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
சீனாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் உறுதியான திருப்பத்தை அந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தியதுடன், 2014ஆம் ஆண்டில் பாராசெல் தீவுகளுக்கு அருகே சீனா ஒரு எண்ணெய் குதத்தை அமைக்க முயற்சித்தது. இதனால் சீன மற்றும் வியட்நாமிய கரையோரப் பாதுகாப்பு கப்பல்கள் மோதிக்கொண்டன.
2019ஆம் ஆண்டில் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. வியட்நாமின் இறையாண்மைக்கு உரிய கடல் பகுதியில் தளமொன்றை அமைப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதனை சீனா தடுத்தது.
தென் சீனக் கடலில் மலேசியா தனது எண்ணெய் சுரங்கங்களை அணுகுவதைத் தடுத்து, சீனா இடையூறுகளை மேற்கொண்டது. எனவே, எதிர்காலத்தில் இந்த கடல் பகுதியில் ஏற்படக்கூடிய மோதல்களின் விரிவாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
ஏனெனில், 2012ஆம் ஆண்டு முதல் தென் சீனக் கடலின் இராணுவமயமாக்கலும் தீவிரமடைந்துள்ளது. தென் சீனக் கடலில் சீனா செயற்கைத் தீவுகளை கட்டியது மட்டுமல்லாமல், இந்தத் தீவுகளை விரிவான இராணுவமயமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் பாராசெல் தீவுகளை சீனா இராணுவமயமாக்கி வருகிறது. அங்கு மேற்பரப்புகளில் வான் ஏவுகணைகளை மற்றும் ஜே-11 போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.
ஸ்ப்ராட்லி தீவுகளில் இதேபோன்ற இராணுவமயமாக்கலை சீனா வேகமாக முன்னெடுத்துள்ளது.
இந்த நிலைமையில் 2022ஆம் ஆண்டில் சீனா தனது செயற்கைத் தீவுகளில் குறைந்தது மூன்று தீவுகளை முழுமையாக இராணுவமயமாக்கும் என அமெரிக்காவின் இந்தோ – பசிபிக் கட்டளைத் தளபதி குறிப்பிட்டிருந்தார். போர் விமானங்கள், கப்பல் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சீனாவை தவிர, ஏனைய சில நாடுகளும் கூட தென் சீனக் கடலில் தங்கள் இராணுவத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் இந்தோனேசிய கடற்படை கப்பல்கள் சீன கடல் படை கப்பல்களை நெருக்கமாக நின்று எதிர்த்துள்ளன.
அமெரிக்காவின் ஏழாவது கடற்படை, தென் சீனக் கடலில் அடிக்கடி பிரசன்னமாகிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்போது ஏழாவது கடற்படையின் ‘வழிசெலுத்தலின் சுதந்திரம்’ என்ற பயிற்சிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அதேபோன்று அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழும் இந்த பயிற்சிகள் தொடர்கின்றன.
2019ஆம் ஆண்டில் அமெரிக்கா, தென் சீனக் கடலில் குறைந்தது ஒன்பது முறை பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீனாவால் உரிமை கோரப்படும் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட தீவுகளின் 12 கடல் மைல்களுக்குள் அமெரிக்கா பயணம் செய்துள்ளது.
வரலாற்று ரீதியாக மலாக்கா, ஜலசந்தி போன்ற பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தனது நடவடிக்கைகளை இந்தியா போன்ற பாரம்பரியமற்ற சக்திகள் கூட, தென் சீனக் கடலில் பயிற்சிகளை நடத்துவதில் அமெரிக்காவுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த இராணுவப் பிரசன்னம் ஆபத்துக்களின் வாய்ப்பை அதிகரித்துள்ளன. உதாரணமாக, 2018ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீன கப்பல்கள் நேருக்கு நேர் மோதலுக்கு நின்றன.
2023ஆம் ஆண்டிலும், வியட்நாம் மற்றும் சீன கடல் படை கப்பல்கள் நேருக்கு நேர் மிக நெருக்கமாக சந்தித்தன.
எனவே, தென் சீனக் கடல், ஏற்கனவே கணிசமான இராணுவத் திறன்களைக் கொண்ட ஒரு நெரிசலான கடலாக மாறியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.
அமெரிக்கா, தென் சீனக் கடலில் தீவிரமாக ஈடுபாடுகளை வெளிப்படுத்தினாலும், அதன் செயற்பாடுகள் பயிற்சிகளை முதன்மையாக கொண்டவையாகவே உள்ளன.
மறுபுறம், தென் சீனக் கடலின் கரையோர நாடுகளை போல், அமெரிக்காவுக்கு அங்கு ஒரு பிராந்திய உரிமை இல்லை.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கூட்டுப் பயிற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், சீனா தடையின்றி பிராந்தியத்தில் அதன் செயற்பாடுகளை தொடர்கின்றது.
இந்த கூட்டு நடவடிக்கைகள் எதுவும் பிலிப்பைன்ஸ் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.
வியட்நாம் மற்றும் மலேசியா மீனவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். ஏனெனில், பிராந்தியத்தில் அதிக கடல் வளங்களுக்கு சீனா உரிமை கோருவதுடன், மற்ற இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த பிரதேசங்களில் வளங்களை அணுகுவதை சீனா தொடர்ந்தும் தடுத்து வருகிறது.
உண்மையில், ‘கடல் வழிசெலுத்தலின் சுதந்திரம்’ என்ற இந்த கூட்டுப் பயிற்சிகள் அடிப்படை சிக்கல்களை தீர்க்கவில்லை. இதன் விளைவாக, உரிமை கோரும் பிற நாடுகள், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றன.
ஆனால், கடந்த கால அனுபவங்கள், விரிவான இராணுவமயமாக்கல் மற்றும் அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கான அமெரிக்க முயற்சிகளின் விளைவு ஆகியவை தென் சீனக் கடலில் எதிர்கால புவிசார் அரசியலின் பாதையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(லியோ நிரோஷ தர்ஷன்)-