தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்விகளையும் அவை எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் இரண்டு குரல் பதிவுகள் சமீப வாரங்களில் அடுத்தடுத்து வெளியாயின.
முதலாவது குரல் பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி சில தனி நபர்களால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களால் பகிரப்பட்டு, கேள்வியெழுப்பப்பட்டது.
அதில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்று நிதியமைச்சர் கூறுவதைப் போல இருந்தது. (அதன் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.)
விளம்பரம்
இதையடுத்து, பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரினர்.
இந்த முதலாவது ஆடியோ குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், “இது நேர்மையற்ற அரசியல் நபர்களால் மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஊடகங்களான ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவற்றின் செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன்.
இதுபோன்ற புனையப்பட்ட, தீங்கிழைக்கும் மூன்றாம் நிலை தகவலை (ஒருவரது கட்டுரை, ஒருவரின் கருத்துகள், சித்தரிக்கப்படும் ஆடியோ, தெரியாத நபருடன் நடந்ததாக கூறப்படும் உரையாடல்) அவை வெளியிடுகின்றன. பொதுவெளியில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் அந்த ஆடியோ உண்மையானது அல்ல என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த விவகாரத்தின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே, நிதியமைச்சர் பேசுவதைப் போன்ற இன்னும் ஒரு ஆடியோ இரு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியானது. இதனை பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலையே வெளியிட்டார்.
அதில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர்.
நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்” என்று நீள்கிறது இந்த இரண்டாவது ஆடியோ.
இந்த ஆடியோ வெளிவந்த பிறகு மீண்டும் விளக்கமளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை.
நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் துணையாகவும் இருக்கிறார் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல்” என்று வீடியோ மூலம் பதிலளித்தார் பி.டி.ஆர்.
இந்த இரண்டு வீடியோக்களிலுமே பொதுவான ஒரு அம்சம் இருந்தது. அவற்றில் எதிர் முனையில் இருப்பவர் யார் அல்லது பதிவுசெய்தவர் யார் என்பதை, ஆடியோக்களை வெளியிட்டவர்கள் கூறவில்லை.
தி.மு.கவைப் பொறுத்தவரை முதல் ஆடியோ வெளியானபோதும் இரண்டாவது ஆடியோ வெளியானபோதும் அதிகாரபூர்வமாக எந்த ஒரு மறுப்பையோ, விளக்கத்தையோ, பி.டி.ஆருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ எதையும் கூறவில்லை.
பிடிஆர் திமுக ஃபைல்ஸ்
இந்த மௌனத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் பி.டி.ஆரின் மீது தி.மு.க. தலைமை பெரும் அதிருப்தியில் இருக்கிறது என்றே ஊகிக்க வைத்தது.
ஆனால், ஏப்ரல் 26ஆம் தேதியன்று தி.மு.கவின் அதிகாரபூர்வ தொழில்நுட்ப அணியின் ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
“அவதூறு பரப்புபவர்களுக்கு திராணியிருந்தால் பா.ஜ.க. அரசால் இந்த தேசம் அடைந்தது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது குறித்து நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களோடு விவாதிக்க முன்வரட்டும். அவதூறுகள் அறத்தினை ஒருபோதும் வென்றிட முடியாது.” என்று ஒரு பதிவை வெளியிட்டது தொழில்நுட்ப அணி
இந்த ஒரு பதிவைத் தவிர தி.மு.க தரப்பிலிருந்து எதுவுமே சொல்லப்படவில்லை என்பதும் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியைக் காட்டுவதாக இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், இதனை முன்வைத்து பி.டி.ஆரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது துறையை மாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகள் கட்சிக்குள் விவாதிக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது.
பி.டி.ஆர். நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அந்தத் துறை, துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகிய மூவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம்.
ஆனால், அப்படிச் செய்தால், பா.ஜ.கவின் அழுத்தத்திற்கு பணிந்ததைப் போல இருக்கும் என்பதால், இதனை சற்றுத் தள்ளிப்போடலாமா என்ற விவாதமும் நடந்துவருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது குடியரசு தலைவரைச் சந்திக்க டெல்லிக்குச் செல்வதால், அந்தப் பயணம் முடிந்த பிறகு இது குறித்து ஒரு முடிவெடுக்கப்படலாம்.
திமுக
மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இது குறித்துக் கூறுகையில், “தி.மு.கவைக் காலிசெய்ய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என்பது எல்லோருக்குமே தெரியும். அம்மாதிரியான சூழலில் இப்படி ஒரு ஆடியோ வெளியாகியிருப்பது,
அது உண்மையா, பொய்யா என்பதைத் தாண்டி எல்லோருக்குமே சிக்கலை ஏற்படுத்தும். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து முதலமைச்சர் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்.
முதலமைச்சரைச் சந்திக்க செவ்வாய்க்கிழமையன்று முயன்றார் பி.டி.ஆர். ஆனால், முதல்வர் பார்க்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே. பி.டி.ஆர். மாற்றப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். அவர் அப்படி மாற்றப்படாவிட்டால், மீதமுள்ள ஆடியோக்களையும் பா.ஜ.க. நிச்சயமாக வெளியிடும்.
கட்சியைப் பொறுத்தவரை, சக அமைச்சர்களோடு பி.டி.ஆருக்கு சரியான உறவு இல்லை. ஆகையால் இவர் போனால்தான் சரியாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்” என்கிறார்.
தி.மு.கவை கட்சிக்குள்ளிருந்தே நேரு, துரைமுருகன், செந்தில் பாலாஜி போன்றவர்கள் விமர்சிப்பார்கள். குறிப்பாக, 12 மணி நேரம் வேலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் வந்தபோது, எம்.எல்.ஏக்களே முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் அதிருப்தியை நேரடியாகத் தெரிவித்தார்கள்.
இப்படியிருந்தால் நாங்கள் தொகுதிக்கே போக முடியாது என்றார்கள். அதுபோல அதிருப்தியைச் சொல்லலாம். மாறாக, மற்றவர்களிடம் முதலமைச்சரின் குடும்பத்தைப் பற்றியே பேசுவது சரியாக இருக்காது என்கிறார் குபேந்திரன்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.
அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. பல்வேறு விதங்களில் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க. வெளியிட்ட ஒரு ஆடியோவின் அடிப்படையில் அமைச்சர் ஒருவரது பதவியைப் பறிப்பது சரியாக இருக்க முடியுமா?
“அது பற்றிய கவலை அமைச்சர்களுக்குத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே. கண்டிப்பாக பி.டி.ஆர். உடன் இருந்தவர்கள்தான் இதைச் செய்திருக்க முடியும். இதை பிளாக்மெயில் என்று சொன்னாலும்கூட, அப்படி பிளாக் மெயில் செய்யும் வகையில் ஏன் பேசுகிறீர்கள் என்றுதான் கேள்வி வரும்.
ஆனால், இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும்” என்கிறார் குபேந்திரன்.
2006 – 11 ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன் மீது ஏதோ குற்றச்சாட்டு வந்த நிலையில், அவரை அந்தத் துறையிலிருந்து மாற்றி, சட்ட அமைச்சராக நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி.
இத்தனைக்கும் அவர் கருணாநிதியின் தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆர். அழைத்தும் செல்லாதவர். அப்படியிருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நடவடிக்கை எடுத்தார் என்கிறார் குபேந்திரன்.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பி.டி.ஆரின் முந்தைய சர்ச்சை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை, இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது அவருக்கு முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டார்.
“செயல்பாட்டுத் திறன், தகவல், தொழில்நுட்பம் இதெல்லாம் மிகவும் சிறப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
இன்றைய சூழலில் முழுமையான கணினிமயமாக்கம் இல்லாமல் இம்மாதிரி சங்கங்களை இயக்குவது மிகவும் கடினமான பணி. அதில் பல பிழைகள் வர வாய்ப்புண்டு. Aggregate Value பார்த்தீங்கன்னா இன்னும் எனக்குத் திருப்தி இல்லை. நிதியமைச்சராகக் கூறுகிறேன். இன்னும் சிறப்பிக்க பல வாய்ப்பு இருக்கு,” என்று கூறினார்.
இதற்கு அடுத்த நாளே செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “எங்களுக்கு யார் திருப்தி அடையனும்னா, ஏழு கோடி மக்களும் திருப்தி அடையனும். எங்கள் முதலமைச்சர் திருப்தி அடையனும்.
அதற்கு நாங்க வேலை செய்வோம். வேற யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. மக்கள்தான் திருப்தியைச் சொல்லனுமே தவிர, ரேஷன் கடையே தெரியாதவர்கள் எல்லாம் திருப்தியடைனும்னு அவசியம் இல்லை” என்று எதிர்வினையாற்றினார்.
இதற்குப் பிறகு முதல்வர் தலையிட்டு, இரு தரப்பையும் இது தொடர்பாக ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.