இந்தியா : இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக வெள்ளிக்கிழமை (28) தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் வந்திறங்கினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 2 ஆவது மணல் திட்டையில் இன்று வெள்ளிக்கிழமை (28 ஆம்  திகதி) காலை குழந்தைகள் உட்பட 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்குச் சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் அங்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம் (43), அவரது மனைவி வனிதா (38), மகன்கள் விஷால் (15), டோனி (10), ஜோன் (8), அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மனைவி ஷாலினி, அவருடைய ஒன்றரை வயது குழந்தை ஆதீஷ் என தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் மண்டபம் மரைன் பொலிலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள், அவர்களின் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply