பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் மேடை பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்.

அண்மையில் அவர் எழுதிய ‘விமலின் 9: மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின் உரையிலும், அந்த நூலிலும் ‘அரகலய’ போராட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகம் என பலதரப்புகளும் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நிலையில், அவர் வெளிப்படுத்திய விடயங்கள் இன்னும் சூடு தனியாதுள்ளது.

அன்றைய தினம் விமல் வீரவன்ச தனது உரையை இவ்வாறு ஆரம்பித்திருந்தார்:

பொருளாதார நெருக்கடிகளின் உச்சக்கட்டத்தில் காலி முகத்திடல் போராட்டம் உருவெடுத்தது. இந்த போராட்டங்கள் உருவெடுப்பதற்கு முன்னரே பல முறை எச்சரித்திருந்தேன்.

ஆனால், அன்று ஆட்சியில் இருந்தவர்கள் எனது எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் காலம் கடத்தினர். இதன் விளைவே பேரழிவுகளுக்கு வித்திட்டது.

எவ்வாறாயினும், காலி முகத்திடல் போராட்டம் முடிவுக்கு வந்து, சுமார் ஒரு வருட காலமாகியுள்ள நிலையில், அந்த தொடர் வன்முறை கலந்த போராட்ட காலத்தை திரும்பிப் பார்க்கவேண்டிய தருணமாகவே உள்ளது.

ஏனெனில், அந்த போராட்டத்தை மீளாய்வு செய்யாவிடின், இலங்கை பூகோள அரசியல் பொறிக்குள் இரையாவதை தடுக்க இயலாது.

உக்ரைன் – மைத்தான் பூங்கா போராட்டமும் இவ்வாறு தான் ஆரம்பிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்குமாறு வலியுறுத்தி இளைய சமூக ஊடகங்களின் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆனால், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கவேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது என்பதே முக்கியமாகும்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு என்பது வரலாற்று ரீதியிலான பாரம்பரியத்தை கொண்டதாகும்.

ஆனால், மைத்தான் போராட்டங்கள் இந்த இரு தரப்பு உறவிலிருந்து விலகி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவை உருவாக்குவதற்கான வலியுறுத்தலாகவே அமைந்தது.

1991ஆம் ஆண்டிலிருந்து மைத்தான் போராட்டத்துக்கு 5 பில்லியன் டொலர்களை செலவிட்டதாக அமெரிக்க இராஜதந்திரியான விக்டோரியா நூலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ஜனநாயகத்தை பாதுகாக்கவே இந்த தொகை செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஜனநாயக பாதுகாப்பு எவ்வாறானதெனில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதலை ஏற்படுத்துவதாகும். இது தற்போது ஏற்பட்டுள்ளது.

அதே போன்று உக்ரைனிலிருந்த அமெரிக்க தூதுவர் மற்றும் விக்டோரியா நூலண்ட் ஆகியோரின் தொலைபேசி உரையாடலொன்று கசிந்தது.

இதில் அடுத்த உக்ரைன் தலைவராக யாரை கொண்டு வருவது என்ற விடயம் பேசப்பட்டது. அத்துடன், இறுதியில் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனை விக்டோரியா நூலண்ட் தீர்மானித்தார். இதற்கு ஆதாரமாகவே தொலைபேசி உரையாடல் காணப்பட்டது.

 

இலங்கையிலும் இதே நிலை தான் ஏற்பட்டது. காலி முகத்திடல் போராட்டம் வன்முறைகளினால் சூழப்பட்டபோது சபாநாயகரை ஜனாதிபதியாக்கும் திட்டமே முன்னெடுக்கப்பட்டது.

எனவே, பூகோள அரசியலை புரிந்துகொள்ளாமல் செயற்பட்டால் இலங்கையும் பொறிக்குள் சிக்கி இரையாகிவிடும்.

ஆகவே, காலி முகத்திடல் போராட்டத்தின் உண்மையான மறைக்கப்பட்ட பகுதியை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்தபோது, அப்போதைய பிரதமராக பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்குமாறு அமெரிக்காவும் இந்தியாவும் வலியுறுத்தியதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

இந்த இரு விடயங்களையும் உள்ளடக்கிய இரு கடிதங்கள் மாலைத்தீவில் கோட்டாபய ராஜபக்ஷ இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத் அனுப்பி வைத்தார்.

அதாவது கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் கடிதமும், ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கும் கடிதமுமே இவ்வாறு அனுப்பப்பட்டது. ஆனால், கோட்டாபய, தான் பதவி விலகும் கடிதத்தில் மாத்திரமே கைச்சாத்திட்டிருந்தார்.

ரணிலின் வீட்டை எரித்ததன் பின்னணியிலும் ரணிலை பதவியிலிருந்து நீக்கும் நோக்கமே இருந்துள்ளது.

ஆனால், ரணில் விக்ரமசிங்க பதவி விலகவில்லை. பதவி நீக்கப்படவும் இல்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில், சபாநாயகரின் இல்லத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் சென்றார். இதனை சபாநாயகர் மறுக்கக்கூடும். ஆனால், இது உண்மை.

சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுகிறார், எனவே நாட்டை பெறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு மறுமொழியளித்த சபாநாயகர்,

அதனை எவ்வாறு செய்வது? அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரே பதில் ஜனாதிபதியாவார். எனவே, பிரதமர் இருக்கும்போது என்னால் ஜனாதிபதியாக பொறுப்பேற்க இயலாது என குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பை ஒரு பிரச்சினையாக கருத வேண்டாம். அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பதவியை பொறுப்பெடுங்கள் என அமெரிக்க தூதுவர் இதன்போது சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு முன்தினம் சபாநாயகரை சந்தித்த மத போதகர் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே யோசனையை வலியுறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த நகர்வுகளின் இறுதி இலக்காக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இராணுவத்தின் முக்கியஸ்தர்களை கொலை செய்து வன்முறைகளை மேலும் சில நாட்களுக்கு நீடித்து, சபாநாயகரை தலைமைத்துவமாக கொண்ட இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதாகவே இருந்துள்ளது.

லிபியாவிலும் இதே திட்டமே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த இடைக்கால நிர்வாகத்தில் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றவர்கள் கூட இருந்திருக்கலாம்.

ஏனெனில், நாட்டில் நெருக்கடியான நிலைமை காணப்பட்ட அந்த போராட்ட காலப்பகுதியில்,  சவேந்திர சில்வா அவசரமாக இந்தியா சென்றிருந்தார். ஏனைய அனைத்து இராணுவ தளபதிகளும் ஜனாதிபதி மாளிகையிலேயே இருந்தனர்.

சவேந்திர சில்வாவுக்கும் எனக்கும் எவ்விதமான தனிப்பட்ட விரோதம் இல்லை. ஜெனிவாவிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஆனால், அவற்றின் நோக்கமும் தமது இலக்குகளுக்கு இவரை பயன்படுத்துவதாகும். அதே போன்று தான் கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்று வாழ்வதற்கே விரும்பினார். எனவே தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை இவர்கள் வளர்த்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவையும் காலி முகத்திடல் போராட்டத்தையும் அமெரிக்கா எவ்வாறு நிர்வகித்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நிதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை விசாரணைக்கு உட்படுத்தினால் ஏனைய விடயங்கள் தெரிந்துவிடும்.

எனவே, இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் என அனைத்திலும் செல்வாக்கு செலுத்தும் வகையில் அமெரிக்கா செயற்பட தொடங்கியுள்ளது. இதற்கு பிரதான காரணமாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கு ஆசியா மிகவும் முக்கியமானதொன்றாகும். அதிலும் இலங்கையின் புவியியல் அமைவிடம் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

இந்த பூகோள அரசியல் காரணிகளை மையப்படுத்தியே காலி முகத்திடல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்திலும் வரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பூகோள அரசியல் காணப்பட்டதாக குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, அந்த பூகோள அரசியலின் எதிர் தரப்பான சீனாவை எதிரே வைத்துக்கொண்டமைக்கான விளக்கத்தை அளிக்காமல் இருந்துவிட்டார்.

உலக அதிகார போட்டியில் சீன – அமெரிக்க மோதல் என்பது இராஜதந்திர நிலைமையை கடந்து, பல மோதல் நிலைகளை அடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில், சீனாவை வரவேற்று அவர்கள் முன்பாக அமெரிக்காவை சாடியதில் உள்ள அரசியல், இலங்கை அரசியலை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளமையை பிரதிபலிக்கிறது.

லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply