1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.
அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது.
ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன.
அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத் அல் அஹ்மத் அல் சபாவை குவைத்தில் விட்டுச் சென்றார். இராக் ராணுவம் ஷேக்கை பார்த்ததும் அவரை சுட்டுக் கொன்றது.
அவரது உடல் ஒரு பீரங்கியின் முன் வைக்கப்பட்டு அதன் மேல் பீரங்கி ஏற்றப்பட்டது என்று நேரில் கண்ட சாட்சியான இராக் வீரர் ஒருவர் தெரிவித்தார்.
குவைத் மீது படையெடுப்பதற்கு முன், பாத் புரட்சியின் 22 வது ஆண்டு விழாவில் சதாம் ஹுசேன், குவைத் முன் தனது கோரிக்கைகளின் பட்டியலை வைத்தார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை ஸ்திரப்படுத்துதல், வளைகுடா போரின் போது குவைத்திலிருந்து பெறப்பட்ட கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் இராக்கை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் மார்ஷல் திட்டத்தைப் போன்ற ஒரு அரபு திட்டத்தை உருவாக்குதல் ஆகியவை இந்த கோரிக்கைகளில் அடங்கும்.
“குவைத்தியர்கள் எங்கள் பேச்சைக் கேட்காவிட்டால், விஷயங்களைச் சரிசெய்து எங்கள் உரிமைகளை மீட்டெடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று அதிபர் சதாம் ஹுசைன் இராக் தொலைக்காட்சியில் அச்சுறுத்தினார்.
சதாம் ஹுசேன்சதாம் ஹுசேன்
தோல்வியடைந்த சதாமை தடுக்கும் முயற்சி
“உண்மையில், செளதி அரேபியா மற்றும் குவைத் இரண்டுமே, வளைகுடா போரின் போது இராக்கிற்கு கொடுத்த கடனை திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே கைவிட்டுவிட்டன,” என்று செளதி ராஜீய அதிகாரியும், ஷா ஃபஹத்தின் நெருங்கிய ஆலோசகருமான டாக்டர் காசி அல்கோசைபி ஒரு பேட்டியில் கூறினார்,
ஆனால், கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்தால், அது தவறான செய்தியை அளித்துவிடும் என இரு நாடுகளும் நினைத்தன.
“கடன் தள்ளுபடி பற்றி ஷா ஃபஹ்த், சதாமிடம் தெரிவித்தார். ஆனால் சதாம், செளதி அரேபியாவின் இந்த முன்முயற்சியில் மகிழ்ச்சி அடையவில்லை என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தார். குவைத்திற்கு மோசமான நாட்கள் வந்துவிட்டன என்பதை அந்த நேரத்தில் ஷா ஃபஹத் உணர்ந்தார்.”
ஆனால் குவைத்தின் முன் கோரிக்கைப் பட்டியலை வைக்கும் முன்னரே, அந்த நாட்டைத் தாக்குவதற்கு சதாம் தீர்மானித்துவிட்டார்.
செளதி அரேபியாவின் மன்னர் ஃபஹத்துடன் சதாம் ஹுசேன்.
ஜூலை 21 ஆம் தேதிக்குள் சுமார் 30,000 இராக் வீரர்கள் குவைத் எல்லையை நோக்கி நகரத் தொடங்கினர்.
ஜூலை 25 அன்று மதியம் ஒரு மணியளவில், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதர் ஏப்ரல் கில்லெஸ்பியை சதாம் அழைத்தார். குவைத் மீதான தாக்குதலுக்கு அவருடைய எதிர்வினை என்ன என்பதை சதாம் அறிய விரும்பினார்.
முன்னதாக பிப்ரவரியில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில் ஒரு ஒலிபரப்பு தொடர்பாக அமெரிக்கத் தூதருக்கும், சதாம் ஹுசேனுக்கும் இடையில் ஒரு தூதாண்மை மோதல் ஏற்கெனவே ஏற்பட்டிருந்தது. அந்த ஒலிபரப்பில் சதாமின் இராக், செளஷ்ஸ்கோவின் ருமேனியாவுடன் ஒப்பிடப்பட்டது.
இராக் அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறி அந்த ஒலிபரப்பிற்காக சதாமிடம் கில்லெஸ்பி மன்னிப்பு கேட்டார்.
குவைத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், இராக் எதிர்வினையாற்றுவது தவிர்க்க முடியாதது என்று கூறி அந்த சந்திப்பை முடித்துக் கொண்டார் சதாம்.
தவறாகிப் போன ஊகம்
சதாம் ஹுசேனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் கான் காக்லின், ‘சதாம் தி சீக்ரெட் லைஃப்’ என்ற புத்தகத்தில், “சதாம் வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே செய்கிறார் என்றும், குவைத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் நினைத்து அந்த சந்திப்பிலிருந்து கில்லெஸ்பி வெளியே வந்தார்.”என்று எழுதியுள்ளார்.
“ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் ஆலோசனை நடத்த வாஷிங்டனுக்குச் சென்றார்.
சில நாட்களுக்குப் பிறகு பாக்தாத்தில் கில்லெஸ்பி-சதாம் சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டபோது, அரேபிய விவகாரங்களில் அதிக அனுபவமுள்ள 48 வயதான இந்த தூதாண்மை அதிகாரி, அப்பாவியாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். சதாமின் குவைத் மீதான தாக்குதலுக்கு அவர் அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டது.”
இந்த குற்றச்சாட்டை கில்லெஸ்பி கடுமையாக மறுத்தார். 1990 களில் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “இராக், குவைத் முழுவதையும் கைப்பற்றும் எண்ணத்தை கொண்டுள்ளது என்று நானோ அல்லது வேறு யாரும் நினைக்கக்கூட இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
இந்த விஷயத்தில் குவைத், செளதி மற்றும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் முற்றிலும் தவறானது என்று நிரூபணமானது.
குவைத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம் சதாமுக்கு இல்லை என்றும் அரபு தூதாண்மை இந்த நெருக்கடியை தீர்க்கும் என்றும் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக் தனிப்பட்ட முறையில் வாஷிங்டனுக்கும் லண்டனுக்கும் உறுதியளித்தார்.
புத்தகம்- சதாம் தி சீக்ரெட் லைஃப்
எதிர்ப்பின்றி குவைத்துக்குள் நுழைந்த ‘சதாம் படைகள்’
1990 ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு இரண்டு மணியளவில் ஒரு லட்சம் இராக் வீரர்கள் 300 பீரங்கிகளுடன் குவைத் எல்லையைத் தாண்டினர்.
16,000 வீரர்கள் கொண்ட குவைத்தின் ராணுவத்தால் அவர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. குவைத் எல்லையில் சிறிதளவு எதிர்ப்புகூட இருக்கவில்லை.
இராக்கிய படைகள் தலைநகரான குவைத் நகரை அடைந்தபோது, குவைத் வீரர்களிடமிருந்து சிறிய அளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டனர். ஆனால் விரைவில் அது ஒடுக்கப்பட்டது.
குவைத் போர் விமானங்கள் ஆகாயத்தில் பறந்தன. ஆனால் அது இராக் படைகள் மீது குண்டுகளை வீச அல்ல, செளதி அரேபியாவில் தஞ்சம் புகம் அவை சென்றன.
குவைத் கடற்படையும் அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தது.
குவைத் எமிர் மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரும் செளதி அரேபியாவிற்கு பாதுகாப்பாக தப்பிச் சென்றதுதான் சதாமுக்கு ஏற்பட்ட ஒரே அதிர்ச்சி.
குவைத் நகருக்குள் நுழைந்தவுடன் முதலில் தஸ்மான் அரண்மனைக்குச் சென்று அரச குடும்பத்தை கைது செய்யுமாறு இராக் படைப்பிரிவான ரிப்பப்ளிக்கன் கார்ட்ஸுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
“அரச குடும்பத்தின் ஒரே உறுப்பினரான ஷேக் ஃபஹ்த், செளதி அரேபியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். இராக்கிய ராணுவம் அரண்மனையை அடைந்தபோது, அவர் அரண்மனையின் கூரையில் சில குவைத் வீரர்களுடன் கைத்துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தார். ஒரு இராக்கிய வீரர் அவரை சுட்டுக்கொன்றார்,” என்று கான் காக்லின் எழுதுகிறார்.
பிரிட்டிஷ் விமானத்தில் பிணைக்கைதிகள்
ஏழு மணி நேரத்தில் குவைத் முழுவதும் இராக் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. அரசுடன் சேர்ந்து குவைத்தின் சுமார் மூன்று லட்சம் குடிமக்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். அதனால்தான் சதாமுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு திடீரென கிடைத்தது.
குவைத் மீது படையெடுப்பு தொடங்கியநேரத்தில் அதை அறியாமல் லண்டனில் இருந்து டெல்லி செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், எரிபொருள் நிரப்ப குவைத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
குவைத்தை இராக் தாக்கியிருப்பதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் ஊகித்தன. ஆனால் விமானத்தை எச்சரிக்க வேண்டியதன் அவசியத்தை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
குவைத்தில் விமானம் தரையிறங்கியவுடன் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
முக்கிய இடங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதற்காக அவர்கள் பாக்தாதுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் மீது பொருளாதார தடைகளை விதித்தார். விமானம் தாங்கி கப்பலான ‘இண்டிபெண்டன்ஸ்’ ஐ, இந்துமாக்கடலில் இருந்து பாரசீக வளைகுடாவிற்கு செல்ல உத்தரவிட்டார்.
இராக்கின் முழு பணத்தையும் பறிமுதல் செய்த அமெரிக்கா
குவைத் மீது இராக் படையெடுத்த நேரத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர்.
அமெரிக்க வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட எல்லா இராக் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
குவைத்தின் மீதான இராக் படையெடுப்பை, 1930 களில் செக்கோஸ்லோவாக்கியா மீதான ஜெர்மன் படையெடுப்புடன் அவர் ஒப்பிட்டார்.
பொதுவாக ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும் அமெரிக்காவும் சோவியத் யூனியனும், இராக் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கூட்டறிக்கைகளை வெளியிட்டன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு லீக் ஆகியவையும் இராக்கின் இந்த நடவடிக்கையை கண்டித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இராக்கின் மீது முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்தது.
துருக்கி மற்றும் செளதி அரேபியா வழியாக செல்லும் இராக்கின் எண்ணெய் குழாய் துண்டிக்கப்பட்டது. செளதி அரேபியாவின் எல்லையில் இராக் வீரர்கள் குவிந்துள்ளதைக் கருத்தில் கொண்டு செளதி அரேபியா, அமெரிக்காவிடம் ராணுவ உதவி கோரியது.
குவைத்தில் இருந்து இராக்கை வெளியேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா, அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 60 ஆயிரம் வீரர்களை விமானம் மூலம் செளதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிபர் புஷ் ஒரு தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில், 82வது வான்வழிப் பிரிவை செளதி அரேபியாவிற்கு அனுப்புவதாகக் கூறினார்.
இது ‘ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டார்ம்’ நடவடிக்கையின் தொடக்கமாக இருந்தது. வியட்நாம் போருக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்பட்ட அதிக எண்ணிகையிலான அமெரிக்கப் படைகள் இதுவாகும்.
சதாமை ஆதரித்த அராஃபத், மித்திரோன்
யாசர் அராஃபத்துடன் சதாம் ஹுசேன்.
இதற்கிடையில் சதாம் ஹுசேன், தனது ஒன்றுவிட்ட சகோதரர் அல் ஹசன் அல் மஜித்தை குவைத் ஆளுநராக நியமித்திருந்தார்.
இதே மஜித் தான் 1988ல் ஹலாப்ஜாவில் ஆயிரக்கணக்கான குர்துகளை விஷ வாயுவை வெளியேற்றிக்கொன்றார்.
சதாமை ஆதரித்த ஒருசிலரில் பாலத்தீனத் தலைவர் யாசர் அராஃபத்தும் ஒருவர். ஆய்வாளர்கள் அவரது ஆதரவைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் சதாம் ஒரு காலத்தில் அராஃபத்தின் அதிகார மையத்தை நசுக்க தனது முழு பலத்தையும் பிரயோகித்திருந்தார்.
செப்டம்பரில் மற்றொரு இடத்தில் இருந்து சதாமுக்கு மறைமுக ஆதரவு வந்தது. பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்திரோன், ஐநா பொதுச் சபையில் ஆற்றிய உரையில், குவைத்தில் இராக்கின் சில நில உரிமைகோரல்கள் சட்டபூர்வமானவை என்று தான் கருதுவதாக கூறினார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு குவைத்தில் பணிபுரியும் 327 பிரெஞ்சு தொழிலாளர்களை விடுவித்து பிரான்சின் அனுதாபத்தை சதாம் ஹுசேன் பெற்றார்.
இராக்கிற்கு எதிரான செயல் உத்தியை வகுக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் பாரிஸுக்கு வந்த அதே நாளில் அந்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பிரிட்டிஷ் பிணைக்கைதிகளை சந்தித்த சதாம்
சதாம் ஹுசேன் பிரிட்டிஷ் சிறுவன் ஸ்டூவர்ட் லாக்வுட்டுடன் பேசுகிறார்
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்த விவகாரத்தில் இராக்கின் மிகப்பெரிய எதிர்ப்பாளராக பிரிட்டன் இருந்தது.
இதற்கிடையில், இராக்கில் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் மக்களை சந்திக்க சதாம் உசேன் முடிவு செய்தார்.
“இராக்கில் இந்த பிணைக்கைதிகள் இருப்பது அமைதிக்கு அவசியம் என்று இந்த சந்திப்பிற்குப் பிறகு சதாம் மீண்டும் வலியுறுத்தினார். அவர்கள் அங்கு இருக்கும்வரை நேச நாடுகள் இராக் மீது குண்டுவீச நினைக்காது என்று அவர் நம்பினார்.” என்று கான் காக்லின் குறிப்பிட்டுள்ளார்.
“உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த சந்திப்பின் போது சதாம், ஸ்டூவர்ட் லாக்வுட் என்ற ஏழு வயது பிரிட்டிஷ் சிறுவனிடம் அரபு மொழியில், ‘ஸ்டூவர்ட்டிற்கு இன்றைய பால் கிடைத்ததா?’ என்று கேட்டார்.”
அந்த சமயத்தில் சதாமின் பிடியில் இருந்த அனைவரின் மனநிலையையும் அந்தக்குழந்தையின் முகத்தில் தெரிந்த பயம் தெளிவாக எடுத்துக்காட்டியது.
இதற்கிடையில், முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் முகமது அலி,முன்னாள் ஜெர்மன் பிரதம மந்திரி வில்லி பிராண்ட் மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் எட்வர்ட் ஹீத் ஆகியோரும் சதாமை ஒப்புக்கொள்ளவைக்க பாக்தாத்தை அடைந்தனர். ஆனால் அவர்கள் விடுத்த வேண்டுகோள்களுக்கு சதாம் செவி சாய்க்கவில்லை.
குவைத்தில் புதிய அடையாள அட்டைகள் விநியோகம்
குவைத்தின் மூன்று லட்சம் மக்கள் அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்கள், நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
‘சதாமின் உளவுத்துறை ஏஜெண்டுகள், காலியாக இருந்த அரண்மனைகளின் அடித்தளங்களை எதிரிகளை சித்திரவதை செய்யும் அறைகளாக மாற்றினர்.
பல சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டன. குடிமக்கள் புதிய அடையாள அட்டை மற்றும் உரிமத் தகடுகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்று எகனாமிஸ்ட் இதழ் 1990 டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையில் எழுதியது.
பாக்தாத்துக்கும் குவைத்துக்கும் இடையே இருந்த நேர வித்தியாசம் நீக்கப்பட்டது. ஒரு உத்தரவை நிறைவேற்றியதன் மூலம், குவைத் மக்கள் தாடி வைக்க தடை விதிக்கப்பட்டது. எதிர்த்தவர்களின் தாடி வலுக்கட்டாயமாக இடுக்கியால்(plier) பிடுங்கப்பட்டது.
குவைத் ஆக்கிரமிப்பின்போது சதாம் ஹுசேனின் மனநிலையை அவரது தளபதிகளில் ஒருவரான வாஃபிக் அல்-சாமுராய் விவரித்தார்.
“இராக்கிய பீரங்கிகளைச் சுற்றி மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்க வீரர்களைப் பிடிக்குமாறு சதாம் எங்களுக்கு உத்தரவிட்டார்,” என்று சாமுராய் கூறுகிறார்.
“இதன் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களை சிறைபிடித்து மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தலாம் என்ற தவறான புரிந்துகொள்ளல் அவருக்கு இருந்தது. சதாமின் இந்த முட்டாள்தனத்தைக் கண்டு நானும் மற்ற ஜெனரல்களும் வருந்தினோம், ஆச்சரியப்பட்டோம்.”
அமெரிக்காவின் நீண்ட கால சண்டை பற்றிய சந்தேகங்கள்
“நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம் என்று நான் சதாமிடம் சொல்ல முயன்றபோது, இது எனது தனிப்பட்ட கருத்தா அல்லது உண்மையா என்று அவர் என்னிடம் கேட்டார்,” என்று அட்லாண்டிக் பத்திரிகையின் 2002 மே இதழுக்கு அளித்த நேர்காணலில் சாம்ராய் கூறினார்,
“எனக்கு முன்னால் உள்ள உண்மைகளின் அடிப்படையில் நான் இந்தக்கருத்தை தெரிவித்தேன் என்று பதிலளித்தேன். இதற்கு சதாம் ’இப்போது நீங்கள் என் கருத்தை கேளுங்கள்.
இரான் இந்த போரில் தலையிடாது. நம் படைகள் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக போராடும். அமெரிக்க விமானத் தாக்குதல்களைத் தவிர்க்க அவர்களால் பதுங்கு குழிகளைத் தோண்டவும் முடியும்’ என்று சொன்னார்.”
“அவர்கள் நீண்ட காலத்திற்கு சண்டையிடுவார்கள். இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
இந்த இழப்பைத்தாங்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அமெரிக்காவால் அது முடியாது. தங்கள் வீரர்களின் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சதாம் கூறினார்” என்று சாம்ராய் குறிப்பிட்டார்
வான் தாக்குதல்களால் இராக்கில் பேரழிவு
அமெரிக்க அதிபர் புஷ் 1991 ஜனவரி 16 ஆம் தேதி இராக் மீது வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.
இதன் காரணமாக இராக் முழுவதிலும் பெரும் அழிவு ஏற்பட்டது. கூடவே நான்கு வாரங்களுக்குள் இராக்கின் நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
சாலைகள், பாலங்கள், மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் இருப்புக்கள் போன்ற இராக்கின் எல்லா பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்தும் அழிக்கப்பட்டன.
இராக் விமானப்படையின் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இரானில் தஞ்சம் அடைந்ததால், விமானப்படையினரின் மன உறுதி பெரும் பின்னடைவை சந்தித்தது. சதாமுக்கு எதிரான ராணுவக்கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து இராக் விமானப்படை இந்த நடவடிக்கையை எடுத்ததாக செய்திகள் வெளியாயின.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை நிறுத்த முடியாமல் போனதற்காக சதாம், விமானப்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தபோது இந்த கிளர்ச்சி செய்யப்பட்டது.
சதாமின் துருப்புக்கள் செளதி எல்லைக்குள் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஃப்ஜி நகரை கைப்பற்றின. ஆனால் சில நாட்களில் நேச நாட்டுப் படைகள் இராக் துருப்புக்களிடம் இருந்து அந்த நகரத்தை மீட்டன.
போர் கைதிகளான 58,000 இராக்கிய வீரர்கள்
ராணுவத் தளபதி ஜெனரல் நார்மன் ஸ்வார்ஜ்கோஃப்
இதன்போது, சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவின் சிறப்புத் தூதர் யெவ்ஜெனி ப்ரிமகோவ், சதாமைச் சந்திக்க பாக்தாத் வந்தபோது, அவரது எடை சுமார் 15 கிலோ வரை குறைந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்.
பிப்ரவரி 18ஆம் தேதி இராக் வெளியுறவு அமைச்சர் தாரிக் அஜீஸ் மாஸ்கோ சென்றார். குவைத்தில் இருந்து இராக் நிபந்தனையின்றி திரும்பச்செல்வதற்கான சோவியத் யூனியனின் முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அதற்குள் உலகத் தலைவர்கள் மத்தியில் சதாமின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது. வெறும் உத்தரவாதம்மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை.
இராக் மீது தரைவழித் தாக்குதலுக்கு பயந்த சதாம் ஹுசேன், குவைத்தில் உள்ள எல்லா எண்ணெய் கிணறுகளையும் தீயிட்டு கொளுத்த உத்தரவிட்டார்.
பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் இராக் ராணுவம் குவைத்தில் இருந்து வெளியேறவில்லை என்றால், இராக்கிய ராணுவத்தை வலுக்கட்டாயமாக அகற்றுமாறு, அதிபர் ஜார்ஜ் புஷ், ராணுவ தளபதி ஜெனரல் நார்மன் ஸ்வார்ஜ்காஃப்பிற்கு உத்தரவிட்டார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய 48 மணி நேரத்திற்குள் இராக் ராணுவம் தோல்வியை ஏற்றுக்கொண்டது. ஆறு வாரங்கள் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு இராக் வீரர்கள் போரிடும் மனநிலையில் இல்லை.
தாக்குதலின் இரண்டாம் நாள் முடிவில், 20,000 இராக்கிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் மற்றும் 370 இராக்கிய பீரங்கிகள் அழிக்கப்பட்டன.
இறுதியில் 1990, ஆகஸ்ட் 1 ஆம் தேதி சதாம் ஹுசேன், தனது வீரர்களை தங்கள் நிலைகளுக்குத் திரும்பும்படி கட்டளையிட்டார்.
பிப்ரவரி 26 அன்று ஒரு இராக் வீரர் கூட குவைத்தில் இருக்கவில்லை. அவர்கள் போர்க் கைதிகளாக இருந்தனர் அல்லது இராக் திரும்பி விட்டனர்.
இராக்கின் போர்க் கைதிகளின் எண்ணிக்கை 58 ஆயிரமாக அதிகரித்தது. சுமார் ஒன்றரை லட்சம் இராக்கிய வீரர்கள் இந்தப் போரில் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.
இராக்கின் எல்லா சாலைகளும், பாலங்களும் அமெரிக்க குண்டுவீச்சினால் அழிக்கப்பட்டுவிட்டதால், தாங்கள் ஹெலிகாப்டர் மூலம் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று இராக் ராணுவ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்க ஜெனரல் ஸ்வார்ஜ்காஃப் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.