சென்னை: நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலக்குறைவால் மே 3ம் தேதி காலமானார்.
வெறும் 69 வயதிலேயே மனோபாலா உயிரிழந்தது அவரது குருநாதர் பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்துக்கே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனது உடல்நலக்குறைவுக்கு காரணமே சிகரெட் பழக்கம் தான் என பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முழு நேர நடிகராக்கிய கே.எஸ். ரவிக்குமார்: இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த மனோபாலா புதிய வார்ப்புகள் படத்தில் பஞ்சாயத்து காட்சியில் ஒரு சின்ன சீனில் வந்து சென்றிருப்பார்.
மேலும், பல படங்களில் பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டாகவும் ஒரு சில காட்சிகளிலும் நடித்து வந்தார்.
கே.எஸ். ரவிக்குமாரின் நட்புக்காக படத்தில் தான் முழு நேர நடிகராக மனோபாலா மாறினார். வெளியே எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்களே ஸ்க்ரீனில் இதையே பண்ணலாமே என கேட்டேன்.
உன் படத்துல சான்ஸ் கொடு பண்றேன்னு சொன்னார் மனோபாலா அப்படித்தான் நட்புக்காக படத்தில் இணைந்தார். அவர் வைத்த வித்தியாசமான வணக்கம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என அஞ்சலி செலுத்தி விட்டு பேசினார்.
ஒரு நாளைக்கு 200 சிகரெட்: ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், விஜயகாந்தை வைத்து சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மோகனின் பிள்ளை நிலா உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக இருந்த போது ஒரு நாளைக்கு 200 சிகரெட் பிடிப்பேன் என பழைய பேட்டி ஒன்றில் மனோபாலா கூறியுள்ளார்.
அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அதில், அதிகமாக சிகரெட் பிடித்ததால் தான் என் எலும்புகள் வீக் ஆகின என்றார்.
அப்போது என்னை எல்லாரும் சிம்னி என்றே அழைப்பார்கள். ஏனென்றால் அத்தனை சிகரெட் பிடித்துக் கொண்டே இருப்பேன். என்னை யாராலும் கன்ட்ரோல் பண்ணவே முடியாது என்றார்.
உயிருக்கே ஆபத்து வரும் என எச்சரிக்கை: சிகரெட் பிடித்து உடல் நலம் பெரிதளவில் பாதிப்படைந்த நிலையில், சம்பாதித்த அனைத்து பணத்தையும் சிகிச்சைக்காகவே செலவு செய்து இழந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு மேல் ஒரு சிகரெட் பிடித்தாலும் உயிர் போயிடும் என மருத்துவர் எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் அந்த கருமத்தை தூக்கி எறிஞ்சேன் என மனோபாலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
அவரது உடல்நலம் வயதான காலத்தில் பாதிப்படைய காரணமும் கல்லீரல் பாதிப்பால் அவர் அவதியடையவும் காரணமாக இருந்தது சிறு வயதில் அவர் பிடித்த பல ஆயிரம் சிகரெட்டுகள் தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.