பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற இளவரசர் ஹாரி தனியாக புறப்பட்டு அமெரிக்காவுக்கு சென்றார்.

இளவரசர் ஹாரியின் தந்தையும் அரசருமான மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தனியாக வந்த இளவரசர் ஹாரி, அவரது சகோதரர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து இரண்டு வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார்.

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் இளவரசர் ஹாரி, தனது மனைவி மேகனை இந்த விழாவுக்கு அழைத்து வரவில்லை.

மேலும் லண்டனில் முடிசூட்டு விழா முடிவடைந்த உடனேயே அவர் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முடிசூட்டு விழா முடிவடைந்த பின், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் அரசர் தோன்றும் நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்படவில்லை என்பதை பிபிசி புரிந்துகொள்கிறது.

தனி காரில் புறப்பட்ட இளவரசர் ஹாரி

அவர் சர்ச்சைக்குரிய வகையில் எழுதி வெளியிட்ட சுயசரிதையில், அவருக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த சுயசரிதை வெளியான பிறகு பொதுவெளியில் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தற்போதுதான் முதன்முதலாகத் தென்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரிட்டனுக்கு வந்த இளவரசர் ஹாரி, சனிக்கிழமை இரவே அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலெஸ் நகருக்குச் சென்றடைந்தார்.

அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக பி.ஏ. செய்தி முகமை தெரிவித்தது.

முடிசூட்டு நிகழ்ச்சி நடைபெற்ற சிறிது நேரத்திலேயே வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வெளியில் அவர் தனியாக ஒரு காரில் புறப்பட்டுச் சென்றதை காண முடிந்தது.

அதன் பின் ஒன்றரை மணிநேரம் கழித்து, அரசர் சார்ல்ஸ், அவரது மனைவி, வேல்ஸ் இளவசரர், அவரது குழந்தைகள் மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் பங்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் தோன்றி அந்த அரண்மனையின் முன்பாகக் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைச் சந்தித்தனர்.

முடிசூட்டு விழாவின்போது இளவரசர் ஹாரி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தார்

இளவரசர் ஹாரியின் மனைவியும், இளவரசியுமான மேகன், அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலெஸ் நகரில் உள்ள அவரது வீட்டில், தனது மகனும் இளவரசருமான ஆர்ச்சியின் நான்காவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.

ஆர்ச்சியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இளவரசர் ஹாரி அவசர அவசரமாக பிரிட்டனில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு வந்ததாக பேஜ் சிக்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

முடிசூட்டு விழாவின்போது அந்த விழாவுக்குப் பொருத்தமான ஆடைகள் மற்றும் மெடல்களை அணிந்துகொண்டிருந்த இளவரசர் ஹாரி. தனது சித்தப்பா மகளும், இளவரசியுமான யூஜீன் மற்றும் அவரது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்குடன் அமர்ந்திருந்தார். அவர்களுடன் இளவரசர் ஆண்ட்ரூவும் அமர்ந்திருந்தார்.

1. இளவரசர் வில்லியம் 2. இளவரசி கேத்தரீன் 3. இளவரசர் ஆண்ட்ரூ 4. இளவரசர் எட்வர்ட் 5. இளவரசி ஆன் 6. இளவரசி ஹாரி

அங்கிருந்து இரண்டு வரிசை முன்புறமாக வேல்ஸ் இளவரசர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இளவரசர் எட்வர்டும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நேரடியாக அரசருக்குப் பின்னால் இருந்த வரிசையில் இளவரசர் ஹாரி அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அரச குடும்பத்தில் எந்தப் பதவியைவும் வகிக்காததால், அரசருக்கான முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி முறைப்படி செய்யவேண்டிய எந்தப் பணியும் இல்லை என்ற நிலையில், அவர் இந்த விழாவில் தனியாகத்தான் பங்கேற்கப் போகிறார் என்பது அனைவரும் ஏற்கெனவே அறிந்த செய்தியாகவே இருந்தது.

இளவரசர் ஆண்ட்ரூவின் நிலையும் இதுதான்.

அரச குடும்பத்தினருடனான இளவரசர் ஹாரியின் உறவுகள், அவர் சுயசரிதையை வெளியிட்ட பின் கசப்பான நிலைக்குச் சென்றன.

ஹாரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை அந்தப் புத்தகத்தில் தெரிவித்திருந்த ஹாரி, அதன்பின் அரச குடும்பத்தினரின் எண்ணங்களில் இருந்து வேறுபட்ட கருத்துகளையே தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இதுபோன்ற கசப்பான உறவுநிலையின் காரணமாகவே இந்த விழாவுக்காக வழங்கப்பட்ட அழைப்பிதழை இளவரசி மேகன் நிராகரித்துவிட்டார் எனக் கருதப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து இளவரசர் ஹாரி நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு அரசர் சார்ல்ஸ் வலியுறுத்தியதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளித்த இளவரசர் ஹாரி, அவரை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரவழைத்து, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலான அந்த வழக்கை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share.
Leave A Reply