கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது.
அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்து நேரிட்டதும், மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகை வெட்டி மக்கள் வெளியே கொண்டு வந்தனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனூர், திரூர் தீயணைப்புத் துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் பிஏ முஹம்மது ரியாஸ் மற்றும் வி அப்துர் ரஹ்மான் ஆகியோர் மீட்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 22 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 6 குழந்தைகள் 3 பெண்கள் அடங்குவர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேர் நலமுடன் இருப்பதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திரூறங்காடி மருத்துவமனையில் 8 உடல்கள் உள்ளன.
இறந்தவர்களில் குழந்தைகள் அதிகம் என்பது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஊர்களில், இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் நசருதீன் என்ற கண்ட்ரோல் ரூம் போலீஸ்காரரும் இறந்துள்ளார். அவர் குடும்பத்துடன் படகில் சென்றுள்ளார்.
மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவு
அவசர மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலப்புரம் தானூரில் படகு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்களின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதிக உயிரிழப்புக்கு காரணம் என்ன?
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை. இரண்டு அடுக்குகொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.