களுத்துறையைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய முக்கிய சந்தேக நபர், குறித்த சிறுமிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்பின் பின்னர் அவர் அறையிலிருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக கீழே குதித்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

”நான் அந்தப் பெண்ணுடன் விடுதி அறையில் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பின் அவள் சலனமடைந்திருந்தாள். ‘நீ என்னை அழித்து விட்டாய், கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே ‘ என அந்த அழைப்பாளரை திட்டினாள். அந்த அழைப்பிற்குப் பின் அவள் பதற்றமாக இருந்தாள்.

அதன் பின் ஒரு நாற்காலில் ஏறி ஜன்னல் வழியாக கீழே குதித்து விட்டார்” என குறித்த சிறுமியின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டு நேற்று (9) ஹிக்கடுவைப் பகுதியில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் தெரிவித்தார்.

குறித்த சிறுமியைத் தான் சந்தித்தது இதுவே முதல் தடவையென சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

“எனக்கு இந்த சிறுமியை இதற்கு முன் தெரியாது. இதுவே நான் அவளை சந்தித்த முதல் தடவை. அவள் பாடசாலை மாணவி என்பது கூட எனக்குத் தெரியாது.

அத்தோடு விடுதி அறையை முன்பதிவு செய்ய அவள் வேறொருவரின் அடையாள அட்டையைக் கொடுத்ததும் எனக்குத் தெரியாது“.

“நாங்கள் இருவரும் அங்கு பாடல் பாடி நடனமாடி பொழுதைக் கழித்தோம். இதற்கிடையில் அவளுக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அந்த அழைப்பில் அவளை யாரோ மிரட்டியுள்ளனர் என்பது அவளின் நடவடிக்கைகளில் தெரிந்தது.

குறித்த அழைப்பினால் பதற்றமடைந்து பயந்திருந்த சிறுமி பின் ஜன்னலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் ஏறி கீழே குதித்து விட்டார்“ என குறித்த சந்தேக நபர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply