காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை (12) வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தான் பணியாற்றும் மருந்தகத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றபோதே காணாமல்போனதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கெலிஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயிடம் பஸ்ஸுக்கு நூறு ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பணி புரியும் இடத்துக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன யுவதியை கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மகாவலி கங்கை ஓடைகள் உட்பட காடுகளிலும் தேடி வந்த நிலையில், இன்று அங்குள்ள வயல் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply