மும்பை, மகன் ஆர்யன்கானை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடேவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி விசாரணை நடத்தினர்.

ஷாருக்கான் மகன் கைது

மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி புறப்பட்டு சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை தொடர்ந்து மறுநாள் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (வயது 25) உள்ளிட்டவர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் 3 வாரங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றமற்றவர் என கூறப்பட்டு இருந்தது.

ரூ.25 கோடி லஞ்சம்

இதற்கிடையே ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அப்போதைய மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 11-ந் தேதி சி.பி.ஐ. அதிரடியாக வழக்குப்பதிவு செய்தது.

சமீர் வான்கடே இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி ஆவார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டார்.

விசாரணைக்கு ஆஜர்

இந்த நிலையில் சி.பி.ஐ. வழக்குக்கு எதிராக சமீர்வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நாளை (திங்கட்கிழமை) வரை சமீர் வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு தடை விதித்தது.

இதற்கு மத்தியில் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அனுப்பிய சம்மனின் பேரில் நேற்று சமீர்வான்கடே விசாரணைக்கு ஆஜரானார்.

அவர் காலை 10.15 மணியளவில் விசாரணைக்காக மும்பை பி.கே.சி.யில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார்.

விசாரணைக்கு செல்லும் முன் வெளியில் இருந்த பத்திரிகையாளர்களிடம் ‘வாய்மையே வெல்லும்’ என கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார்.

5 மணி நேரம் அதிரடி விசாரணை அவரிடம் டெல்லியில் இருந்து வந்த 10 சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் ஆர்யன்கானை பிடித்தது, ஷாருக்கானிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சமீர் வான்கடேயிடம் கேள்விகளை அடுக்கினர்.

மதியம் 2 மணியளவில் அவருக்கு மதிய உணவு சாப்பிட அதிகாரிகள் ½ மணி நேரம் வழங்கினர்.

பின்னர் மீண்டும் அவர் விசாரணைக்கு திரும்பினார். மாலை 4.30 மணி வரை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் சமீர் வான்கடே வெளியே வந்தார்.லஞ்ச வழக்கில் ஐ.ஆர்.எஸ். உயர் அதிகாரி ஒருவரிடம் சி.பி.ஐ. 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share.
Leave A Reply