மே 18, விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன.
ஆனால், இன்றும் உரிமைகளுக்காக இலங்கையில் தமிழ் மக்கள் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.
ஏனெனில், போர் முடிவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் இதயசுத்தியுடன் செயல்பட்டு, மூன்று தசாப்த கால போருக்கு காரணமான தமிழர்களின் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முற்படவில்லை.
அதனால்தான் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கை தமிழர்களின் உரிமை குறித்து இன்றும் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் அரசியல் தரப்புகளை அழைத்து அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளானது உண்மையில் அரசியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையான தீர்வுகளை வழங்கும் வகையில் நகர்த்தப்படுமா என்ற ஐயப்பாடு எப்போதும் உள்ளது.
ஏனெனில், கடந்த கால அனுபவங்களை எடுத்துக்கொண்டால், இவ்வாறு தமிழ் அரசியல் தரப்புகள் அல்லது அனைத்து அரசியல் கட்சிகளை அழைத்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளும் அதனூடாக வழங்கப்பட்ட இறுதி தீர்வுத் திட்டங்களும் இன்றளவில் மௌனிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போரின் இறுதித் தருணங்கள் குறித்து சர்வதேசத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், 2010ஆம் ஆண்டு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் என்ற ஆணைக்குழுவை ஸ்தாபித்து, விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
இந்த ஆணைக்குழுவானது வடக்கு, கிழக்கு மற்றும் தலைநகர் கொழும்பு என அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல்வேறு தரப்புகளிடம் பகிரங்கமாக விசாரணைகளை மேற்கொண்டு சாட்சிகளை பதிவு செய்தது.
விசாரணைகளின் இறுதியில் பெறப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு வெளியிட்ட அறிக்கையில் 285 பரிந்துரைகளை முன்வைத்தது.
இவை அனைத்துமே அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியதாகவே அமைந்தது. குறிப்பாக, காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் குறித்து தெளிவான சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன், அந்த சாட்சிகளை கவனத்தில் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என்பதை ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், நல்லிணக்க முயற்சிக்கு இது முன்நிபந்தனை எனவும் வலியுறுத்தியிருந்தது.
ஆனால், இன்று வரை காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் குறித்து எவ்விதமான பொறுப்புக்கூறல்களும் இல்லை. ஆணைக்குழுவை ஸ்தாபித்த மஹிந்த ராஜபக்ஷ கூட தனது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத நிலையே ஏற்பட்டது.
மற்றுமொரு விடயமாக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி மாநாட்டை ஒன்றுகூட்டி, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நீண்ட பேச்சுவார்த்தைகளை மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாதிபதியாக முன்னெடுத்திருந்தார்.
இதிலும் 13 அரசியலமைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஏனைய அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்காக அந்த சந்தர்ப்பத்தில் முன்வைத்த தீர்வுத் திட்ட யோசனையை நடைமுறைப்படுத்தவில்லை.
மாறாக, புதிய கோணத்தில் 13 பிளஸ் என்ற பிரசாரத்தை மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியின் முடிவு வரை முன்னெடுத்திருந்தார். எனவே, பேச்சுவார்த்தைகள், தீர்வுத்திட்டங்கள் என்று தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்களே தவிர, எந்தவொரு பலனையும் அடையவில்லை.
இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையை உற்று அவதானித்தால், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளான ‘தேசியம், சுயநிர்ணயம்‘ என்பதற்கும், பெரும்பான்மைப் பலம் கொண்ட சிங்கள-பௌத்தர்களின் அரசியலுக்கும் இடையிலான இடைவெளியில் இனப்பிரச்சினை உருப்பெற்றுள்ளது.
இலங்கை மொத்தமும் சிங்கள-பௌத்த நாடு என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை கடந்த கால வரலாறு தெளிவாக உணர்த்தியுள்ளது. அதே போன்று,
இலங்கையில் தமிழர்கள் தனித்த தேசம் என்பதையும், இலங்கையின் குறித்ததொரு பகுதி, தமிழ் மக்களின் தாயகம் என்பதையும், அத்தகைய தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையும் வரலாறு தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்கள், இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம், அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழ் மக்கள் தம்முடைய தாய்மண்ணிலேயே இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதை ஏற்றுக்கொண்டதற்குச் சமனாக அது அமைந்துவிடும்.
எனவே, தமிழர்களுக்கு அளிக்கப்படும் எந்தத் தீர்வும் நாட்டைத் துண்டாடிவிடும் என்ற மாயையை காட்டி, பேரினவாத அரசியல் தலைமைகள், சிங்கள மக்களின் மனங்களில் ஆழமான அச்சத்தை விதைத்துவிட்டுள்ளார்கள்.
இவை இவ்வாறிருக்கும் பட்சத்தில், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது உண்மையில் சாத்தியமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும்.
உலகில் உள்ள இன, மதப் பிரச்சினைகளோடு ஒப்பிடும்போது, இலங்கையின் இனப்பிரச்சினை என்பது சிக்கலானதொரு பிரச்சினையே இல்லை.
தேசிய இனப்பிரச்சினையானது, குறைந்தது இரண்டு, அதிகபட்சம் மூன்று மக்கள் இனங்களுக்கிடையேயான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம் இலகுவில் தீர்த்துவிடக்கூடிய ஒன்றாகும்.
ஆனால், இனப்பிரச்சினையில் குளிர் காய்வதில் இருதரப்பு அரசியல்வாதிகளும் தம்முடைய அரசியலை இன முரண்பாட்டை முன்னிறுத்தி, தத்தம் இன நலன்களின் அடிப்படையில், இன ரீதியாக பிளவுற்றுள்ள வாக்குவங்கிகளிடம், வாக்கு வேட்டை நடத்தும் அரசியலை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலைமையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் அரசியல் தரப்புகளை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதுவரையில் ஜனாதிபதி ரணிலுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் வெளிப்பாடாக இரு விடயங்கள் அரச தரப்பால் கூறப்படுகின்றன.
அதாவது முதலாவது தினத்தில் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்பொன்றில், தமிழ் தரப்புகளுடனான கலந்துரையாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் தரப்புகளிடையே ஒற்றுமை இல்லை என்ற விடயத்தை இதன்போது முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மற்றுமொரு விடயமாக தேர்தலொன்றை பெற்றுக்கொள்ள முன்னிற்பதாகவும் கலந்துரையாடலின்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, தேர்தல் ஒன்று தேவையாயின், பாராளுமன்றத்தில் இடம்பெறக்கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்து, தீர்மானிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது தேர்தலை மையப்படுத்தி நகர்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.
மறுபுறம், வரலாற்றில் ஏமாற்றப்பட்டதை போன்று அரசியல் தலைமைகளால் தமிழ் மக்கள் மீண்டும் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் ஏமாற்றப்படுகின்றனரா என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
(லியோ நிரோஷ தர்ஷன்)