இராணுவ ஆயுதப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப், நாரஹேன்பிட்டியவில் வைத்து 2005 ஒக்டோபர் 29ஆம் திகதியன்று சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டார்.

முத்தலிப்பை படுகொலைச் செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் ​கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்ட நபரே ஐ.டப்ளியு சஞ்ஜீவ (வயது 54) என்பவராவார்.

இவர் ஒரு வர்த்தகர் ஆவார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், ரி-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி, பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில், ரயில் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து, சனிக்கிழமை (20) இவரை சுட்டுக்கொன்றனர்.

இவர், களனி கல்பொரளே விஹாரமஹதேவி மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.

சம்பவதினமான சனிக்கிழமை (20) களனியிலுள்ள தன்னுடைய வீட்டில் இருந்து மகளுடன் மோட்டார் சைக்கிளில் பொரளை வீட்டுக்கு வந்து, தன்னுடைய தாயின் வீட்டுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவரில் ஒருவர், அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.

அவர் மீது 27 தடவைகள் சுடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கீழே விழுந்ததன் பின்னரும் துப்பாக்கிதாரி அவர் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தன்னுடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இவர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் கொழும்பு புலனாய்வாளர் என குற்றச்சாட்டப்பட்டிருந்த நபராவார்.

அவர், லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிபை படுகொலைச் செய்வதற்கு தரவுகளைத் திரட்டி உதவி ஒத்தாசை நல்கியவர் என்பதுடன், சுமார் 5 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நபர் ஆவார்.

அதன்பின்னர் இந்த நபர், சுத்திகரிப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரில் பெரும்பாலானவர்கள் பொரளை பிரதேசத்திலேயே தங்கியிருக்கின்றனர்.

அவர்களுக்கு நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சேவை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கும் அவர், களனியிலிருந்து பொரளைக்கு ஒவ்வொருநாளும் மோட்டார் சைக்கிளில் வருகைதருவார்.

அவருடைய வர்த்தக நண்பர்கள், அவருக்கு நிதி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தீர்ப்பு இன்னும் சில தினங்களுக்கு வழங்கப்படவிருக்கும் நிலையிலேயே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி நன்கு பயிற்சி பெற்றவர் என்று தெரிவித்த பொலிஸார், ஒப்பந்த அடிப்படையில் இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply