முதலாம் உலகப் போரைப் பொறுத்தவரை முதலாம் Ypres யுத்தம் என்பது மிக முக்கியமானது. போர் என்பது எவ்வளவு அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தமாக உணர்த்திய யுத்தம் அது.

முதலாம் உலகப்போரில் எதிரெதிர்த் தரப்பினரின் சார்பு நிலைக்கான காரணங்களை முன்பு பார்த்தோம். இப்போது அவர்களின் ராணுவ பலம் மற்றும் பலவீனம் எப்படி இருந்தது என்று பார்ப்போமா?

ஜெர்மானிய ராணுவம் மிகச்சிறந்ததாக இருந்தது. மெஷின் கன்கள் அவர்களிடம் நிறைய இருந்தன. நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார்கள் அவர்கள். ஜெர்மனியில் ரயில் போக்குவரத்து மிகச்சிறப்பாக இருந்தது.

இதனால் போருக்கான ஆயுதங்களையும், ராணுவத்தினருக்கான உணவு வகைகளையும் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர்களுக்குச் சிக்கல் இல்லை.

ஜெர்மனியின் தோழனாக விளங்கிய ஆஸ்திரியா – ஹங்கேரியின் ராணுவம் எண்ணிக்கையிலும் தரத்திலும் ஜெர்மனி ராணுவத்தை விடக் குறைவாக இருந்தது. தவிரப் பலவித நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் இடம்பெற்றிருந்தால் ஒட்டுமொத்த தேசபக்தி என்பது குறைவாகவே இருந்தது.

ரயிலில் போருக்குச் செல்லும் ஜெர்மனிய வீரர்கள்

எதிரளவில் இருந்த பிரான்ஸ் ராணுவம் ஜெர்மனியை விட ராணுவத் தளவாடங்களின் எண்ணிக்கையில் கொஞ்சம்தான் குறைவாக இருந்தது.

மற்ற பல நாடுகளைப்போலவே பிரான்ஸும் இந்தப் போர் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்று எண்ணியது.

ரஷ்யாவில் ராணுவ வீரர்களுக்குப் பஞ்சமே இல்லை. தவிர ரஷ்ய ராணுவ வீரரின் தைரியம் என்பது உலகப் புகழ்பெற்ற விஷயம். ஆனாலும் தலைமை சரியில்லை.

திறமைக்குறைவான தலைவர்கள். லஞ்ச ஊழலில் வேறு ஈடுபட்டிருந்தார்கள். தொழில் உற்பத்தி குறைவாக இருந்தது. நவீன போர் ஆயுதங்களை ரஷ்யர்கள் அறிந்திருக்கவில்லை. போதாக்குறைக்குப் பிறகூட்டு நாடுகளிடமிருந்து புவியியல் ரீதியாகத் தள்ளி அமைந்திருந்தது ரஷ்யா.

பிரிட்டிஷ் ராணுவத்தினரின் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருந்தது. தான் குடியேறி ஆட்சியமைத்த பிற நாடுகள் தனக்கு ஆதரவாக இருக்கும் என்று கணக்குப்போட்டது பிரிட்டன்.

**********

முதலாம் உலகப் போரைப் பொறுத்தவரை முதலாம் Ypres யுத்தம் என்பது மிக முக்கியமானது. போர் என்பது எவ்வளவு அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தமாக உணர்த்திய யுத்தம் அது.

மேற்கு பெல்ஜியத்தில் உள்ள ஒரு சிறு நகரம் Ypres (‘ஈப்பர்’ என்ற உச்சரிப்பு). அங்கு நடந்ததால் இந்தப் போருக்கு Ypres போர் என்று பெயரிடப்பட்டது. (Ypres உள்ள பரந்த நிலப்பகுதியை பிளாண்டர்ஸ் என்றும் கூறுவார்கள். எனவே இந்த போரை பிளாண்டர் போர் என்று கூறுபவர்களும் உண்டு).

பதுங்கு குழியில் ஜெர்மன் வீரர்கள்

Ypres இருதரப்பினருக்கும் மிக முக்கியமான ஒரு நகரமாக இருந்தது. காரணம் இதை இந்த நகரம் இரு முக்கியமான பிரான்ஸ் துறைமுகங்களுக்குக் கோட்டை போல் அமைந்திருந்தது.

இந்தத் துறைமுகங்கள் ஜெர்மனி வசம் சென்றுவிட்டால் நேசநாடுகளுக்குச் செல்லும் யுத்த தளவாடங்களுக்கான போக்குவரத்து நின்றுவிடும். ஆக, இதைக் கடலுக்கான போர் என்றும் கூறலாம்.

Ypres-ஐ தன் வசம் கொண்டு வந்துவிட்டால் ஜெர்மன் ராணுவத்துக்கு வேறொரு விதத்திலும் வசதி. பெல்ஜியத்தின் (பிரான்ஸை அடையக்கூடிய) பிற பகுதிகள் நிறைய மேடு பள்ளங்கள் கொண்டவை. Ypres சமதளத்தில் அமைந்த பகுதி. எனவே அதன் மூலமாக பிரான்ஸை அடைவதும் போரிடுவதும் எளிது.

இந்தப் போரில் இருதரப்பு ராணுவ வீரர்களும் குழிகள் வெட்டி அவற்றில் பதுங்கிக் கொண்டபடி போரிட்டார்கள். அவர்கள் அங்கே எலிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது! தவிர நோய்களும் அவர்களைப் பெரும் அளவில் வாட்டிக் கொண்டிருந்தன.

அக்டோபர் 25 அன்று பெல்ஜியத்தின் மன்னர் ஆல்பர்ட் ஜெர்மனியர்களை உள்ளே வரவிடாமல் செய்வதற்கு ஒரு துணிகரமான முடிவை எடுத்தார்.

அங்குள்ள கால்வாய்களைத் திறக்க வைத்தார். அந்த தண்ணீர் வெளியேறிய பிறகு மீண்டும் கால்வாய்க்குள் அதை வரவிடாமல் மூட வைத்தார். இதனால் ஜெர்மனிய போர் வீரர்கள் தங்கிய இடங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக அவர்களால் முன்னேற முடியாமல் போனது. பின் வாங்கினார்கள்.

பதுங்கு குழி

அதேசமயம் Ypres நகரின் தென் கிழக்குப் பகுதியில் ஜெர்மன் ராணுவம் வேகமாக முன்னேறியது. பிரான்சிலிருந்து பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்ட ராணுவம் அங்கே அவர்களைத் தடுத்து நின்றது.

ஜெர்மனிய ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் தங்க வேண்டிய கட்டாயம். குளிர் நடுக்கம் வேறு. இந்த நிலையில் சில நாள்கள் இருந்த ஜெர்மனிய ராணுவம் இப்படிக் காத்திருப்பதை விட, Ypres மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து விடலாம் என்று முடிவெடுத்தது.

நவம்பர் 11 அன்று குண்டு வீச்சுகளை நிகழ்த்தியபடியே ஜெர்மனிய ராணுவம் முன்னேறத் தொடங்கியது.

ஆனால் எதிரிப் படைகள் வெகு வேகமாகத் தாக்கவே மீண்டும் பின்னேற வேண்டிய கட்டாயம். பின்னர் கடும் குளிர் காரணமாக, திறந்த வெளியில் போரிடுவது ராணுவ வீரர்களுக்கு அசாத்தியமானது.

எனவே இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டிய கட்டாயம் உண்டானது. பின்னொரு காலகட்டத்திலும் (ஏப்ரல் 1915ல்) முதலாம் உலகப் போர் தொடர்பாக Ypres-இல் மற்றொரு போர் நிகழ்ந்தது என்பதால் மேற்படி யுத்தத்தை முதலாம் Ypres போர் என்று வர்ணித்தார்கள்.


Ypres போரில் மரணித்த வீரர்கள்

முதலாம் Ypres போரில் சுமார் 8,000 பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். பலருக்குக் கடும் காயங்கள். சுமார் 18,000 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. ஜெர்மனி தரப்பில் சுமார் 19,000 பேர் இறந்து விட, 31,000 ராணுவ வீரர்களின் நிலை குறிப்பிடாமல் போனது.

அனுபவம் வாய்ந்த பிரிட்டிஷ் ராணுவம் நிலைகுலைந்து போனது என்பது கசப்பான உண்மை. எதிரிகளின் பலத்தை உணர்ந்து அதற்குப் பிறகு பிரிட்டன் தனது ராணுவத்தை மிகவும் பலப்படுத்திக் கொண்டது. தனது காலனி நாடுகளின் ராணுவ வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

– போர் மூளும்…

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நடுநிலை வகித்த பெல்ஜியத்தை ஆக்கிரமித்த அடாவடி ஜெர்மனி; என்ன காரணம்?
Share.
Leave A Reply