தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“…எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் டெலோ, புளொட் அமைப்புகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசும் போதே, சம்பந்தர் மேற்கண்ட கருத்தை கூறியிருக்கின்றார்.

கடந்த பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாள்களிலேயே ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தரப்புகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைகளில் ஒன்றிரண்டைத் தவிர வேறெதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த டெலோவும், புளொட்டும் விலகின. ஆரம்பத்திலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுகளைப் புறக்கணித்துவிட்டது.

இந்தநிலையில், சி.வி விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசிய கூட்டணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் மாத்திரமே பேச்சுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தன.

ஆனால், கடந்த வாரம், தமிழரசுக் கட்சியும், முன்னேற்றம் அற்ற பேச்சுகளில் தொடர்ந்தும் பங்களிப்பதால் பயனில்லை என்று விரத்தியோடு அறிவித்திருக்கிறது.

இப்போது, ரணிலோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவரின் அரசியல் திட்டங்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விக்னேஸ்வரன் என்கிற ஒற்றை மனிதர் மாத்திரமே தமிழ்ப் பரப்பில் இருக்கிறார்.

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில், அதன் பாரம்பரிய விழுமியங்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்திருக்கிறார்.

அவருக்கு தேர்தல், வாக்கு அரசியலுக்கு அப்பாலான எந்தப் போராட்ட வடிவங்களின் மீதும் பற்றில்லை.

தமிழ் மக்களின் ஆயுத முனைப் போராட்டத்தை அவர், உள்ளூர வெறுத்தார். அரசியல் சூழலால், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குள் இயங்கிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த போதிலும் கூட, அவர் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தார்.

எந்த அரசியல் முனைப்பும் பேச்சுவார்த்தை என்ற வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியது என்று இன்றும் நம்பியிருக்கும் சம்பந்தன், அரசியலில் 50 ஆண்டுகளைத் தாண்டிய அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.

அந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தோடும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடனும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பேச்சுவார்த்தைகளிலாவது பங்கெடுத்திருப்பார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் பரிமாறப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள், இணக்கப்பாடுகள் தொடர்பில் அவர் அதிக தடவை நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், தானும் அரசாங்கத்தின் ஒரு பங்காளிபோலவே சம்பந்தன் இயங்கினார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

அதனால், அவர் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, பொங்கலுக்குள் தீர்வு என்று தொடர்ந்தும் கூறி வந்தார்.

அத்தோடு, எந்தளவு விட்டுக்கொடுப்பைச் செய்தாவது, தீர்வு என்ற பெயரில் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்று முயன்றார். ஆனால், சம்பந்தனின் எந்த முயற்சியையும் நல்லாட்சித் தரப்போ, தென் இலங்கையோ கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் ஏறினார்கள். அப்போதும், ராஜபக்‌ஷர்களோடு பேச்சுவார்த்தைக்கு அவர் சென்றார்.

இப்போது, ரணில் வந்தபின்னரும், பல சுற்றுப் பேச்சுகளில் அவர் பங்கெடுத்திருக்கிறார். என்றைக்கும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிப்பது தொடர்பில் அவர் பேச்சே எடுப்பதில்லை.

ஆனால், கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதில் பலனில்லை என்ற அறிவிப்பை விடுக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், அவர் எவ்வாறான ஏமாற்றத்தை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

புறக்கணிப்பு என்ற வார்த்தையை சம்பந்தன் பல நேரங்களில் ஆயுத முனைப் போராட்டங்களுக்கு ஒப்பான ஒன்றாகவே கருதியும் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்.

புறக்கணிப்புக் கோசத்தோடு களத்தில் இருப்பவர்களை, தீண்டத்தகாதவர்கள் மாதிரி சம்பந்தன் நடத்தியிருக்கின்றார். இன்றைக்கு அவரே, பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்.

ரணிலின் அடுத்த அரசியல் இலக்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது மாத்திரமே! அதற்காக யாரின் காலில் விழவும், காலை வாரவும் ரணில் தயாராக இருக்கிறார்.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்புடனான பேச்சுவார்த்தையை தமிழ் மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான கருவியாகக் கையாள்வதற்காக மாத்திரமே கையாள்கிறார்.

ஏனெனில், அந்தப் பேச்சுகளில் காணப்படும் இணக்கப்பாடுகளை நிறைவேற்றினால், தென்இலங்கையின் பேரினவாத சக்திகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும். அது, தன்னுடைய அடுத்த தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்பது ரணிலுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால், தமிழ்த் தரப்பையும் வெளிநாடுகளையும் சமாளிப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற ஓர் அம்பை ஏவியிருக்கின்றார். அந்த அம்பை, விக்னேஸ்வரன் ஏந்திக் கொண்டிருக்கவும் செய்திருக்கிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதையும் இப்போதைக்கு நடத்துவதற்கு ரணில் தயாராக இல்லை.

அதனை, அவர் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் அறிவித்திருக்கிறார். அதற்கு மாற்றாக, மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற விடயத்தை அவர் எடுத்திருக்கின்றார்.

அதுதான், சம்பந்தனை அதிகம் கோபம் கொள்ள வைத்திருக்கின்றது. அதற்காக, விக்னேஸ்வரனை ரணில் கூட்டுச் சேர்த்திருக்கின்ற விடயம், சம்பந்தனை எரிச்சல்படுத்தி இருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பவர்களில், இன்றைக்கு விக்னேஸ்வரன் மாத்திரமே கண்களை மூடிக்கொண்டு ரணிலை விசுவாசிக்கிறார். ரணிலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தது முதல், ரணிலின் திட்டங்களை வடக்கில் காவி வரும் ஒருவராக அவர் செயற்படுகிறார்.

விக்னேஸ்வரன் என்றைக்குமே தன்னுடைய கட்சிக்காரர்களிடமோ, அவரது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடமோ எந்தவித ஆலோசனைகளையும் செய்வதில்லை. மாறாக, அவருக்கு கொழும்பில் இருக்கும் மூத்த சட்டத்தரணிகள் சிலர் வழங்கும் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு மாத்திரமே செயற்படுகிறார்.

அவர்கள் இன்றைக்கு ரணிலை ஆதரிக்கும்படி வழங்கிய ஆலோசனைகளை சிரமேற்று, ரணிலின் ஏவலாளி போல விக்னேஸ்வரன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்.

அதனால்தான், தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் நிராகரித்துவிட்ட மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற விடயத்தை, வடக்கில் சந்தைப்படுத்தும் வேலைகளில் அவர் ஈடுபடுகின்றார்.

தமிழ் மக்களுக்கான தீர்வை எந்தளவுக்கு கீழிறங்கியாவது பெற வேண்டும் என்பதற்காக நல்லாட்சிக் காலத்தில், சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும் ‘ஏக்கிய இராஜ்ஜிய’ விடயத்தை ‘ஒருங்கிணைத்தை நாட்டுக்குள்’ என்று வியாக்கியானப்படுத்தி, தமிழ் மக்களிடம் சந்தைப்படுத்தி வந்தார்கள்.

அவர்களாவது, அரசியலமைப்புக்கு ஊடாக ஏதாவது அதிகாரங்களைப் பகிரும் விடயங்களை உள்ளடக்கலாம் என்ற நோக்கில் இயங்கினார்கள்.

ஆனால்,விக்னேஸ்வரன் இடைக்கால நிர்வாக சபை என்ற ஏதுமற்ற ஒன்றை காவி வருகிறார் என்பதை, என்ன அரசியலாக புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

ஆட்சிக்கு வரும் தென் இலங்கையின் எந்தத் தலைவரும் தமிழ்த் தரப்புகளுடன் சம்பிரதாயபூர்வமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள்.

அப்போது, தமிழ்த் தலைவர்களும் தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைகள் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டுவிடும்.

மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும், அப்போதும் கோரிக்கைகளை தமிழ்த் தரப்பு முன்வைக்கும். மீண்டும் அவை குப்பைக்கூடைக்குள் வீசப்படும். இதுதான் வரலாறு.

ரணிலோடும் தமிழ்த் தரப்புகள் பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், ரணிலும் ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கு வரும் போதும், கோரிக்கைகளை புதிதாக கேட்பது போல காட்டிக் கொள்கிறார்.

கடந்த பேச்சுவார்த்தையின் போதும் அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார். அதுவெல்லாம் சேர்த்துதான் சம்பந்தனை எரிச்சல்படுத்தி இருக்கின்றது; இனி பேச்சுவார்த்தைகளின் கலந்து கொள்வதில் பயனில்லை என்று அறிவிக்கவும் வைத்திருக்கின்றது.

சம்பந்தனின் ஏமாற்றம் புதிதில்லை. தமிழ் மக்களுக்கு நூற்றாண்டுகளாக பழக்கப்பட்ட ஒன்றுதான்! அந்தப் புரிதலோடு இருந்தால் போதும். அந்தப் புரிதல், தேவையற்ற போலி நம்பிக்கைகளை தென்இலங்கை ஆட்சியாளர்கள் மீது வளர்த்துக் கொள்வதைத் தடுக்க உதவியாக இருக்கும்.

-புருஜோத்தமன் தங்கமயில்

 

Share.
Leave A Reply