கனடாவின் மொனிடோபா மாகாணத்தில் பெரும்பாலும் வயதானவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று ட்ரக் வண்டியில் மோதிய பயங்கர விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கார்பரியில் உள்ள ட்ரான்ஸ் கனடா அதிவேகப் பாதையில் கடந்த வியாழக்கிழமை (15) இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அவசரப் பிரிவினர் மற்றும் விமான அம்புலன்ஸ்கள் விரைந்தன.

இரு பிரதான பாதைகள் சந்திக்கும் இடத்திலேயே விபத்து நேர்ந்துள்ளது. பஸ்ஸில் இருந்த பயணிகள் கர்பர்ரியில் உள்ள கசினோ ஒன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இரு வண்டிகளினதும் ஓட்டுநர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நண்பகலில் பள்ளத்தில் வாகனம் ஒன்று எரிவதைக் கண்டாதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் சி.பி.சி செய்திக்கு தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவலறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். மொனிடோபாவில் இருந்து வரும் செய்தி நம்பமுடியாத துயரமானது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்டை மாகாணமான சஸ்கட்ச்வானில் கடந்த 2018 ஏப்ரலில் கிராமப்புற வீதி ஒன்றில் கனிஷ்ட ஹொக்கி அணி பயணித்த பஸ் மீது ட்ரக் வண்டி மோதிய விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 2019இல் ட்ரக் வண்டி ஓட்டுநருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கனடாவின் மிக மோசமான வீதி விபத்து 1997 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது கியுபக் மாகாணத்தில் பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply