ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த மாணவனின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் விடுதியில் இன்று (16) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
23 வயதுடைய ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, விக்னேஸ்வரன் அபிநஜன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் வைத்தே குறித்த மாணவன் தூக்கில் தொங்கியுள்ளார்.
விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்துபோது இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கூடிய ஏனைய மாணவர்கள், தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட மாணவன் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும், மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறியும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.
சடலத்தின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், விசாரணைகள் முன்னெடக்கப்பட்டு வருகின்றன.