மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு ஒரு வீட்டில் கொலை-கொள்ளை நடந்தது. 55 வயது நபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவினாஷ் பவார் (வயது 19) என்ற நபர் தலைமறைவாகிவிட்டார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவரோ போலீசின் கண்களில் சிக்கவில்லை. வெளியூர் சென்று பெயரை மாற்றி தன்னைப்பற்றிய ரகசியங்களை மறைத்து வைத்திருந்த அவர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாயாலேயே உளறிக்கொட்டி போலீசில் சிக்கியிருக்கிறார்.
லோனாவாலாவில் கொள்ளையடித்த பின்னர் டெல்லிக்கு தப்பிச் சென்ற அவினாஷ் பவார், அங்கிருந்து அவுரங்காபாத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு பெயரை மாற்றி அமித் பவார் என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளார். அங்கிருந்து பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் அகமதுநகர் சென்ற அவர், கடைசியாக மும்பை வந்து விக்ரோலியில் செட்டில் ஆகியுள்ளார்.
திருமணம் செய்து அவரது மனைவியை அரசியலில் ஈடுபடுத்தி சிறந்த அரசியல் வாழ்க்கையையும் உறுதி செய்திருக்கிறார்.
மும்பையில் இருந்தாலும் ஒருமுறைகூட லோனாவாலாவுக்கு செல்லவில்லை. தன் தாயாரையோ, மனைவியின் பெற்றோரையோ சந்திக்கவில்லை.
இதனால் கொலை வழக்கில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிட்டதாக அவினாஷ் பவார் நினைத்திருந்தார்.
ஆனால் அவரது கடந்த சில தினங்களுக்கு முன், தனது பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் பழைய சம்பவத்தை உளவிட்டார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு கொலை கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவிக்க.. இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து அவரை கண்காணித்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராஜ் திலக் ரோஷன் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கு முன்பு லோனாவாலாவில் நடந்த இரட்டைக் கொலையில் அவினாஷ் பவார் குற்றவாளி. கொலை செய்யப்பட்டவர்கள் வயதான தம்பதிகள்.
அவர்களின் வீட்டிற்கு அருகில் அவினாஷ் பவார் கடை வைத்திருந்ததால் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
தன்னுடன் மேலும் இரு நபர்களை சேர்த்து, அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தின்போது தம்பதியரை கொன்றுள்ளார்.
மற்ற இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பவார் தப்பி ஓடி தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
தற்போது விக்ரோலியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.